Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குற்றாலத்தில் சாரல் இல்லை.. அருவிகளில் தண்ணீர் இல்லை..! அரசு சார்பில் சாரல் திருவிழா தொடக்கம்!

மழை இல்லாததால் குற்றாலத்தில் சாரல் இல்லை. அருவிகளில் தண்ணீர் இல்லை. ஆனால், தமிழக அரசின் சார்பாக சாரல் திருவிழா தொடங்குகிறது.

குற்றாலம்

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்யும் தென் மேற்குப் பருவமழை காரணமாக நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளுக்கு தண்ணீர் வருகிறது. ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான மழைக் காலத்தில் குற்றாலத்தின் சீசன் களை கட்டுவது வழக்கம்.

சீசன் காலத்தில்.அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டும். பொதிகை மலையின் அபூர்வ மூலிகைச் செடிகளைக் கடந்து வரும் நீரில் மூலிகைகளின் மணம் நிரம்பிக் கிடப்பதால் அருவிக் குளியல் என்பது மருத்துவ மகத்துவம் மிகுந்ததாகக் கருதப்படுகிறது.

சீசன் காலத்தில் சில்லென்ற தென்றல் காற்றுடன் சுகமான சாரல் பெய்து மனதையும் உடலையும் உற்சாகம் ஊட்டும். இதை எல்லாம் அனுபவித்து ஆனந்தக் குளியலிடுவதற்காகவே ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் சீசன் அமோகமாக இருந்தது. அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது. ஆனால், தென் மேற்குப் பருவமழை கேரளாவில் மட்டும் அல்லாமல் தமிழக எல்லையிலும் பெய்யாமல் ஏமாற்றம் ஏற்பட்டது.

குற்றாலம் சாரல் திருவிழா

இதனால் அருவிகளில் நீர்வரத்து குறைந்து விட்டது. மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவற்றில் மட்டுமே பாறைகளில் வழிந்தபடி தண்ணீர் வருகிறது. பிற அருவிகள் வறண்டு கிடக்கின்றன.

குற்றால சீசனின் முக்கிய அடையாளமான சாரல் மழை பெய்யவில்லை. இதமான தென்றல் காற்றுக்கும் இடமில்லை. இதனால் சீசன் களையிழந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் வருகையும் கணிசமாகக் குறைந்து விட்டது.

வழக்கமாக, குற்றாலத்தில் சீசன் களைகட்டி உச்சத்தில் இருக்கும் காலங்களில் தமிழக அரசின் சார்பாக 'சாரல் திருவிழா' நடத்தப்படுவது வழக்கம். ஆனால், சாரலே இல்லாத நிலையிலும் இந்த விழாவானது வெறும் சடங்காக நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இன்று (ஜூலை27-ம் தேதி) மாலை குற்றாலத்தில் உள்ள கலைவாணர் கலையரங்கில் சாரல் திருவிழா தொடங்குகிறது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடக்கும் இந்த விழாவில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ,  சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அரசின் முதன்மைச் செயலாளர் அபூர்வா வர்மா மற்றும் எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழா இன்று தொடங்கி 8 நாட்கள் நடக்கிறது. நாள்தோறும் கிராமியக் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம், நகைச்சுவை நிகழ்ச்சிகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன. அருவிகளில் தண்ணீர் இல்லாததால் கூட்டமே இல்லாத குற்றாலத்தில் கலைநிகழசிகளை நடத்துவது யாருக்காக என்கிற கேள்வி எழுந்துள்ளது.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close