Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மாஞ்சோலையில் வெடித்த நாட்டு வெடிகுண்டு! -தீவிரவாதிகளின் நாசவேலையா என விசாரணை

உமேஷ்

நெல்லை மாவட்டம் மாஞ்சோலை எஸ்டேட் பகுதியில், நாட்டு வெடிகுண்டு வெடித்து விலங்குகள் ஆய்வாளர் ஒருவர் காயமடைந்தார். இதன் பின்னணியில் தீவிரவாதிகள் உள்ளார்களா? என விசாரணை நடக்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலைப் பகுதியில், இந்தோ-பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் எஸ்டேட் உள்ளது. குளிர்ச்சியான இந்தப் பகுதியில் தேயிலை, மிளகு உள்ளிட்டவை வளர்க்கப்படுகின்றன. இந்த எஸ்டேட்டில் தேயிலையை உலரவைத்து தூளாகத் தயாரிக்கும் ஆலையும் உள்ளது. களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகமும் இதைச் சுற்றியே அமைந்துள்ளது. 

மாஞ்சோலை எஸ்டேட் தனியார் பராமரிப்பில் இருப்பதாலும், இந்தப் பகுதியில் புலிகள் காப்பகம் அமைந்திருப்பதாலும் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. வனத்துறையின் அனுமதி இல்லாமல் இதன் உள்ளே யாரும் நுழைந்து விட முடியாது. இந்த நிலையில், மாஞ்சோலையில் இன்று நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம், பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதில், உமேஷ் என்பவர் காயமடைந்தார்.

கேரளாவைச் சேர்ந்த உமேஷ், வனத்துறையின் அனுமதியுடன் மாஞ்சோலை பகுதியில் முகாமிட்டு, வன விலங்குகள், பறவைகள் குறித்து ஆய்வுசெய்துவருகிறார். அவர், வழக்கம்போல வனப்பகுதிக்குள் சென்றபோது, புதர்களுக்குள் பறவையின் சிறகு போன்ற பொருள் கிடந்துள்ளது. அதைச் சுற்றிலும் ஈக்கள் மொய்த்ததால், அது என்ன பொருள்? என்று சரிவரத் தெரியவில்லை. அதனால், ஈக்களை விரட்டுவதற்காக அந்தப் பொருளின் மீது சிறிய கல்லை வீசியுள்ளார். அதன் மீது கல் பட்டதும் பலத்த சத்தத்துடன் வெடித்துள்ளது.

இதில், உமேஷின் கையில் காயம் ஏற்பட்டது, உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. அங்கு வெடித்த பொருள், நாட்டு வெடிகுண்டு என்பதை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன், மேலும் சில வெடிக்காத நாட்டு வெடிகுண்டுகளையும் அந்தப் பகுதியிலிருந்து வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நாட்டு வெடிகுண்டு எப்படி வந்தது என்பது மர்மமாக இருப்பதால், வனத்துறையினரும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம் இருந்ததா என எஸ்டேட்டில் பணிபுரியும் ஊழியர்களிடம் விசாரிக்கப்பட்டுவருகிறது. இதனிடையே, எஸ்டேட்டில் பயிரிடப்பட்ட உணவுப் பொருள்களை காட்டுப் பன்றிகள் அழிப்பதால் அவற்றைக் கட்டுப்படுத்த நாட்டு வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். 

வனப்பகுதியில் வெடித்த நாட்டு வெடிகுண்டு தொடர்பான சர்ச்சையின் பின்னணியில் உள்ள உண்மை, தீவிர விசாரணைக்குப் பின்னரே தெரியவரும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close