Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து தி.மு.க. ஒருபோதும் தப்ப முடியாது' - அன்புமணி

கதிராமங்கலம் சீரழிவு பாவத்திலிருந்து தி.மு.க. ஒருபோதும் தப்ப முடியாது என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி காட்டமாக
கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகளை வெட்டுவதற்கான ஆய்வு நடத்த மட்டுமே தி.மு.க ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாகவும், எண்ணெய்க் கிணறுகளை அமைப்பதற்கான நிலக்குத்தகை உரிமத்தை வழங்கியது அ.தி.மு.க அரசுதான்’ என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார். கதிராமங்கலம் மக்களுக்கு செய்த துரோகத்தை மூடி மறக்கும் இம்முயற்சி கண்டிக்கத்தக்கது.

எந்த நன்மையாக இருந்தாலும் தீமையாக இருந்தாலும் அதற்கு ஓர் தொடக்கப்புள்ளி ஒன்று உண்டு. அதை வைத்தது யாரோ அவர்கள்தான் அத்திட்டத்தின் காரணகர்த்தா என்பது உலகமறிந்த உண்மை. அந்த வகையில் கதிராமங்கலத்தில் எண்ணெய்க் கிணறுகள் தோண்டுவது குறித்து ஆய்வு செய்ய அனுமதி அளித்த தி.மு.க அரசும், எண்ணெய்க் கிணறு தோண்ட குத்தகை உரிமம் வழங்கிய அ.தி.மு.க அரசும்தான் பொறுப்பேற்க வேண்டும். மாறாக, ஆய்வு செய்ய அனுமதி அளித்த தி.மு.க அரசுக்கு கதிராமங்கலம் பாவத்தில் பங்கு கிடையாது என்று செயல் தலைவர் ஸ்டாலின் கூறுவது, ‘‘அரளி விதையை அரைத்துக் கொடுத்தது மட்டும்தான் நான். வாயில் திணித்தது அவன்தான் என்பதால் கொலைக் குற்றத்தில் எனக்கு பங்கு இல்லை, நான் நிரபராதி’’ என்று கூறுவதைப் போன்று உள்ளது. கதிராமங்கலத்தில் மட்டுமல்ல, நெடுவாசல், நாகை மற்றும் கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய பெட்ரோலிய மண்டலம் உள்ளிட்ட அனைத்துத் திட்டங்களுக்கும் அனுமதி அளித்தது தி.மு.க அரசுதான். அதுமட்டுமின்றி, தஞ்சாவூர், திருச்சி, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மொத்தம் 7049.70 சதுர கி.மீ பரப்பளவில் அகழ்வாராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கு 28.08.1989 அன்று அனுமதி அளித்ததும் தி.மு.க அரசுதான். இவ்வளவு துரோகங்களையும் செய்துவிட்டு, ஒரு பாவமும் செய்யாத அப்பாவி போன்று நடிப்பதைத் தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

தி.மு.க-வின் திட்டத்தை அ.தி.மு.க செயல்படுத்தியது ஏன்? என்று நண்பர் மு.க.ஸ்டாலின் வினவுகிறார். தி.மு.க ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதிக்கப்பட்ட கதிராமங்கலம் திட்டம் 2001-ம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கியது. அதன்பின் 2006-ம் ஆண்டு மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்த தி.மு.க 2011-ம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தது. இந்தக் காலத்தில் மத்திய அரசிலும் தி.மு.க-தான் அங்கம் வகித்தது. அதைப் பயன்படுத்தி கதிராமங்கலம் திட்டத்தை தி.மு.க ரத்து செய்திருக்க முடியும். ஆனால், அவ்வாறு செய்யத் தவறியது ஏன்? என்பதைச் செயல் தலைவர் ஸ்டாலின் விளக்க வேண்டும். இப்போதும்கூட ஒன்றும் குறைந்துவிடவில்லை. காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டால் அப்பகுதியில் ஹைட்ரோகார்பன், மீத்தேன், பாறை எரிவாயு உள்ளிட்ட எந்த திட்டங்களையும் செயல்படுத்த முடியாது. எனவே, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதற்கான சட்ட மசோதாவைத் தமிழக சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்றுவதற்கு செயல் தலைவர் ஸ்டாலின் தயாரா?

தி.மு.க ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டதற்காக மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு சொந்தம் கொண்டாடும் ஸ்டாலின், தி.மு.க ஆட்சியில் ஆய்வுக்கு அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மட்டும் பொறுப்பேற்க மறுப்பது எந்த வகையான நியாயம் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வரும்போதெல்லாம் ஈழத்தமிழர்களுக்கும் தமிழகத் தமிழர்களுக்கும் துரோகம் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் கட்சி தி.மு.க. கதிராமங்கலம், நெடுவாசல், நாகை, கடலூர் மாவட்டங்களில் பெட்ரோலிய மண்டலம் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படவுள்ள மக்கள் ஆகியோருக்கு செய்த பாவங்களிலிருந்து தி.மு.க ஒருபோதும் விடுபட முடியாது. தி.மு.க செய்த பாவங்களுக்கு மக்கள் விரைவில் தண்டனை அளிப்பர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close