Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“அப்படி ஒரு சாதியே ஈரோடு மாவட்டத்தில் இல்லை!” - 30 ஆண்டுகளாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடும் கிராமம்!

                     மாணவர்களுடன் கிராம மக்கள்

ரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்து மக்கள், சாதிச் சான்றிதழ் கேட்டு கடந்த முப்பது வருடங்களாக அரசு அலுவலகப் படியேறிக் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால், ''ஈரோடு மாவட்டத்தில் இப்படி ஒரு சாதியே இல்லையே...'' என்று வருவாய்த்துறை அதிகாரிகள் வழக்கம்போல் உதட்டைப் பிதுக்க, என்ன செய்வதென்று தெரியாமல் திக்கற்று நிற்கிறார்கள் அந்த அப்பாவி மக்கள்.

'சாதிச் சான்றிதழை எப்படியும் வாங்கியே தீருவது' என்ற நோக்கத்தோடு இதுநாள்வரையிலும் போராட்டம் நடத்தி வந்தவர்கள் தற்போது, பள்ளி மாணவர்களோடு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.

ஈரோடு மாவட்டம்,பெருந்துறை ஒன்றியத்தில் இருக்கிறது அம்மாபாளையம். அந்தக் கிராமத்தில், உள்ள அன்பு நகரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்கள் அனைவரும் 'இந்து கோசங்கி' என்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கூலி வேலை பார்க்கும் அன்றாடங்காய்ச்சிகள். இந்த மக்கள்தான் கடந்த 30 வருடங்களாக சாதிச் சான்றிதழ் கேட்டு அதிகாரிகளிடம் மனு கொடுத்து வருகிறார்கள். ஆனால், சாதிச் சான்றிதழ் வாங்கும் இவர்களது முயற்சி கனவாகவேத் தொடர்கிறது. இதனால் ''எந்த சலுகையையும் பெற முடியவில்லை'' என்று புலம்பி வருகிறார்கள் இவர்கள். 

இந்த நிலையில், பள்ளி மாணவ - மாணவிகளுடன் சேர்ந்துவந்த அம்மாபாளையம் கிராம மக்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரைச் சந்தித்து, தங்களது சாதிச் சான்றிதழ் கோரும் மனுவைக் கொடுத்தனர். அவர்களை அழைத்து வந்த 'அருந்ததியர் இளைஞர் பேரவை'யின் நிறுவனத் தலைவர் வடிவேலுவிடம் பேசினோம்.

அருந்ததியர் இளைஞர் பேரவை நிறுவனத் தலைவர் வடிவேலு“இந்த மக்கள் இந்து கோசங்கி சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அதாவது,கோடங்கின்னு சொல்வாங்களே... அந்த மக்கள். இவர்களின் முன்னோர்கள் குறி சொல்லும் வேலையை  நாடோடிகளாக ஊர் ஊராகப் போய் பார்த்து வந்திருக்கிறார்கள். கடந்த 50 வருடங்களுக்கு முன்பு அம்மாபாளையத்தில் நிரந்தரமாகத் தங்கிவிட்டார்கள். கடந்த 30 வருடங்களாகப் பெருந்துறை தாலுகா அலுவலகத்தில் சாதி சான்றிதழ் கேட்டு அலைந்து வருகிறார்கள். ஆனால், ‘அப்படி ஒரு சாதி ஈரோடு மாவட்டத்தில் இல்லை’ என்று சொல்லி அதிகாரிகள் இவர்களைத் துரத்தி அடித்திருக்கிறார்கள். இருந்தாலும், இந்த மக்கள் விடாப்பிடியாக சாதிச் சான்றிதழ் கேட்டு போராடி வந்திருக்கிறார்கள்.

