Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எங்களை ரோட்டுல நிக்க வச்ச எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா? - திருச்சி கொதிப்பு

மக்கள்ஓட்டுப்போட்ட மக்கள் நாங்கள் வேலையில்லாமல் ரோட்டில் நிற்கிறோம். எம்.எல்.ஏ-க்களுக்கு மட்டும் சம்பள உயர்வு கொடுப்பது சரியா'' என திருச்சியில் நடந்த போராட்டத்தில் கூடிய பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் திருச்சி புறநகர் மாவட்டச் சங்கம் சார்பில், 'மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்' என மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்கும் போராட்டம் நடத்தினர். அச்சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் பழனிசாமி, மாநகர் மாவட்டச் செயலாளர் தங்கதுரை, அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான லாசர், மாதர் சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா கலந்துகொண்ட இந்தப் போராட்டத்தில், திருச்சி சமயபுரம், கண்ணனூர் என 15-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகளில் இருந்து ஏராளமான பெண்கள், விவசாயிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் கலந்துகொண்ட மக்கள், ''கிராமப் பகுதிகளைப்போலவே பேரூராட்சிகளிலும் விவசாயம்தான் பிரதான தொழில். ஆனால், எங்களுக்கு வேலை வழங்காமல் அரசு பாரபட்சமாக நடத்துகிறது'' எனக் குற்றஞ்சாட்டினர்.

போராட்டத்தில் பேசிய மாதர் சங்கத்தின் புறநகர் மாவட்டச் செயலாளர் மல்லிகா, 

மக்கள்“கடந்த 10 ஆண்டுகளில் மழையின் அளவு குறைந்ததால், முற்றிலும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு கிடைக்காமல் திருச்சி மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் உள்ள 528 பேரூராட்சி மக்கள், குடும்பம் குடும்பமாக வேலைதேடி வெளியூர் செல்ல வேண்டியுள்ளது. அதனால், இந்த நிலைமையை மாற்றிட, கிராமப்புறங்களில் உள்ளதைப்போல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில், பேரூராட்சி மக்களும் பயனடையும் வகையில் செய்யவேண்டும். இதே கோரிக்கையை முன்வைத்து பல வருடங்களாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம். வறட்சியால் நாங்கள் வருவாய் இல்லாமல், ஓட்டுப்போட்ட மக்கள் ரோட்டில் நின்று போராடுகிறோம். ஆனால், ஓட்டை வாங்கிக்கொண்டு ஏசி காரில் போகும் எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு. இது எப்படிச் சரி” என முழங்கினார்.

இறுதியாகச் சிறப்புரை ஆற்றிய முன்னாள் எம்.எல்.ஏ லாசர், “தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தைக் கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் நடைமுறைப்படுத்துவதைப்போலவே, தமிழகத்தில் உள்ள 528 பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். இந்தியாவில் தமிழ்நாடு, ஒடிசா, திரிபுரா ஆகிய மாநிலங்களில் மட்டுமே பேரூராட்சி என்கிற அமைப்பு உள்ளது. அதில், திரிபுரா மாநிலத்தில் அம்மாநில அரசு, இந்தத் திட்டத்தை பேரூராட்சிகளிலும் செயல்படுத்தி, அம்மாநில நிதி ஆதாரத்தில் இருந்து 100 நாள்கள் வேலை தருகிறது. இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதிலும் தொழிற்சாலைகளோ, வர்த்தக நிறுவனங்களோ அல்லது வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலான எந்தவித நிறுவனங்களோ இல்லை. சுமார் 450 பேரூராட்சிகளில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. தமிழகம் வரலாறு காணாத வறட்சியைக் கண்டுள்ளது. இதனால், பேரூராட்சிகளில் உள்ள மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றை எல்லாம் கருத்தில்கொண்டு, வரும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை பேரூராட்சிப் பகுதிகளுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 25-ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களை முற்றுகையிடுவோம். அப்போதும் எங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை எனில், அடுத்து சென்னையிலும், டெல்லியிலும் போராட்டம் நடத்த உள்ளோம்” என்றார்.

பேரூராட்சிகளுக்கும் 100 நாள் வேலை திட்டம் கேட்கும் போராட்டம் தீவிரம் அடையும் என்பதுதான் அடுத்தகட்ட பரபரப்பை உருவாக்கியுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close