Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விடுதலைப் புலிகளுக்கான தடை நீக்கத்தை இந்தியாவும் பின்பற்றவேண்டும் என்கிறார் கருணாஸ்!

கருணாஸ்

“ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் விடுதலைப் புலிகளுக்கான தடையை நீக்கிய தீர்ப்பை இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பின்பற்ற வேண்டும்” என முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் குரல் கொடுத்துள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாதிகள் பட்டியலில் 2006-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியன் சேர்த்தது. தீவிரவாத இயக்கம் என ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்குத் தடைவிதித்தனர். இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011-ம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பினை ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று நீதிமன்றம் வெளியிட்டது. அதில் “2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கபட்ட தடையை நீக்குவதாக” தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை வரவேற்று கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றம் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தடையை நீக்கி அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பு தமிழர்களுக்கான ஜனநாயகத் தீர்ப்பு. அந்தத் தீர்ப்பில் நீதிமன்றம் சொல்லியிருக்கும் உண்மையான காரணம் 2009-ம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பு செயல்படவில்லை. அந்த அமைப்பின் பெயரில் எந்த வன்முறையும் எங்கும் நடைபெறவில்லை. எனவே, அந்த அமைப்பின் மீதான தடை தேவையற்றது. இந்தத் தீர்ப்பை இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். ஐரோப்பிய நீதிமன்றம் விடுதலைப் புலிகள் அமைப்புப் பற்றி கூறியுள்ள உண்மை இந்தியாவுக்கும் பொருந்தும். இந்தியா மட்டுமின்றி ஏனைய நாடுகளுக்கும் பொருந்தும். ஈழத் தமிழர்களுடன் இன உணர்வு கொண்ட 9 கோடி தமிழர்கள் இந்தியாவில் வாழ்கின்றோம். எனவே, தமிழர்களின் உணர்வுகளையும் இந்திய அரசு புரிந்துகொண்டு விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். 

ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எடுத்துக்காட்டி விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க தமிழ்நாடு அரசும், மத்திய அரசை வலியுறுத்த வேண்டும். விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு மக்கள் இயக்கம். தேசிய இன விடுதலை இயக்கம். ஆனால், அதைப் பயங்கரவாத இயக்கங்களோடு சேர்த்து தடைவிதித்து ஒரு பின்னடைவை ஏற்படுத்திவிட்டார்கள். அமெரிக்க ஆதரவு நாடுகள் பயங்கரவாத இயக்கங்களுக்கு எதிராக பல நாடுகளை ஒருங்கிணைத்தபோது, அமெரிக்கா அதனை விடுதலைப் புலிகள் பக்கம் திருப்பிவிட்டது. அதனால்தான் இவ்வளவு பெரிய பின்னடைவு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உண்டானது என்பதை அனைவரும் அறிவர். தமிழீழ இனம் ஒரு நல்ல எதிர்காலத்தை நோக்கி நகர்கிறது என்பதற்கு சான்று இந்தத் தீர்ப்பு” என்று தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close