அம்மாபாளையத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தென்முகம், வெள்ளோடு, கொம்பனை, தச்சங்கரை வலசு கிராமங்களில் இவர்களின் உறவினர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு இதே பெருந்துறை தாலுகா அலுவலகத்தினர், 'இந்து கோசங்கி' என்று சாதிச் சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அம்மாபாளையம் மக்களுக்கு மட்டும், ‘அப்படி ஒரு சாதியே ஈரோடு மாவட்டத்தில் இல்லை’ என்று டிமிக்கி கொடுக்கிறார்கள். இந்தக் கிராமங்களைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அம்மாபாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1 முதல் பத்தாம் வகுப்பு வரை படித்து வருகிறார்கள். அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். அரசு வழங்கும் உதவி தொகையைப் பெற முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்த மக்களிடம் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் இருக்கின்றன. அப்படி இருந்தும் இந்த குழந்தைகளுக்கு சாதிச் சான்றிதழ் வழங்காமல் அதிகாரிகள் இழுத்தடிக்கிறார்கள். கல்லூரியில் படித்த இரண்டு மாணவர்களும் சாதிச் சான்றிதழ் கிடைக்காததால், நல்ல வேலைக்குப் போக முடியாமல் தவிக்கிறார்கள். அதனால்தான், மிகுந்த சிரமத்துக்குள்ளாகும் இந்தப் பகுதி மக்களையும், பள்ளி மாணவர்களையும் அழைத்துப் போய் ஈரோடு மாவட்ட கலெக்டர் பிரபாகரை பார்த்து மனு கொடுத்தோம்.

கலெக்டர், 'ஏற்கெனவே இதுசம்மந்தமாக மனு வந்திருக்கு. அதை கொடுத்திருக்கும் நபர், எனக்கு தொட்டி நாயக்கர்னு சாதி ச்சான்றிதழ் வழங்கவும்னு குறிப்பிட்டிருக்கிறார். இந்த மக்கள் 'இந்து கோசங்கி'னு சான்றிதழ் கேட்பதால், அதிகாரிகளுக்கு குழப்பமாயிட்டு. தொட்டி நாயக்கர் என்பது எம்.பி.சி-யில் வரும். 'இந்து கோசங்கி' என்பது தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வரும். அதனால்தான், ஒரே மக்கள் ஆளுக்கொரு சாதியைக் குறிப்பிட்டதால், அதிகாரிகள் குழம்பிட்டாங்க. மத்தபடி, 'ஈரோட்டுல ‘அப்படி ஒரு சாதியே இல்லையே'னு எந்த அதிகாரியும் சொல்லலை. ஆர்.டி.ஓ-கிட்ட உங்க மனுவை ஃபார்வேட் பண்ணி, விரைவில் சாதிச் சான்றிதழ் வழங்க ஆவண செய்றேன்னு சொன்னார். 

சாதி சான்றிதழ்

30 வருஷமா போராடும் மக்களிடம், 'அப்படி ஒரு சாதியே இல்லை'னு சொன்னது உண்மைதான். அது எவ்வளவு கொடுமை? அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்திருந்தால், உண்மை தெரிஞ்சுருக்கப் போவுது. அதோட, அந்த மக்கள்ல யாரும், அப்படி தொட்டி நாயக்கர்னு சாதிச் சான்றிதழ் கேட்கலைன்னும் சொல்றாங்க. கலெக்டர் இப்படி சொல்றார். அதிகாரிகளை கலெக்டர் காப்பாத்துறார்... அவ்வளவுதான். போனது போகட்டும். கலெக்டர் சொன்னபடி உடனே இந்த மக்களுக்கு இந்து கோசங்கின்னு சாதிச் சான்றிதழ் வழங்கலன்னா, சூடான போராட்டங்களால் கலெக்டர் அலுவலகத்தை ஸ்தம்பிக்க வைப்போம்" என்றார் அதிரடியாக.

இதுசம்பந்தமாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகரிடம் பேச முயன்றோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. ஆட்சியர் சார்பாக பேசிய ஒரு அதிகாரி,

"அந்த மக்கள் இரண்டு தரப்பாக வெவ்வேறு சாதிகளைக் குறிப்பிட்டதால்தான் குழப்பம். அதை உறுதி செய்திகொண்டு, உடனே அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்படும். எந்த அதிகாரியும் அந்த மக்களிடம், 'ஈரோட்டில் ‘அப்படி ஒரு சாதியே இல்லை'னு சொல்லவில்லை" என்றார்.‘

சாதிச் சான்றிதழ் வாங்கவே இந்த மக்களை 30 வருடங்களாக அலையவிடும் ஆட்சி அதிகாரம், இவர்களின் வாழ்வை முன்னேற்ற எத்தனை நூற்றாண்டுகள் எடுத்துக்கொள்ளுமோ?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close