Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனிஷியல் போட்ட குடங்களுடன் தண்ணீர் சவாரிபோகும் ரிக்‌ஷாக்கள்...!



                                                தண்ணீர் வருகைக்காக காத்திருக்கும் இனிஷியல் போட்ட குடங்கள்

னிதர்களை 'சவாரி' ஏற்றிச்சென்ற மீன்பாடி சைக்கிள் ரிக்‌ஷாக்கள், சென்னையில் சமீபகாலமாக குடும்ப இனிஷியல் போட்ட குடங்களை வைத்து தண்ணீர் சவாரிக்குப் போய்க் கொண்டிருக்கின்றன.தண்ணீர் கிடைக்கிற பிறபகுதிகள் எத்தனை கிலோ மீட்டர் தூரம் இருந்தாலும் போய்வர மக்கள் தயாராகி விட்டார்கள். சைக்கிள், மோட்டார் சைக்கிள், மீன்பாடி ரிக்‌ஷாக்கள் போன்றவை தண்ணீரைத் தேடிச்சென்று பிடித்து, அவற்றைக் கொண்டுவருவதற்கு பயன்படுகின்றன. ஒரு குடும்பத்துக்கு ஐந்து குடம் தண்ணீர் என்பது பொதுவான ஒழுங்குமுறை விதியாகி இருக்கிறது. ஒரு ரிக்‌ஷாவில் இருபது குடங்கள்வரை ஏற்றமுடியும் என்பதால், நான்கு குடும்பங்கள் ஒரு ரிக்‌ஷாவை வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, பல கிலோமீட்டர் தொலைவுவரை காலையிலேயே தங்களின் பயணத்தைத் தொடங்கி விடுகின்றன. ரிக்‌ஷாவில் வீடுகளைநோக்கி தண்ணீர் வருவது உறுதியான பின்னரே, பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவது உறுதி என்றநிலை ஏற்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வீட்டிலும் குடங்களுக்கு இனிஷியலைப்போட்டு மீன்பாடி ரிக்‌ஷாவில் ஏற்றி விடுகிறார்கள். அந்தவகையில், ஒரு நடை சென்றுவந்தால், ரிக்‌ஷா ஓட்டுநருக்கு 150 ரூபாய் அன்றாடக் கூலியாகக் கிடைக்கும். இந்தத்தொகையை நான்கு குடும்பத்தினர் பங்கிட்டுக் கொடுக்கிறார்கள். சொந்தமாக அடிபம்பு போட்டுவைத்திருந்த வீடுகளில் உள்ள மக்கள், இப்போது தெருவாசிகளுடன் காலிகுடங்களை மீன்பாடி ரிக்‌ஷாவில் ஏற்றி அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் பட்டியலில் பூண்டி, செம்பரம்பாக்கம், சோழவரம் மற்றும் புழல் ஏரிகள் அடங்கும். புழல் ஏரியைப் பொறுத்தவரையில், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்டது. 57 மில்லியன் கன அடி மட்டுமே தண்ணீரை மட்டுமே கையிருப்பாகக் கொண்டு சவலைப்பிள்ளையாய் இப்போது புழல் ஏரி இருக்கிறது.  மொத்தமுள்ள 57 மில்லியன் கன அடி தண்ணீரையும் ஜே.சி.பி. இயந்திரம் மூலம்,  கால்வாய் மார்க்கமாக மோட்டார் வைத்து சென்னை மக்களின் தாகம் தீர்க்க புழல் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எத்தனை நாள்களுக்கு நீடிக்கும் என்று தெரியவில்லை. அதிகாரிகளைக் கேட்டால் கையை அகல விரித்து ஐந்து என்று காட்டுகிறார்கள். ஐந்து நாள்கள்தான் என்று புரிந்துகொள்ளச் சொல்கிறார்களா அல்லது ஐந்து மாதங்களா என்று நமக்குப் புரியவில்லை. மொத்தத்தில் விரைவில் கனமழை பெய்தால் மட்டுமே எதையும் உறுதியாகச் சொல்ல முடியும் என்பது அவர்களின் நிலையாக உள்ளது.

