Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பயிர்க்காப்பீடு வழங்குவதில் தாமதம்.. - தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது விவசாயிகள் புகார்!

மழை இல்லாமல் விவசாயப் பயிர்கள் கருகிய நிலையில், பயிர்க்காப்பீடு வழங்குவதில் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் திட்டமிட்டு காலதாமதம் செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர். 

நெல்லை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்ததால் அதனை நம்பிப் பயிரிட்டிருந்த விவசாயப் பயிர்கள் அனைத்தும் தண்ணீர் இல்லாமல் கருகின. இது விவசாயிகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியது. கடன் பெற்று விவசாயம் செய்தவர்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனிடையே, விவசாயப் பயிர்கள் மீது இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு அதனைத் திருப்பிக் கொடுக்காமல் வங்கிகள் காலதாமதம் செய்வதாகப் புகார் எழுந்திருக்கிறது. 

நெல்லை மாவட்ட விவசாயிகளின் குறை தீர்ப்புக் கூட்டம் நடந்த நிலையில், அதிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. விவசாயிகள் தங்களின் வேதனையைத் தெரிவித்துக் குமுறினார்கள். இதனால் கூட்ட அரங்கில் சிறிது நேரத்துக்கு கூச்சல் குழப்பம் நிலைவியது. கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கலந்துகொள்ளவில்லை. அவர் வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ’விவசாயிகள் அமைதி காக்குமாறும்., மாவட்ட ஆட்சியர் வந்ததும் இது பற்றி முடிவு எடுக்கலாம்’ என்று மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தெரிவித்தார். 

 

அதனை ஏற்று விவசாயிகள் அமைதி காத்தனர். இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் நெல்லை மாவட்டச் செயலாளரான வேலுமயில் கூறுகையில், ’’கடந்த ஓராண்டாக பருவமழை இல்லை. இதனால் முப்போகமாக இருந்த விவசாயம், ஒரு போகம் கூட செய்ய முடியாத நிலை உள்ளது. நடவு செய்த பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் கருகிக் காய்ந்துவிட்டன. அதற்கான இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் தொடர்ந்து தாமதமாகி வருகிறது.

பயிர்களுக்கான காப்பீட்டை ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் செலுத்தினோம். நெல்லை மாவட்டத்தில் மட்டும் அந்த வங்கிக்கு 3 கோடி ரூபாய்க்கு அதிகமாக காப்பீட்டுத் தொகை செலுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை ஒரு விவசாயிக்குக் கூட இழப்பீடு வழங்கவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி வரை இருந்த காப்பீடு செலுத்துவதற்கான் காலக்கெடு அக்டோபர் 5-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதற்கான தொகையை அந்த வங்கி வசூலித்தபோதிலும், இப்போது நீட்டிக்கப்பட்ட காலத்துக்கு இன்சூரன்ஸ் தர மறுக்கிறது.

இப்படி இந்த விவகாரத்தில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றன. இழப்பீட்டுத் தொகை யாருக்கு வழங்கப்பட உள்ளது என்பது குறித்த தகவல் கிராம நிர்வாக அலுவலகங்களில் தகவல் பலகையில் எழுதி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை பயனாளிகள் பட்டியல் வைக்கப்படவில்லை. இதை எல்லாம் எடுத்துக்கூறினோம். இதற்கு விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் வரவில்லை’’ என்றார் ஆதங்கத்துடன். 

கடைசி வரையிலும் விவசாயிகள் குறை தீர்ப்புக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்கவும் இல்லை. விவசாயிகளுக்கான இன்சூரன்ஸ் தொகை எப்போது வழங்கப்படும் என்கிற கேள்விக்குப் பதில் அளிக்கப்படவும் இல்லை என்பதுதான் வேதனையின் உச்சம்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close