Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கமலுக்கு பி.ஜே.பி. கண்டனம் தெரிவிக்க என்ன காரணம்?

கமல்

ஜெயலலிதா மறைவுக்குப் பின் தமிழக அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்பதை, அவரைப் பிடிக்காதவர்களேகூட தெரிவித்து வருகிறார்கள். ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து, தி.மு.க தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவால், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நிலையில், உப்புச்சப்பு இல்லாத ஒரு நிலையிலேயே கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் தமிழ்த்திரையுலகின் 'சூப்பர்ஸ்டார்' ரஜினிகாந்த், கடந்த மே மாதம் தன் ரசிகர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். எட்டு ஆண்டுகளாக ரசிகர்களைச் சந்திக்காமல் இருந்த ரஜினி திடீரென்று ரசிகர்களைச் சந்தித்து, அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், "அனைவரும் போருக்குத் தயாராவோம்; தேவை ஏற்படும்போது களமிறங்குவோம். அதுவரை, நீங்கள் உங்கள் தொழிலைப் பாருங்கள்" என்று சூட்சமத்துடன் தெரிவித்து தன் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் புரியாத அரசியல் பீடிகையை போட்டார். மேலும், "நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் இருக்கிறது" என்று தனக்கே உரிய பாணியில் தெரிவித்தார்.

மே மாதத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், மீண்டும் அடுத்த ஓரிரு மாதங்களில் எஞ்சிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களைச் சந்தித்துப் பேசுவார் என்றும், தன் அரசியல் பிரவேசம் குறித்து தனக்கு நெருக்கமான அரசியல் தலைவர்களுடன் ரஜினி ஆலோசனை நடத்தி வருவதாகவும் பரவலாக தகவல்கள் வெளியாகின.

'ரஜினி அரசியலுக்கு எப்போ வருவார்? எப்படி வருவார்?' என்று தெரியாத நிலையில்தான், கமல் தான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்து விட்டதாகத் தெரிவித்து, தமிழ்நாட்டு அரசியல்வாதிகளையும், மக்களையும் தெறிக்க வைத்துள்ளார். இந்திமொழி திணிப்புக்கு எதிராக தன் கருத்தைத் தெரிவித்தபோதே அரசியலுக்கு வந்துவிட்டதாக அறிக்கை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

'தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது' என்று கூறியதும், அமைச்சர்கள் ஒவ்வொருவராக கமல்ஹாசனுக்கு எதிராக வரிந்து கட்டிக்கொண்டு தங்களின் கண்டனத்தைத் தெரிவித்தவண்ணம் உள்ளனர். போதாக்குறைக்கு 'ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக' தமிழ்நாடு பி.ஜே.பி தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும், அந்தக் கட்சியின் தேசியச் செயலாளர் எச். ராஜாவும் தங்கள் பங்குக்கு கமலை வசைமாறி பொழிந்துள்ளனர்.

கமல் அரசியலுக்கு வரவேண்டும் என்று தூண்டி விடுவதன் பின்னணியில் ரஜினிக்கு எதிரான சதி இருப்பதாகவே அ.தி.மு.க. நிர்வாகிகள் சிலர் தெரிவிக்கிறார்கள். பெயர்வெளியிட விரும்பாத அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகி ஒருவர் கூறுகையில், "கமல் அரசியலுக்கு வர வேண்டும். அப்போதுதான் அ.தி.மு.க. வாக்குகள் சிதறாது. ரஜினிகாந்த் தனிக்கட்சி தொடங்கி, பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைக்கும்பட்சத்தில், எதிர்காலத்தில் அக்கூட்டணி, தி.மு..க மற்றும் அ.தி.மு.க-வுக்கு வலுவான மாற்றாக இருக்கும். கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால், அவரை எதிர்த்து ரஜினி அரசியலுக்கு வராமல் தவிர்ப்பார். அல்லது குறைந்தபட்சம் இப்போதைக்கு புதுக்கட்சி தொடங்காமல், அரசியல் பிரவேசத்தை தள்ளியாவது போடுவார். எனவே, அரசியல் களத்தில் கமல் இறங்கினால், அது தி.மு.க-வுக்குத்தான் பாதிப்பாக அமையுமே தவிர, அ.தி.மு.க-வுக்கு அல்ல" என்றார்.

ரஜினியைப் பொறுத்தவரை வரும் டிசம்பர் மாதம் 12-ம் தேதி தன் பிறந்த நாளில் அரசியல் பிரவேசம் பற்றித் தெரிவிக்கலாம் என்று திட்டமிட்டிருந்தார். ஆனால், கமல்ஹாசனின் முடிவைப் பொறுத்து, ரஜினி பின்வாங்கலாம் என்று கூறப்படுகிறது. எனவே, ரஜினியை வைத்து, தமிழகத்தில் காலூன்றலாம்; முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் முதுகில் ஏறி தமிழக அரசியலில் சவாரி செய்யலாம் என்று திட்டமிட்டு, கணக்குப்போட்டு வந்த பி.ஜே.பி-க்கு, கமலின் திடீர் ஆவேசம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாகவே கமலுக்கு பி.ஜே.பி தரப்பில் இருந்து கண்டனம் தெரிவிக்கப்படுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.

தமிழ்நாட்டு ஊடகங்கள், சில மாதங்களாகவே எவ்வித அரசியல் பரபரப்பும் இல்லாமல், எதை,எதையோ பிரேக்கிங் செய்தியாக வெளியிட்டு வந்ததை பார்த்து வந்த மக்களுக்கு இனி பரபரப்பான அரசியல் அறிக்கைகளுக்குப் பஞ்சமிருக்காது என்றே தோன்றுகிறது!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close