Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்சியில் மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது தடியடி 

திருச்சியில் மணல் குவாரிக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள்மீது தடியடி நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது. 

மணல் குவாரி

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே கிளியநல்லூர், திருவாசி, கரியமாணிக்கம் சிறுகாம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் உள்ள அரசு மணல் குவாரிகள் இயங்கி வருகின்றன. இந்த குவாரிக்கு மணல் எடுக்க வெளி மாவட்டங்களிலிருந்து தினமும் 1500-க்கும் மேற்பட்ட லாரிகள் வருகின்றன. அப்படி வரும் லாரிகளால், அப்பகுதியில் உள்ள திருச்சி-முசிறி நெடுஞ்சாலையில் பலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது எனக் குற்றச்சாட்டு உள்ளது. 

இதனைச் சரிசெய்ய மாவட்ட நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் கொடுத்துவந்தனர். இந்த மணல் குவாரிகள் தொடர்பாக அப்பகுதி மக்கள், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர், அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைப் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் மணல் லாரிகளின் தொல்லைகள் குறையவில்லை. இந்நிலையில், இன்று காலை கல்லூரிக்கும், அலுவலகத்துக்கும் முசிறி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகள், பள்ளி மாணவர்கள், அப்பகுதி பொதுமக்கள், அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என 800-க்கும் மேற்பட்டவர்கள், முசிறி-திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு வந்த வாத்தலை காவல் நிலையப் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மணல் குவாரிகளை கட்டுப்படுத்தாத வரையில் இப்பகுதி மக்களுக்கு பிரச்னை குறையாது என மக்கள் கோபமாக போலீஸாரிடம் பேசினர். தொடர்ந்து அப்பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதில் கடுப்பான போலீஸ் உயரதிகாரிகள், பொதுமக்கள் மீது தடியடி நடத்திக் கலைக்க உத்தரவிட்டனர். 
இதனையடுத்து போலீஸார், பொதுமக்கள் மீது தடியடி நடத்தி, கூட்டத்தை அப்புறப்படுத்தினர். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய பொதுமக்கள், 

“இங்கு செயல்படும் மணல் குவாரிகள், இப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இதுகுறித்து தொடர்ந்து புகார் கொடுத்தாலும் கண்டுகொள்வதில்லை. போலீஸாருக்கு மணல் குவாரியில் இருந்து முறையே தினசரி மாமுல், மாத மாமுல் எனப் பலவகையில் பணம் செல்வதால், பொதுமக்களின் கஷ்டங்களை கண்டுகொள்வதில்லை. கூடவே இஷ்டத்துக்கு மணல் கொள்ளை நடக்கிறது. இந்தப் பிரச்னை மாவட்ட நிர்வாகத்துக்குப் போகாமல், அப்படியே நீர்த்துப் போகச் செய்துவிடுகின்றனர். இதற்குமுன் சட்டத்துக்குப் புறம்பாக மணல் ஏற்றிய 30 லாரிகளை அதிகாரிகள் பிடித்தனர். அடுத்து 8 லாரிகள் பிடிக்கப்பட்டது. இதையெல்லாம் இந்த அதிகாரிகள் மூடி மறைத்துவிடுகின்றனர். இப்போது போராடும் எங்கள் மீது தடியடி நடத்துகிறார்கள்” என்றார்கள் கோபமாக.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close