Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'ஹெல்மெட் இல்லாமல் சிக்கினால், உங்கள் இரண்டு மணி நேரம் திருடப்படும்!’ - ஒரு ஸ்ட்ரிக்ட் போலீஸ்

நிலவேம்பு கசாயம் பருகும் போலீஸார் 

சென்னையில் ஹெல்மெட் இல்லாமல் சிக்குபவர்களுக்கு, இரண்டு மணி நேரம் விழிப்பு உணர்வு வகுப்புகளைப் போக்குவரத்துப்பிரிவு போலீஸார் எடுத்துவருகின்றனர். இதனால், ஹெல்மெட் இல்லாத பயணம் குறைந்துவிட்டதாக போலீஸார் தெரிவித்தனர். 

 சமீபத்தில் சென்னை அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர், தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அவரின் நண்பரிடம் பகிர்ந்துள்ளார். அப்போது, 'அண்ணா நகர் பகுதியில் மட்டும் ஹெல்மெட் இல்லாமல் போயிடாத மச்சான், அபராதத்தைக்கூட செலுத்திவிடலாம், போலீஸார் எடுக்கும் இரண்டு மணி நேர வகுப்பைச் சமாளிக்க முடியாது' என்று சொல்லிக் கொண்டிருந்தார். அந்தத் தகவல் நமக்கு கிடைத்ததும், சென்னை போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) ஈஸ்வரனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். 

 ஹெல்மெட் அணியாமல் போலீஸிடம் சிக்குபவர்களுக்கு அபராதத்துடன் ஸ்பெஷல் கிளாஸ் நடத்தப்படுவதாகத் தகவல் உள்ளதே?

 "இருசக்கர வாகன ஓட்டுபவர்களுக்கு அபராதத்தைவிட ஹெல்மெட் அணிவது தொடர்பான விழிப்பு உணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது குறிக்கோள். ஹெல்மெட் இல்லாமல் பயணிக்கும் 2,500-க்கும் மேற்பட்டவர்கள் மீது தினமும் வழக்குப்பதிவு செய்யப்படுகிறது. அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்று ஹெல்மெட் இல்லாமல் நடந்த விபத்துகள் குறித்த வீடியோ காட்சிகளையும் விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்திவருகிறோம். அதைப்பார்த்த பலரும் பயனுள்ளதாக இருக்கிறது என்று எங்களிடம் தெரிவித்துள்ளனர்"

 சாலை போக்குவரத்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் போலீஸ்

விபத்துகளைக் குறைக்க என்ன நடவடிக்கை எடுத்துவருகிறீர்கள்?

 "விபத்துகளைக் குறைக்க பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறோம். விபத்து நடந்தவுடன் அதுகுறித்து ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி விபத்துகளைத் தவிர்க்கும் நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துகள் நிகழ்ந்தன. இதையடுத்து என்னுடைய கட்டுப்பாட்டில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையை ஆய்வு நடத்தி அதன் அறிக்கையைப் போக்குவரத்துப்பிரிவு இணை ஆணையர், கூடுதல் கமிஷனர் மற்றும் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு அனுப்பி வைத்தேன். அவர்களின் பரிந்துரைப்படி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்க தடுப்புகள் ஏற்படுத்துவது, போக்குவரத்து மாற்றம், கூடுதல் போக்குவரத்து போலீஸார் நியமனம், சாலையை மேம்படுத்துவது என நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சென்னைஅம்பத்தூரிலிருந்து கொரட்டூர், பாடி வரையிலான சென்னை திருவள்ளூர், நெடுஞ்சாலையில் (சிடி.எச்) போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் நடப்பதைத் தவிர்க்க சில மாற்றங்களைச் செய்துள்ளோம். குறிப்பாக, அந்தச் சாலையில் தேவையில்லாத இடங்களில் உள்ள சாலையைக் குறுக்கே கடந்துசெல்லும் வழிகளை மூடியுள்ளோம். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் குறைந்துள்ளது" 

