Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சமூகப் பொறுப்புடன் நடந்துகொண்ட பத்திரிகையாளர்கள்! நெகிழும் காஞ்சி மக்கள்

னியார் ஆசிரமத்தில் இருந்து தப்பியோடிய மூன்று மாணவர்களை, பத்திரிகையாளர்கள் பத்திரமாக மீட்டு அவர்களிடன் வீட்டில் சேர்த்தனர். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளது பல்லவன் நகர். இப்பகுதியைச் சேர்ந்த சந்திரன், விக்னேஷ், பாண்டியன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆகிய மூன்று மாணவர்கள் காட்டாங்கொளத்தூரில் உள்ள சிவானந்த குருகுலத்தில் தங்கிப் படித்து வருகின்றனர். வறுமையில் வாடும் இவர்களின் பெற்றோர், ஆசிரமப்பள்ளியில் ஏழாம் வகுப்பில் அவர்களைச் சேர்த்தனர்.

தனியார் ஆசிரமம்

இதுவரை வீட்டைவிட்டு வெளியே தங்காத அவர்கள், முதல்முறையாக பெற்றோரை விட்டு பிரிந்திருக்கிறார்கள். இந்தநிலையில் வீட்டு ஞாபகம் அவர்களை வாட்டியது. வீட்டிற்குச் செல்ல வேண்டுமானால் ஆசிரம நிர்வாகத்தில் அனுமதி பெறவேண்டும். அனுமதி கொடுப்பார்களா? வீட்டிற்கு வந்தால் தங்களைப் பெற்றோர் சேர்த்துக் கொள்வார்களா என்ற குழப்பமும், தயக்கமும் அவர்களை வாட்டிவதைத்தது. பல நாள்களாகவே மாணவர்கள் மூவரும் மனஉளைச்சலில் இருந்துள்ளனர். பின்னர், யாருக்கும் தெரியாமல்  வீட்டிற்குத் தப்பிச் செல்வது என முடிவெடுத்து, சம்பவத்தன்று மூன்று சிறுவர்களும் பள்ளி முடிந்ததும் ஆசிரமத்தில் இருந்து தப்பி வெளியேறினார்கள். அருகில் உள்ள காட்டாங்கொளத்தூர் ரயில் நிலையம் வந்த அவர்கள், ரயிலில் மூலமாக மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தடைந்தார்கள்.

காஞ்சிபுரம்வரை வேகமாக வந்த அவர்களுக்கு, வீட்டிற்குச் செல்வதில் தயக்கம் ஏற்பட்டது. காஞ்சிபுரம் பகுதியில் பூங்கா, விளையாட்டு மைதானம் எனச் சுற்றித் திரிந்துள்ளனர். இரவு 10 மணியைத் தாண்டியும் அவர்களால் எந்த முடிவையும் எட்ட முடியவில்லை. 10.30 மணிக்கு விளையாட்டு மைதானம் அருகே,  சிறுவர்கள் மூன்றுபேர் திரிவதைப் பார்த்த பத்திரிகையாளர்கள் சிலர், மாணவர்களிடம் பேச்சுகொடுத்தனர். "நாங்க டியூஷன் போய்ட்டு வர்றோம்" என அவர்கள் சொல்ல, "இரவு 10.30 மணிவரை யார் டியூஷன் எடுக்கிறாங்க?" என்று அவர்களிடம் கேட்டுள்ளனர். மாணவர்களின் அடுத்தடுத்த பதில்கள் சந்தேகத்தை ஏற்படுத்தவே, "வாங்க, உங்களை வீட்டில் கொண்டுபோய் நாங்களே விட்டுவிடுகிறோம்" என இருசக்கர வாகனத்தில் அவர்களை ஏற்றிக்கொண்டு மாமல்லன் நகர் பகுதிக்குச் சென்றனர். அவர்களை வீட்டில் இறக்கிவிட்டபோது, சந்திரனின் தாய் தனது உடல் முழுக்க மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு அழுது கொண்டிருந்தார். இதைப்பார்த்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். அந்த சிறுவன் அழுதுகொண்டே ஓடி அம்மாவைக் கட்டி அணைத்துக் கொண்டான்.

"சாயங்காலம், ஆசிரமத்தில் இருந்து போன் பண்ணினாங்க. உங்க பையனைக் காணோம். நாங்களும் தேடிக்கிட்டிருக்கோம். வீட்டுக்கு வந்தா, உடனடியா தகவல் சொல்லுங்கன்னு சொன்னாங்க. நாங்களும் எல்லா இடங்களிலும் தேடினோம். பையன் இனி வீட்டுக்கு வரமாட்டான்னு நெனச்சு, எனக்கு மனசு ஒடைஞ்சுபோச்சு. இதனால மண்ணெண்ணையை தலையில ஊற்றிக்கொண்டேன். இன்னும் கொஞ்சம் நேரம் லேட்டா வந்திருந்தாக்கூட என்னை உசுரோட பார்த்திருக்க முடியாது" என தழுதழுத்தார் சந்திரனின் தாயார்.
 

பத்திரிகையாளர்கள்

பாண்டியனின் தந்தையோ, “சாயங்காலம் நான் வீட்டிற்கு வந்தபோதுதான் பசங்க காணாம போன தகவல் எனக்குத் தெரிந்தது. ஆனா, அவங்க, நான் வந்த ரயில்லதான், காஞ்சிபுரம் வந்திருக்கிறாங்க. எங்க பையன் இவ்வளவு சீக்கிரமா கிடைப்பான்னு நான் நினைக்கல" என பத்திரிகையாளர்களிடம் சொல்லி ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.

அடுத்த சில நிமிடங்களிலேயே செங்கல்பட்டு காவல்நிலையத்திற்கும், காட்டாங்கொளத்தூரில் உள்ள ஆசிரமத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் கிடைத்த சந்தோஷத்தில் ஆசிரம நிர்வாகிகள், பொறுப்புடன் செயலாற்றிய பத்திரிகையாளர்களுக்குத் தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பாஸ்கரன், சந்துரு, மணி, சுரேஷ் என்ற அந்த நான்குபேரும், தங்களின் செயலால், பத்திரிகையாளர்களின் கடமை செய்திகொடுப்பது மட்டுமல்ல; அதைத்தாண்டி அவர்களுக்கு சமூகப்பொறுப்பும் உள்ளது என்பதை நிரூபித்துள்ளனர்.
 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close