Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"என் தொகுதிக்குள் மணல் அள்ளுபவர்கள் தேசத் துரோகிகள்!" - கொதிக்கும் எம்.எல்.ஏ.

மணல்

"ஈரோடு மாவட்டம் பெருந்துறை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல பகுதிகளில் சம்பந்தப்பட்ட அரசுத் துறையிடம் அனுமதிபெறாமல் குளங்களில் தூர்வாருவதாகச் சொல்லி மண் அள்ளிச் செல்கிறார்கள். 'அது முறையாக விவசாய நிலத்துக்குத்தான் செல்கிறதா? இல்லை, விற்பனைக்குச் செல்கிறதா?' என்று தெரியவில்லை. என் தொகுதிக்குள் அரசிடம் அனுமதிபெறாமல் மண்ணை அள்ளுகிறவர்கள் தேசத்துரோகிகள். அவர்கள்மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாசலம், ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்திருக்கிறார். அதையடுத்து, ஊர் மக்கள் கலெக்டரைச் சந்தித்து குளங்களைத்  தூர்வார அனுமதிக் கடிதம் கொடுத்தார்கள்.

இதுபற்றி முத்துகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி, ''நாங்கள் காஞ்சிக்கோவில் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர்கள். எங்க ஊரில் ஐந்து ஏக்கரில் குளம் இருக்கிறது. இந்தக் குளம் நீண்டகாலமாகத் தூர்வாரப்படாமல் தூர்ந்துபோய்க் கிடக்கிறது. எங்கள் பகுதியில் குடிப்பதற்கும், விவசாயத்துக்கும் தண்ணீர் இல்லாமல் தென்னை மற்றும் பனை மரங்களெல்லாம் கருகி விட்டன. குளத்தை தூர்வாரி வைத்தால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி நிற்கும். நிலத்தடி நீர் மட்டமும் உயரும் என்பதால் ஊர்க்கூட்டம் போட்டு, எங்களுடைய கைக்காசைச் செலவுசெய்து குளத்தை தூர்வாரினோம்.

தோப்பு வெங்கடாசலம்ஆனால், எங்க தொகுதி எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாசலம், 'ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று குளத்து மண்ணைத் திருடுகிறார்கள். குளத்தில் இருந்து மண்ணை அள்ளுபவர்கள் தேசத் துரோகிகள். மண் எடுப்பதைத் தடுத்து நிறுத்தி அவர்கள்மீது வழக்குப்போட வேண்டும்' என்று புகார் கொடுத்திருக்கிறார். பின்னர் நாங்கள், கலெக்டரைச் சந்தித்து எங்கள் குறைகளை எடுத்துச்சொல்லி குளத்தைத் தூர்வார அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்க வந்துள்ளோம். தோப்பு வெங்கடாசலம் தொகுதிக்குள் இருக்கும் மலையையும், மண்ணையும் வெட்டி சம்பாதித்தவர். சென்னிமலை, கருமாண்டி செல்லிபாளையம் மலையை வெட்டிப் பணம் சம்பாதித்தார். அவர், எங்களைப் பார்த்து மண்ணைத் திருடுகிறார்கள் என்றும், தேசத்துரோகிகள் என்றும் சொல்கிறார். அப்படிச் சொல்வதற்கு அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை'' என்றார்.

மற்றொரு கிராமவாசி பரமேஸ்வரன், ''நான் முத்துகவுண்டன்பாளையத்தைச் சேர்ந்தவன். எங்க ஊரில் மட்டுமல்ல; எங்க ஊரைச் சுற்றியுள்ள நல்லாம்பட்டி, வீரணம்பாளையம், பட்டக்காரன்பாளையம் போன்ற ஊர்களில் உள்ள குளங்களை எல்லாம், அந்தந்த ஊர் மக்களேதான் தூர் வாரிக் கொண்டிருக்கிறோம். அவர்களைப்போல நாங்களும் குளத்தைத் தூர்வாரினோம். வாய்க்காலில் தண்ணீர் வந்தால் குளத்தில் தண்ணீர் தேக்கி வைக்க முடியும். அதற்காகத்தான் குளத்தில் இருந்து மண்ணை அள்ளி தூர்வாரினோம். மண்ணை யாரும் விற்கவில்லை. விவசாய நிலத்துக்குத்தான் பயன்படுத்தினோம். எம்.எல்.ஏ., சொல்வதைப் போல, மண்ணை நாங்கள் யாரும் திருடவும் இல்லை; விற்கவும் இல்லை' என்றார்.

பெருந்துறை எம்.எல்.ஏ., தோப்பு வெங்கடாசலம், ''நாலு பேர் தூண்டுதல் காரணமாக கிராம மக்கள் செயல்படுகிறார்கள். குளத்திலோ, ஏரியிலோ மண் அள்ளவேண்டும் என்றால் அனுமதி பெற்றே அள்ளவேண்டும். ஆனால், இவர்கள் யாரிடமும் அனுமதி பெறாமல் மண் அள்ளி ஒரு டிராக்டர்,  ஆயிரம், இரண்டாயிரம் ரூபாய் என விற்கிறார்கள். சில பத்திரிகைகளில் சமூக விரோதிகளோடு எம்.எல்.ஏ. கைகோக்கிறாரா? என்று எழுதினார்கள். அதன்பிறகுதான் ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்குச் சென்று ஏரியில், குளத்தில் மண் அள்ளுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்; அரசின் சொத்தை அனுமதி பெறாமல் அபகரிப்பவர்களை தேசத் துரோகிகள் என்று சொன்னேன். அவர்களுக்கு பின்னாடி அரசியல் பின்புலம் இருக்கிறது. அது எங்க கட்சியைச் சேர்ந்த முக்கியப் பிரமுகராகத்தான் இருப்பார் என கருதுகிறேன். இந்த சம்பவத்துக்கும் மற்ற கட்சிக்கும் எந்தத்தொடர்பும் இல்லை. எல்லாம் எங்க கட்சி ஆட்கள் செய்யும் வேலைதான்'' என்றார்.

பெருந்துறை தொகுதியில் என்னதான் நடக்கிறது?

படங்கள் : ரமேஷ் கந்தசாமி

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close