Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

டி.டி.வி.தினகரனின் அடுத்த அதிரடி!  - கலக்கத்தில் முதல்வர் பழனிசாமி

சசிகலா,முதல்வர் எடப்பாடி பழனிசாமி,டி.டி.வி.தினகரன்,ஓ.பன்னீர்செல்வம்

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டி.டி.வி.தினகரன் கொடுத்த காலக்கெடு, ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் முடிவடைகிறது. காலக்கெடு குறித்து முதல்வர் தரப்பிலிருந்து டி.டி.வி.தினகரனுக்கு இதுவரை எந்தப் பதிலும் வராததால், அதிரடியாக அவர் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி போலீஸார் தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில், டி.டி.வி.தினகரன் பெயர் இடம்பெறவில்லை. அதன்பிறகு, அ.தி.மு.க-வில் அதிரடியைக் காட்ட டி.டி.வி.தினகரன் ஆயத்தமாகிவிட்டதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துவருகின்றனர். இதற்காக அவர், தினமும் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். இது, அவரது ஆதரவாளர்களுக்குக் கடும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகம் செல்லும் முடிவுக்கான அனுமதியைப் பெற சசிகலாவைச் சந்திக்க உள்ளார். சிறை அனுமதிக்காக அவர் காத்திருக்கிறார். சசிகலாவை சந்தித்த பிறகு, அ.தி.மு.க-வில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதாக, உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், "தற்போதைய அரசியல் சூழ்நிலை, சசிகலாவுக்கு எழுந்துள்ள சிக்கல், முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விதிக்கப்பட்ட காலக்கெடு, ஓ.பன்னீர்செல்வத்தின் அடுத்தகட்ட நடவடிக்கை, மன்னார்குடி உறவுகளின் சண்டை ஆகியவைகுறித்து ஆலோசனை நடத்தினோம். மன்னார்குடி உறவுகளிடையே நிலவிய அதிகாரப் போட்டிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த டி.டி.வி.தினகரன், 'முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியும் ஒன்றிணைவதற்காக 60 நாள்கள் காத்திருப்பேன்; அதன்பிறகு தீவிரமாக கட்சிப் பணியில் ஈடுபடுவேன். அ.தி.மு.க-விலிருந்து என்னை யாரும் விலக்க முடியாது’ என்று தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் டி.டி.வி.தினகரன் கொடுத்த 60 நாள் அவகாசம், ஆகஸ்ட் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம் அணியிலிருப்பவர்களில் சிலர், எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதே நேரத்தில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களைத் தவிர குறிப்பிட்ட சில அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எங்களிடம் தொடர்பில் உள்ளனர். இது, முதல்வருக்குத் தெரியும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம்,

 
 ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள், இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றிணைந்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அவர்கள் இணையவில்லை என்றால், ஆகஸ்ட் 5-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்கு டி.டி.வி.தினகரன் தலைமையில் எங்களது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் செல்ல முடிவுசெய்துள்ளோம். இதற்காக, தமிழகம் முழுவதும் உள்ள எங்களது ஆதரவாளர்களைச் சந்திக்கவும் ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்தத் தகவல், உளவுத்துறைமூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கும் தெரியும்.

ஆட்சி அதிகாரம் கையிலிருப்பதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் எங்களைக் கட்சி அலுவலகத்துக்குள் செல்லவிடாமல் தடுக்க வாய்ப்புள்ளது. அதை எப்படி சமாளிப்பது என்று வழக்கறிஞர்கள் குழுவினருடன் ஆலோசித்துள்ளோம். ஆகஸ்ட் 5-ம் தேதி, அ.தி.மு.க-வில் நிச்சயம் ஒரு மாற்றம் ஏற்படும். ஓட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஆகஸ்ட் 5-ம் தேதி நல்ல செய்தி காத்துக்கொண்டிருக்கிறது" என்றனர்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் கூறுகையில், "அ.தி.மு.க-வில் யார் பொதுச் செயலாளர் என்ற தொண்டர்களின் கேள்விக்கு இன்னும் விடை தெரியவில்லை. சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளரான டி.டி.வி.தினகரனை மக்களும் தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் விதித்த காலக்கெடுவை நாங்கள் கண்டுகொள்ளவில்லை. அ.தி.மு.க.வின் நாளேடான நமது எம்.ஜி.ஆரில் முதல்வர் மற்றும் அ.தி.மு.க. குறித்த செய்திகள் புறக்கணிக்கப்பட்டுவருகின்றன. அது, சசிகலா குடும்பத்தினருக்கான நாளேடாக மாறியிருக்கிறது.

எங்களைப் பொறுத்தவரை, ஜெயலலிதா விரும்பிய ஆட்சி தமிழகத்தில் நடக்க வேண்டும். அ.தி.மு.க-வை யாரும் கூறுபோட அனுமதிக்க மாட்டோம். மக்களும் தொண்டர்களும் சசிகலா, டி.டி.வி.தினகரன் மற்றும் மன்னார்குடி குடும்பத்தினரை ஏற்றுக்கொண்டால், நாங்களும் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறோம். ஆகஸ்ட் 5-ம் தேதி டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்துக்குச் செல்லும் திட்டம்குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஆலோசித்து நல்லதொரு முடிவை அறிவிப்பார். அதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது சட்டரீதியான நடவடிக்கையாக இருக்கும். ஓ.பன்னீர்செல்வம் அணியினரைப் பொறுத்தவரை, இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை"என்றனர்.

சசிகலா,ஓ.பன்னீர்செல்வம் 

 ஓ.பன்னீர்செல்வம் அணியினரிடம் பேசினோம். "முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும் டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்களும் கட்சியைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழக மக்கள்குறித்த அக்கறை இல்லை. நீட் தேர்வால், மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கதிராமங்கலம், நெடுவாசல் கிராம மக்களின் பிரச்னைகளை அவர்கள் கண்டுகொள்ளவில்லை. பிரதமர் மோடியைச் சந்தித்தபோது,  நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்தினோம். மேலும், தமிழக நிலைமையை எடுத்துக்கூறினோம்.

நீட் தேர்வில் நல்ல முடிவை எடுப்பதாக பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் உறுதியளித்துள்ளனர். அணிகள் ஒன்றிணைவது தொடர்பான பேச்சுவார்த்தை கிடப்பில் போடப்பட்டுள்ளது. டி.டி.வி.தினகரன், கட்சி அலுவலகத்துக்குள் வந்தால், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும். அது, அ.தி.மு.க. ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்தும். எங்களைப் பொறுத்தவரை பிரிந்துகிடக்கும் அ.தி.மு.க. ஒன்றிணைய வேண்டும்"என்றனர். 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close