 சென்னை கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

 "வடபழனி, பெருங்களத்தூர் உள்ளிட்ட 20 வழித்தடங்களிலிருந்து வரும் சென்னை மாநகர பஸ்களால் 100 அடிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க தேர்தல் ஆணைய அலுவலகம் அருகில் தற்காலிக பஸ் நிழற்குடைகளை அமைத்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இன்னும் சில வாரங்களில் இது நடைமுறைக்கு வந்துவிடும். மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் மூன்று இடங்களில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, நடைமுறைக்கு வந்தால் கோயம்பேடு பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும். அண்ணாநகர் ஆர்ச் பகுதியில் நடந்த விபத்தைத் தவிர்க்க ஸ்கை வாக்கிலிருந்து வாகனங்களைத் தடுக்க தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன"  
 

போரூர் ஏரியை சுத்தப்படுத்திய போலீஸ் கமிஷனர்

சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், சமூக சேவையில் ஈடுபடுகிறாரே?

 "போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் சார், கோயம்புத்தூரில் கமிஷனராகப் பணியாற்றியபோது நான் அங்கு தலைமையக துணை கமிஷனராப் பணியாற்றினேன். போலீஸ் பணியோடு விஸ்வநாதன் சார், சமூக பணிகளிலும் அதிக ஆர்வம் உள்ளவர். கோயம்புத்தூரில் வீட்டு வசதி வாரிய வீடுகள் பழுதடைந்திருந்த தகவல் கிடைத்ததும் தனியார் பங்களிப்புடன் அந்த வீடுகளில் மராமத்துப்பணிகளைச் செய்ய ஏற்பாடு செய்தார். அடுத்து, போரூர் ஏரியைச் சுத்தப்படுத்தியதைப்போல கோயம்புத்தூரிலும் நீர்நிலைகளைச் சுத்தப்படுத்தியுள்ளார். சென்னையில் மரங்கள் நட இடமுள்ள போலீஸ் நிலையங்களில் மரம் வளர்க்க கமிஷனர் வாய்மொழியாகத் தெரிவித்துள்ளார். அதன்படி நாங்களும் மரங்களை நட்டுள்ளோம். காய்ச்சலால் போலீஸார் பாதிக்கப்பட்ட தகவல் கிடைத்ததும் போலீஸாருக்கு நிலவேம்பு கசாயத்தை விநியோகிக்க கமிஷனர் ஏற்பாடு செய்துள்ளார்" 

 சென்னையில் அதிகளவில் பைக் ரேஸ் மற்றும் தாறுமாறாக வாகனங்கள் இயக்கப்படுவதற்கு எதாவது நடவடிக்கை எடுத்துள்ளீர்களா?

 "கடந்த ஜூலை மாதத்தில்தான் போக்குவரத்துப் பிரிவு துணை கமிஷனராகப் பதவி ஏற்றேன். உடனடியாக பைக் ரேஸ் மற்றும் தாறுமாறாக வாகனங்களை இயக்குபவர்களிடம் விழிப்பு உணர்வு ஏற்படுத்த 100 போலீஸாருடன் பேரணி நடத்தப்பட்டது. பைக் ரேஸ் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறோம். பள்ளிகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில்கூட போக்குவரத்து குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்திவருகிறோம்."

ஜூலை வரை 3,72,525 வழக்குகள் 

 சென்னை போக்குவரத்து பிரிவு மேற்கில் மட்டும் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை 3,72,525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாக 6,036 பேரும், ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதாக 80,074 பேரும், அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாக 11,033 பேரும் சிக்கியுள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் 732 பேர் குடிபோதையில் வாகனங்களை ஓட்டியதாகவும் 12,362 ஹெல்மெட் இல்லாமல் வாகனங்களை ஓட்டியதாகவும், 2,059 பேர் அதிவேகமாக வாகனங்களை ஓட்டியதாகவும் என 56,999 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close