Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தேனி அரசு மருத்துவமனையில் பார்க்கிங் அவலம்.!

மருத்துவமனை பார்க்கிங்

தேனி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரிக்குத் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்துசெல்கிறார்கள். நாமும் அங்கே சென்றிருந்தோம். மருத்துவமனை வளாகத்திற்குள் நுழைந்ததும், நான்குபேர் நாம் சென்ற வண்டியின்முன் பாய்ந்து வண்டியை நிறுத்தி, நம் கையில் பார்க்கிங் ரசீதை திணித்து, "ஐந்து ரூபாய் எடுங்க" என்றனர். அரசு மருத்துவமனைக்குள் நுழைய எதற்குக் காசு என்ற யோசனையோடு ஐந்து ரூபாயை கொடுத்துவிட்டு உள்ளே சென்றோம்.

அங்கு இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் என்று எழுதப்பட்ட அறிவிப்புப் பலகை இருந்தது. ஆனால், இருசக்கர வாகனத்தைத் தவிர ஆம்புலன்ஸ் உட்பட எல்லாவகையான வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. வண்டியை நிறுத்திவிட்டு புறநோயாளிகள் பிரிவிற்குச் சென்றால், அங்கே நீலநிற உடையில், தலையில் தொப்பியோடு, கையில் கம்பு வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வருபவர்களை, "அந்தப்பக்கம் போங்க, இங்க வண்டிய நிறுத்தக்கூடாது" என்று வண்டியில் வருபவர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஒருவர். அவரிடம் மெதுவாகப் பேச்சுக்கொடுத்தோம்.

மருத்துவமனை பார்க்கிங்

"இந்த வண்டிகளை நேராக வாசலில் வந்து நிறுத்திவிட்டுச் சென்று விடுகிறார்கள். ஒரு ஆம்புலன்ஸ் வந்துபோக முடியவில்லை. தினமும் எங்களுக்குப் பெரிய தலைவலியா இருக்கு. பார்க்கிங்கை லீசுக்கு எடுத்தவங்க, வண்டிய நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கிக் கொடுப்பதை விட்டுட்டு திறந்தவெளி பார்க்கிங் என்று கூறி, மருத்துவமனை வளாகத்தில் எங்குவேண்டுமானாலும் வண்டியை நிறுத்தலாம் என்று சொல்லி, ஐந்து ரூபாயை வாங்கிக்கொள்கிறார்கள். அதற்கு ஏன் ஐந்து ரூபாய் கட்டணம் என்று தெரியவில்லை. கார் கொண்டுவந்தால் பத்து ரூபாய் வசூலிக்கிறார்கள். அதோபாருங்க, அதுதான் அவசர வழி. ஆனால், அதை அடைத்துவிட்டு அங்கே கார் நிறுத்திவைக்க அனுமதித்திருக்கிறார்கள். இந்த அவசர வழியை எந்த ஆம்புலன்ஸ் வாகனமும் பயன்படுத்துவதில்லை. மெயின்கேட் வழியாகத்தான் வருகிறார்கள். அப்படி வந்தால், பாதையில் கடை வைத்திருக்கிறார்கள். அதையும் தாண்டி உள்ளே வந்தால் எங்கு பார்த்தாலும் இருசக்கரவாகனங்களாகவே இருக்கும். எல்லாவற்றையும் கடந்து ஆம்புலன்ஸ் உள்ளே வருவதற்கு மிகப்பெரிய போராட்டமே நடத்தவேண்டியுள்ளது" என்றார் ஆதங்கத்தோடு.

கார்கள் பார்க்கிங்

மருத்துவமனையைச் சுற்றிவந்தோம். பெரும்பாலான இடங்களில் 'நோ பார்க்கிங்' என்ற அறிவிப்புப் பலகையும், அதனருகிலேயே வாகனங்களும் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. பிரதான நுழைவாயிலின் இருபுறமும், கூல் ஸ்டிரிங்ஸ் கடைகள், பழக்கடைகள் போடப்பட்டுள்ளன. அந்தக் கடைகளில் எப்போதும் நின்றுகொண்டிருக்கும் கூட்டத்தை மீறி ஆம்புலன்ஸ் உள்ளே நுழைவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை. மேலும், ஆயிரக்கணக்கான மக்கள், அதுவும் குறிப்பாக நோயாளிகள் வந்துசெல்லும் இடத்தில், ஒரு போக்குவரத்துக் காவலரையும் நம்மால் பார்க்க முடியவில்லை. வாகனங்கள் மெதுவாகச் செல்லவேண்டும் என்பதற்காக, சாலையில் போடப்பட்டிருக்கும் 'பேரிகாட்' சாலையைவிட்டுக் கீழே இறங்கிக் கிடப்பதைப் பார்க்கமுடிந்தது. அதிவேகத்தில் சாலையில் கடந்துசெல்லும் வாகனங்களால் அப்பகுதியில் பல விபத்துகள் நடப்பதாகக் கூறுகிறார்கள் அங்கு கடை வைத்திருப்பவர்கள்.

மருத்துவமனைக்கு வரும் மக்கள் சாலையைக் கடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாகவே மாறியுள்ளது. "பார்க்கிங் என்று சொல்லி மக்களுக்கும், நோயாளிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்துவது ஏன்.?", "பார்க்கிங் வசதி ஏற்படுத்த மருத்துவமனைக்குள் ஏராளமான இடம் இருந்தும், திறந்தவெளி பார்க்கிங் என்று சொல்லி தினமும் பல ஆயிரம் ரூபாய் கல்லா கட்டுவது ஏன்?" போன்ற கேள்விகளோடு மருத்துவமனை நிர்வாகத்தை அணுகினோம். பத்திரிகை என்றதும், பதில் கொடுக்க மறுத்து விட்டனர். தரமான மருத்துவம் என்ற போர்வைக்குள் ஒளிந்துகொண்டு இயன்றவரை மக்களிடம் கொள்ளை லாபம் பார்க்கும் சில தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியில், முன்னுதாரணமாக இருக்க வேண்டிய அரசு மருத்துவமனைக்குள் நுழைவதற்கே காசு கேட்கும் அவலம் தேனியில் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டுதான் உள்ளது. இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close