Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கரூரில் கணினி மையத் தேர்வுக்களம்... டிரைவிங் லைசென்ஸ் நடைமுறையில் புது முயற்சி!

டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்காக, வாகனம் ஓட்டிக் காண்பிக்கும் கணினிமயமாக்கப்பட்ட அதிநவீன தேர்வுக்களம் தமிழகத்திலேயே முதன்முறையாக கரூரில் அமைக்கப்படுகிறது. லைசென்ஸ் பெற வரும் வாகன ஓட்டிகள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் 'பீப்' ஒலி எழுப்பி எச்சரிக்கை செய்யும் வகையில் அதிநவீன முறையில் இந்த கணினி மயமாக்கப்பட்ட தேர்வுக்களம் அமைக்கப்பட இருக்கிறது. இந்தத் திட்டம் வெற்றி அடைந்தால், முதல்கட்டமாக 14 மாவட்டங்களில் இதை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

driving license

இதுகுறித்து, கரூர் வட்டார போக்குவரத்து அலுவலக வட்டாரத்தில் விசாரித்தோம்.

"தற்போது ஆன்லைன் புக்கிங் மற்றும் தானியங்கி ஓட்டுநர் பயிற்சித் தேர்வுக்கள வசதி வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் மட்டுமே அமைந்துள்ளது. டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு முதலில் ஓட்டுநர் பயிற்சிக்கான லைசென்ஸ் பெற்ற பிறகு ஆறு மாதங்களுக்குள் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தகுதித் தேர்வுக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் முன்னதாக ஆன்லைன் மூலம் பதிவு செய்து, அறிவிக்கப்பட்ட நாளில், தேர்வில் பங்கேற்கும் வசதி தற்போது உள்ளது. அதேபோல், இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸுக்கு மேடான சாலையில் நிறுத்தி, பின்னர் பின்னோக்கி வண்டி நகராமல் மீண்டும் இயக்கும் தகுதி, ரிவர்ஸ் பார்க்கிங், ஆங்கில ஹெச் எழுத்து வடிவ வழித்தடத்தில் பிழையின்றி இயக்குவது உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

 டிரைவிங் லைசென்ஸ்

வாகனத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அமர்ந்திருக்க, தேர்வாளர் ஓட்டிக் காண்பிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நடைமுறை. இதனால்,வாகனம் ஓட்டிக் காண்பிப்பவர் பல நேரங்களில் பக்கத்தில் ஆள் இருக்கிறதே என்று பதற்றப்பட நேரிடுகிறது. இப்போது அமைய இருக்கும் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுக்களத்தில் எந்தவித பதற்றமும் இன்றி வாகன ஓட்டிகள் வாகனத்தை ஓட்டிக் காண்பிக்கலாம். தேர்வுக்குத் தயாராகும் நபர் காரில் தனியாக இருக்க, பச்சை விளக்கு எரிந்ததும் தேர்வுக்கான வழித்தடத்தில் காரை இயக்க வேண்டும். வாகனம் சிக்னலை கடந்ததும், அவர் பயணிக்கும் நேரம் கணக்கிடப்படுகிறது. காரை ஓட்டும்போது ஏதாவது ஓர் இடத்தில் தவறு செய்தாலும், வழித்தடத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் அதை கம்ப்யூட்டரில் காண்பிக்கும். மேலும், சம்மந்தப்பட்ட வாகனம் பயணிப்பது முழுவதும் வீடியோ பதிவும் செய்யப்படுகிறது. பயணித்த நேரம், எத்தனை சென்சார்களில் அவர் தவறு செய்துள்ளார் என்பதைப் பொறுத்து மதிப்பெண் வழங்கப்பட்டு, அவர் லைசன்ஸ் பெற தகுதி உள்ளவரா எனத் தீர்மானிக்கப்படும். அதேபோல்,வாகன ஓட்டிகள் செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் பீப் ஒலி எழுப்பி, எச்சரிக்கை செய்யும். 


 டிரைவிங் லைசென்ஸ்

இத்தகைய தானியங்கி வாகன ஓட்டுநர் தேர்வுக்களம் நாட்டில் முதன்முதலாக கேரளாவில் உள்ள கண்ணூரில் தொடங்கப்பட்டது. அடுத்து குஜராத், ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் சிசிடிவி மற்றும் சென்சார் வசதியுடன் கூடிய முதல் கணினி மயமாக்கப்பட்ட தேர்வுக்களம் கரூரில் அமைக்கப்படுகிறது. சுமார் 25 லட்சம் ரூபாய் செலவில் இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிட்டன. கரூரில் அமைக்கப்படும் கணினி மயமாக்கப்பட்ட அதிநவீன தேர்வுக்களம் சிறப்பாக அமைந்தால், அத்தகைய கணினி மயமாக்கப்பட்ட தேர்வுக்களங்கள் தமிழகத்தில் உள்ள 14 மாவட்டங்களில் முதல்கட்டமாக விரிவுபடுத்தப்படும்" என்றார்கள்.


 

இத்தகைய கணினித் தேர்வுக்களம் அமைந்தால் விரைவாக லைசன்ஸ் வழங்கப்படும். முறைகேடுகளும் தடுக்கப்படும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close