சென்னைக்கான குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சோழவரம் ஏரியை எடுத்துக்கொண்டால், ஏரியின் மொத்தக் கொள்ளளவு 880 மில்லியன் கனஅடிதான். ஒரு மாதத்துக்கு முன்பே  இந்த 880 மில்லியன் கனஅடி நீரும் வற்றிப்போனதால் தற்போது ஏரி முழுவதுமாக வறண்டு காணப்படுகிறது. பூண்டி ஏரியின் நிலைமையும் சொல்லத்தேவையில்லை. சென்னைப் புறநகர்ப் பகுதிகளான தாமரைப்பாக்கம், வெள்ளியூர், கீழானூர் போன்ற இடங்களில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து, அங்கிருந்து தண்ணீரை எடுத்து தற்காலிகமாக வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். காய்ந்து கிடக்கும் ஏரிகளின் பழைய நீராதார அளவை இந்தக் கிணற்று நீர் சமன் செய்யுமா என்று தெரியவில்லை. புறநகர்ப் பகுதிகளில் இருக்கும் கல்குவாரிகளை இதற்குமுன் இவ்வளவு தூரம் அதிகாரிகள் சிரமப்படுத்தியதில்லை. இப்போது ராட்சத மோட்டார்களை வைத்து கல்குவாரிகளே பீதியடையும் அளவுக்கு நீரை சேகரித்து, அங்கிருந்தும் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கல்குவாரிகளிலும் கடந்த இரண்டு நாள்களாக ஆழம் குறைந்து தரைதட்டுவதாக வரும் தகவலால், அடுத்து வரும் நாள்களில் நிலைமை என்னவாகுமோ என்று மக்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.

புழல் ஏரி

சென்னையைப் பொறுத்தவரை, பள்ளமான சில பகுதிகளில் மட்டும் அடிபம்புகளில் வீடுகளுக்கு தண்ணீர் கிடைத்து வந்தது. அதுவும், அதிகாலை நான்கு மணி முதல் காலை ஏழரை மணி வரை தண்ணீர் வரும். ஒரு மாதத்துக்கு முன்பே ஏரிகளில் நீர் இருப்பைக்கணக்கில் கொண்டு, பல இடங்களில் தண்ணீர் விடுவது நிறுத்தப்பட்டுள்ளது.  குடிநீரேற்று நிலையங்களில் இருந்து லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும் தண்ணீரும், வாரத்துக்கு இருமுறையாகக் குறைந்துள்ளது. செம்பரம்பாக்கம், சோழவரம், பூண்டி, செங்குன்றம் போன்ற ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடி. இந்த ஏரிகளில் நீர் நிறைந்திருந்தால் நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் சென்னை மக்களுக்கு வழங்கப்படும். நீர் இருப்பானது தற்போது 809 மில்லியன் கனஅடியாகக் குறைந்துள்ளதால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 5,640 மில்லியன் கன அடி நீரை கைவசம் வைத்திருந்த ஏரிகளின் இன்றைய நிலை மிகவும் மோசமாகி உள்ளது. மீஞ்சூர், நெம்மேலி போன்ற இடங்களில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலமும், திருவள்ளூர் மாவட்ட விவசாயக் கிணறுகள் மூலமும், கொஞ்சங் கொஞ்சமாக வற்றிக்கொண்டிருக்கும் சென்னை ஏரிகள் மூலமும் அதிகபட்சமாக  550 மில்லியன் லிட்டர் குடிநீர் பெறப்படுவதாக பொதுப்பணித்துறையினர் கூறுகிறார்கள்.

கையிருப்பான 809 மில்லியன் கன அடி குடிநீர், அடுத்த ஒரு மாதத்தின் குடிநீர் தேவையை மட்டுமே சமாளிக்க முடியும். இதுபோன்ற நிலையில் கடும்வறட்சி உறுதியாகியுள்ளது. சென்னையை மூழ்கடிக்கும் அளவு மழைப்பொழிவு இருந்தபோது மழையின் வேகம், பெரும்பாலானவர்களால் சபிக்கப்பட்டது. மழைநீரைச் சேமித்து வைக்கும் எந்தத் திட்டமும் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் இல்லை. அமைச்சர்களும், அதிகாரிகளும் மராமத்துப் பணிகளை தொடங்கி வைத்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வருவதோடு சரி. பணிகள் முழுமை பெற்றிருக்க வாய்ப்புகள் இல்லை. ஏனெனில்  அப்போதும் கால்வாய்கள் காய்ந்துதான் கிடந்தன. இப்போதும் காய்ந்துதான் கிடக்கின்றன. சென்னையில் எங்கு பார்த்தாலும் தண்ணீர் கேட்டு காலி லாரிகளை மறித்து சாலை மறியல்கள் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நிலவரத்தை தண்ணீருக்காக அலைந்து திரியும் அடித்தட்டு மக்களால் உணர முடிவதில்லை. எப்போது தீரும் சென்னையின் இந்த தண்ணீர் தாகம்?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close