Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலத்தில் மீண்டும் களைகட்டிய சீசன்! அருவிகளில் தண்ணீர் அதிகரிப்பால் உற்சாகத்தில் பயணிகள்

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் மீண்டும் சீசன் களைகட்டத் தொடங்கி இருக்கிறது. அருவிகளில் கூடுதலாக தண்ணீர் கொட்டத் தொடங்கியிருப்பது சுற்றுலாப் பயணிகளை உற்சாகம் அடையச் செய்துள்ளது.

தென் மேற்குப் பருவமழைக் காலமான ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழையின் காரணமாக அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. மலையின் மீது உள்ள அரிய வகை மூலிகைகளைக் கடந்து அருவிகளுக்கு தண்ணீர் வருவதால், இங்கு குளிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அத்துடன், உயரத்தில் இருந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி நீரானது தலைமீது படும்போது இயற்கையான மசாஜ் செய்தது போன்ற நிலை உருவாவதால்  இதமான சீசனையும் உற்சாகக் குளியலையும் விரும்பி ஏராளமான பயணிகள் வருவது வழக்கம். 

இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் வழக்கம்போல் சீசன் தொடங்கியது. அதன் பின்னர், அருவிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் அளவுக்கு நிலைமை நீடித்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக மழை இல்லாததால் அருவிகளில் தண்ணீர் குறையத் தொடங்கியது. பழைய குற்றாலத்தில் பாறையை ஒட்டியபடி தண்ணீர் வழிந்ததால் பயணிகள் குளிக்க முடியாத நிலை உருவானது. அதேபோல, குழந்தைகள் விரும்பிக் குளிக்கும் புலி அருவியில் தண்ணீர் இல்லாததால், குடும்பத்துடன் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். 

மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றிலும் தண்ணீர் குறையத் தொடங்கியதால், சீசனை நம்பி கடைகளை ஏலம் எடுத்த வியாபாரிகள் வருத்தம் அடைந்தனர். பயணிகள் வராவிட்டால் இழப்பைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் வியாபாரிகள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த ஓரிரு தினங்களாக மழை பெய்து வருகிறது. அதனால், அருவிகளுக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 

சாரல் மழையும் தென்றல் காற்றும் வீசுவதுடன் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது. அத்துடன், அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்திருப்பது சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கச் செய்துள்ளது. மீண்டும் களைகட்டத் தொடங்கிய சீசன் காரணமாக குற்றாலத்தில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close