Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'தமிழகத்தை அழிக்கும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம்!' - வைகோ கண்டனம்

’மத்திய, மாநில அரசுகள் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

vaiko
 

மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக வைகோவெளியிட்டுள்ள அறிக்கையில்...

”தமிழ்நாட்டை முற்றிலுமாக அழித்து நாசப்படுத்தும் வகையில் மத்திய அரசும், மாநில அரசும் போட்டி போட்டுக்கொண்டு துரித கதியில் செயல்பட்டுக்கொண்டு இருக்கின்றன. மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசகாரத் திட்டங்களால் வேளாண்மைத் தொழில் அழியும், சுற்றுச்சூழல் சீர்கேடு அடையும் என்பதால் நெடுவாசல், கதிராமங்கலத்தில் மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. ஆனால் மத்திய, மாநில அரசுகள் மக்களின் போராட்டங்களுக்கு மதிப்பளிக்காமல் அலட்சியப் போக்குடன் நடந்துகொள்வது மட்டுமின்றி, அரசின் திட்டங்களை எதிர்க்கும் மக்களை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடலாம் என்று கருதுகின்றன.

இந்நிலையில், மேலும் ஒரு இடி விழுவதைப் போன்று கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக தமிழக அரசு ஜூலை 19-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டு இருக்கிறது. 

காங்கிரஸ் கூட்டணி அரசு தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளின் பட்டியலில் இதுவும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான முன்னெடுப்பு 2007-ம் ஆண்டு மத்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் உருவாக்கப்பட்டு, 2012-ம் ஆண்டில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இதற்கான ஒப்புதலையும் வழங்கியது.

நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், 2015-ல் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன. அதன் தொடர்ச்சியாகத் தற்போது தமிழக அரசு கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள 45 கிராமங்களில் 57,500 ஏக்கர் நிலத்தை பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருள்கள் முதலீட்டு மண்டலமாக அறிவித்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், புவனகிரி, சிதம்பரம் வட்டங்களிலும், நாகை மாவட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களிலும் பெட்ரோலிய மண்டலம் அமையப்போகும் இடங்களைத் தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் அறிவிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருக்கின்றன.

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் சுமார் 318 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டதாக இருக்கும். இரு வகையாகப் பிரிக்கப்படும் பெட்ரோலிய முதலீட்டு மண்டலத்தின் ஒரு பகுதியில் பெட்ரோலியம், பெட்ரோலிய ரசாயன பொருள்கள் தொழிற்சாலை, கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

பெட்ரோலிய மண்டலத்தின் இன்னொரு பகுதியில் வர்த்தக மையங்கள், குடியிருப்புப் பகுதிகள் மற்றும் சமூகக் கட்டமைப்புகள் அமைக்கப்படும். பெட்ரோலிய ரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய ரசாயனப் பொருள்கள் முதலீட்டு மண்டலத்தில் (Petroleum, Chemicals & Petrochemical Investment Regions -PCPIRs) சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், தொழில் பூங்காக்கள், சந்தை மையம் மற்றும் பொருள் கிடங்குகள் போன்றவையும் ஏற்படுத்தப்படும். இதற்கான நிலங்களைக் கையப்படுத்தும் பணியை மத்திய அரசு, தமிழக அரசிடம் ஒப்படைத்திருக்கிறது.

மத்திய அரசின் உத்தரவுக்கிணங்க, தமிழக அரசு பெட்ரோலிய மண்டலத்துக்கான இடங்களின் பட்டியலை வெளியிட்டு, அடுத்தகட்டமாக நிலங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கும். இத்தகைய பெட்ரோலிய மண்டலம், அமைக்கப்படுவதன் மூலம் 92,160 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் மேற்கொள்ளப்பட்டு, எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி செய்ய முடியும் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பெட்ரோலியப் பொருள்கள் மட்டுமின்றி, காவிரிப் படுகையில் 667 சதுர கிலோ மீட்டர் சுற்றளவில் நிலத்தின் மேலடுக்கில் சுமார் 500 அடி முதல் 1,600 அடி வரை படர்ந்துள்ள நிலக்கரி பாறைப் படிமங்களுக்கு இடையில் மீத்தேன் எரிவாயு, ஹைட்ரோ கார்பன் மற்றும் பாறைப் படிம எரிவாயு போன்றவற்றை எடுத்து ஏற்றுமதி செய்யவும் மத்திய அரசு மூர்க்கத்தனமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கின்றன.

மத்திய அரசின் நாசகார திட்டங்களால் தமிழ்நாட்டின் வாழ்வாதாரங்கள் பறிபோவதுடன், சுற்றுச்சூழலும் பாதிக்கப்படும் என்பதையெல்லாம் அறிந்தும் தமிழக அரசு டெல்லியின் உத்தரவுகளுக்கு அடிபணிந்து கிடப்பது கடுமையான கண்டனத்துக்குரியது ஆகும்.

கடலூர், நாகை மாவட்டங்களை பெட்ரோலிய முதலீட்டு மண்டலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். இதைவிடுத்து மத்திய அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு தமிழக அரசு துணை போனால் மாபெரும் மக்கள் கிளர்ச்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close