Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘ஏறிவந்த ஏணியைத் தூக்கி எறியலாமா?!’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திடீர் எதிர்க்குரல்

 எம்.நடராஜனுடன்  நாகூர் நஜிமுதின்

பி.ஜே.பி.யிடம் அ.தி.மு.க-வை அடகு வைக்க சிறுபான்மை சமுதாயத்தினர் ஓட்டுப்போடவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகக் குரல்கொடுத்துள்ளார் அகில உலக அம்மா பேரவை அமைப்பாளர் நாகூர் நஜிமுதின்.

அ.தி.மு.க-வில் சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, தீபா அணி ஆகியவை உருவாகியுள்ளன. இதனால் அ.தி.மு.க-வில் கோஷ்டி பூசல் தலைவிரித்தாடுகிறது. கட்சிப் பணிகளிலிருந்து சில மாதங்கள் ஒதுங்கியிருந்த டி.டி.வி.தினகரன் ஆகஸ்ட் 5-ம் தேதி, கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வரவுள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையே நடந்த மோதல் தீவிரமடைந்துள்ளது. 

தினகரன் விவகாரம் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அவரின் ஆதரவாளர்களும் ஆலோசனையில் உள்ளனர். தினகரன் தலைமையில் அவரின் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்துக்குச் செல்வது தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். மூன்று அணிகளைச் சேர்ந்தவர்கள் நடத்தும் ஆலோசனை, அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய அணிகளின் செயல்பாடுகள், பா.ஜ.க.வைச் சார்ந்தே உள்ளது. எந்த முடிவு எடுக்க வேண்டும் என்றாலும் பிரதமர் மோடியைச் சந்தித்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இது, எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  திவாகரனுடன்  நாகூர் நஜிமுதின்

இதுகுறித்து அகில உலக அம்மா பேரவையின் அமைப்பாளர் நாகூர் நஜிமுதின் கூறுகையில், "ஜெயலலிதாவுக்காகத்தான் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைக்க அ.தி.மு.க-வுக்கு மக்கள் வாக்களித்தனர். குறிப்பாக, கிறிஸ்துவர்கள், முஸ்லிம்கள் என சிறுபான்மை மக்கள், பா.ஜ.க-வுக்கு எதிரான முடிவை எடுக்க அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப்போட்டனர். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் செயல்பாடு முற்றிலும் மாறிவிட்டது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடியுடன் இன்றுவரை நட்புடன் இருக்கிறார். அவருக்குப் போட்டியாக சசிகலாவால் அடையாளம் காட்டப்பட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமருடன் நெருக்கத்தில் இருக்கிறார். பி.ஜே.பி.யிடம் அ.தி.மு.க-வை அடகுவைக்க உண்மையான தொண்டர்கள் எப்போதும் சம்மதிக்க மாட்டார்கள். சட்ட சபையில் ஜெயலலிதா பேசும்போது, 'நான் இல்லையென்றாலும் அ.தி.மு.க. பல நூறாண்டுகள் இருக்கும்' என்றார். ஆனால், அவரது பேச்சுக்கு இன்று பதவியிலிருப்பவர்களால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும், பதவிக்காகவும் சுயநலத்துக்காகவும் அ.தி.மு.க-வை அழிக்க சிலர் முயல்கின்றனர்" என்றார் ஆவேசமாக.

 நீங்கள் சசிகலா குடும்பத்தினருக்கு ஆதரவாகப் பேசுகிறீர்களே?

“பதவிக்காக ஏறிவந்த ஏணியைத் தூக்கி எறிந்தவர்களுக்கு நேர்ந்த கதியைச் சம்பந்தப்பட்டவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டும். இது, அ.தி.மு.க-வில் மட்டுமல்ல அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஓ.பன்னீர்செல்வத்தையும் முதல்வர் இருக்கையில் அமர வைத்ததில் சசிகலாவுக்கு முக்கிய பங்கு உள்ளது. மேலும், இன்றைய அமைச்சரவையில் சசிகலா குடும்பத்தினரால் கை காட்டப்பட்டவர்களே அமைச்சர்களாக உள்ளனர். அவர்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் ஒருங்கிணைத்து செயல்பட முடியாது. சசிகலா குடும்பத்தினரால் பதவி, கட்சி பொறுப்புகளைப் பெற்றவர்கள் நிச்சயம் துரோகம் செய்ய மாட்டார்கள். ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக சசிகலா குடும்பத்தினர்களுக்கே அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் கட்டுப்படுவார்கள்."

 சசிகலா குடும்பத்தினருக்கு அ.தி.மு.க.வில் கடும் எதிர்ப்புகள் உள்ளதே?

“எல்லோரையும் எல்லோருக்கும் பிடிப்பதில்லை. அதுபோலதான் சசிகலா குடும்பத்தினரை தொண்டர்களில் சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம். ஆனால், செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில்தான் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். சசிகலாவை முதல்வராக்க முன்மொழிந்ததும் தற்போதுள்ள பதவியில் உள்ள அமைச்சர்கள்தான். அப்போது, சசிகலா குடும்பத்தினரை அவர்களுக்குப் பிடித்திருந்தது. இப்போது பிடிக்காததற்கு என்ன காரணம்?. அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே. தினகரன், கட்சி அலுவலகத்துக்கு வந்தால், அவருக்குப் பின்னால் அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் நிச்சயம் வருவார்கள். அந்தப்பயத்தில்தான் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. சசிகலா குடும்பத்தினருக்கு எதிராக முடிவெடுத்தால் அவரது ஆதரவு அமைச்சர்களால் சிக்கல் நிச்சயம் ஏற்படும்."

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணையுமா?
 
 "அ.தி.மு.க. ஒன்றாக இணைய வேண்டும் என்பதே ஒவ்வொரு தொண்டனின் எதிர்பார்ப்பு. இரண்டு அணிகளும் இணைந்து ஒற்றுமையாகக் கட்சியை வளர்ச்சிப்பாதையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அழைத்துச் செல்ல வேண்டும்.  இரண்டு அணிகள் இணைவது குறித்த முடிவு சில தினங்களில் தெரிந்துவிடும்."

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close