Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரியை மிரட்டும் டெங்கு காய்ச்சல்... கலெக்டர் எச்சரிக்கை!

கேரளாவில், டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி உள்ளது.  திருவனந்தபுரத்தில் டெங்கு  காய்ச்சல் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது. மலப்புரம், திருவனந்தபுரம்,கோழிக்கோடு,கோட்டயம்,ஆலப்புழா போன்ற மாவட்டங்களில் டெங்கு காய்ச்சலின் பாதிப்பு அதிகமாகக் காணப்படுகிறது.

கேரள மாநிலம் முழுவதும் பரவிவரும் டெங்கு காய்ச்சலுக்கு சிலர் உயிரிழந்துள்ளனர். மக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுவதற்கு சுகாதாரச் சீர்கேடுதான் முக்கியக் காரணம்.பொது இடங்களில் கொட்டப்படும் குப்பைகளை உடனுக்குடன் அள்ளாமல் குவியலாகக் குவித்துவைத்திருப்பதும்,டெங்கு காய்ச்சல் பரவுகிறது. கொசுக்கள்மூலம் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவுவதால், பொதுமக்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.பொதுமக்களும் போதிய ஒத்துழைப்பு வழங்குமாறு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள்  கேட்டுக் கொண்டிருகிறார்கள்.

dengu

கேரளாவில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதைத் தொடர்ந்து ,அதன் எல்லையோர தமிழகப் பகுதியான கன்னியாகுமரி மாவட்டத்திலும் டெங்கு காய்ச்சல் பரவிவருகிறது. நாகர்கோவிலில் பலரும் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்றுவருகிறார்கள். டெங்கு  கொசுவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் நாகர்கோவில் நகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். நாகர்கோவிலில்  ஒருங்கிணைந்த கொள்ளை நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.   கொசுவுக்கு புகை அடிக்கும் மெஷின், ஒரு வார்டுக்கு ஒன்று வீதம், நகராட்சியில் 52 கொசு மருந்து அடிக்கும் மெஷின்கள் உள்ளன. ஒரு வீட்டுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொசு மருந்து அடிக்கப்படுகிறது. மேலும் சுய உதவிக்குழுக்கள்மூலம் வீடுகளில் உள்ள ஃபிரிட்ஜ், கிரைண்டர் ஆகியவற்றில் கொசு உற்பத்திக்கு வழிவகுக்கும் வகையில் தண்ணீர் தேங்கியுள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. மூன்றாவது கட்டமாக ஓடைகளில் தண்ணீர் தேங்காதவண்ணம் சுத்தப்படுத்தி, கொசு மருந்து தெளிக்கப்படுகிறது. டெங்கு தடுப்பு நடவடிக்கை கடந்த ஒருவாரமாக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குமரியில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிக்கு, கூடுதல் பணியாளர்களை மாவட்ட நிர்வாகம் நியமித்துள்ளது.

தற்போது, குமரிமாவட்ட கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான், கிராமம்தோறும் டெங்கு காய்ச்சல் ஆய்வுப் பணியை மேற்கொண்டு வருகிறார். குடிநீரில் கலக்கப்படும் குளோரின் அளவை ஆய்வுசெய்து ,வீடுகளையும் சுற்றுப்புறங்களையும் சுத்தமாக வைத்திருக்கும்படி பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்தநிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் டாக்டரின் பரிந்துரை இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சஜ்ஜன் சிங் சவான் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,'பருவ நிலை காரணமாக காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற பல நோய்கள் ஏற்படும்போதும் கருகலைப்பிற்காகவும் பொதுமக்கள் மருத்துவர் ஆலோசனைகள் இல்லாமல் நேரடியாக மருந்துக்கடைகள், பெட்டிக்கடைகள் ஆகியவற்றில் மாத்திரை, மருந்துகள் வாங்கி உட்கொள்கிறார்கள். அப்போது பல பக்கவிளைவுகள் ஏற்படுகின்றன. அது வைரஸ் காய்ச்சல் வரும்போது அதனைக் கட்டுப்படுத்தச் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. இது மாதிரியான மாத்திரைகளை எடுக்கும்போது காய்ச்சல் குறைந்துவிட்டது போன்று தோன்றும். ஆனால், காய்ச்சல் குறையாது. மீண்டும் காய்ச்சலின் தாக்கம் அதிகமாகும். எனவே, தொடர் காய்ச்சல் வயிற்றுப் போக்கு நோய்களுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகளை அணுகி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மருந்துக்கடைகளில் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள் மருந்துகள் விற்பனை செய்தால் கடைகள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close