Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''தம்பிதுரைக்கு கோஷ்டி அரசியல் நடத்தவே நேரம் சரியாக இருக்கிறது!'' - கரூர் மக்கள் காட்டம்

                          

கரூர் - நாமக்கல் - சேலம் பாசஞ்சர் ரயில் சேவையை நிறுத்தப்போவதாகச் சேலம் கோட்ட ரயில்வே அறிவித்திருப்பதால்... அது பயணிகளையும், வர்த்தகர்களையும் ஒருசேர அதிரவைத்திருக்கிறது. கரூரில் இருந்து சேலத்துக்கு நாமக்கல் வழியாக அகல ரயில் பாதை அமைக்கப்பட்ட பின்னர், கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்முதல் பாசஞ்சர் ரயில் இயக்கப்படுகிறது. கரூர் - நாமக்கல் - சேலத்துக்குச் சிறப்புப் பாசஞ்சர் ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாசஞ்சர் ரயில், சேலம் ரயில்வே கோட்டத்தால் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, 'கூட்டம் குறைவு' என்று ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் இதன் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதனால், ஞாயிறு தவிர்த்து மற்ற நாள்களில் இந்த ரயில் தினமும் காலை, மதியம், இரவு என்று மூன்றுவேளை இயக்கப்பட்டு வருகிறது. கடந்த மே மாதம் முதல் மதியம் மட்டும் வந்து செல்லும் டிரிப் நிறுத்தப்பட்டது. இந்தச் சூழலில்தான், ''இந்த ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகவும், 13 முதல் 21 சதவிகிதம் மட்டுமே பயணிகளின் எண்ணிக்கை இருப்பதாலும் இந்த ரயிலைத் தொடர்ந்து இயக்குவது சிரமம்'' என்று சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவிக்க, அது பயணிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பிரமுகரான ஆலிம் ஏ.ரிபாய்தீன் ஹாசன், ''சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மா சமீபத்தில் கரூர் ரயில்வே ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். அப்போதுதான், 'கரூர் டு சேலம் பாசஞ்சர் ரயில் ரத்துசெய்யப்பட வாய்ப்பிருக்கிறது' என்று சூசகமாகச் சொன்னார். மேலும், 'வாங்கல் டு மோகனூர் இடையே காவிரியாற்றில் மேம்பாலப் பணிகள் முடிந்து போக்குவரத்துத் தொடங்கியுள்ளதால், பாசஞ்சர் ரயிலில் வசூல் குறைந்துவிட்டது' என்றும் தெரிவித்திருந்தார். இதுதான், எங்களைக் கொந்தளிக்க வைத்துவிட்டது. கரூர் டு சேலம் மார்க்கம் என்பது முக்கிய ரூட். கரூர், சேலம் இரண்டும் வியாபார நகரங்கள் என்பதாலும், நடுவில் இருக்கும் நாமக்கல் மாவட்டம் முட்டைக்குப் பிரபலமானது என்பதாலும் வியாபாரிகளும், பொதுமக்களும் இந்தப் பாசஞ்சர் ரயிலைத்தான் போக்குவரத்துக்கு அதிகம் பயன்படுத்தி வந்தனர். நாமக்கல்லில் கல்வி நிலையங்கள் அதிகம் இருப்பதால் மாணவ - மாணவிகளும் இந்த ரயிலைத்தான் அதிகம் பயன்படுத்தி வந்தனர். இந்தச் சூழலில், 'இந்தப் பாசஞ்சர் ரயிலில் பயணிகள் குறைந்துவிட்டனர், இந்த மார்க்கத்தில் வசூல் இல்லை' என்று கோட்ட மேலாளர் சொல்வது ஆச்சர்யமாக இருக்கிறது. இந்த ரயிலின் பகுதி நேரம் ரத்துசெய்யப்பட்ட நிலையில், இந்த ரயிலையே நிறுத்த பார்ப்பது என்ன நியாயம்? திருச்சியில் இருந்து சேலத்துக்குப் பேருந்து பயணத் தூரம் நான்கு மணி நேரம். இதனால், பயணிகள் அவதிப்படுகின்றனர். எனவே, சேலம் - கரூர் பாசஞ்சர் ரயிலை திருச்சிவரை நீட்டிப்பதாக ஏற்கெனவே திட்டம் இருந்தது. அதனைச் செயல்படுத்தி இந்தப் பாசஞ்சர் ரயிலை நீட்டிக்க வேண்டும். மேலும், சேலம் அகல ரயில் பாதை புதிதாகப் போடப்பட்டள்ளதால், ஸ்டேஷனில் இருந்து வழியோர ஊர்களுக்குச் செல்லப் போக்குவரத்து வசதி இல்லாமல் இருக்கிறது. இதற்கு, ஏற்பாடு செய்தால் அந்தப் பாசஞ்சர் ரயிலில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும். அதோடு, நல்ல வசூலும் கிடைக்கும். அப்படிச் செய்வதை விட்டுவிட்டு அந்தப் பாசஞ்சர் ரயிலையே நிறுத்துவது என்பது உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது. ரயிலை நிறுத்த முயற்சித்தால் போராட்டத்தில் குதிப்போம்" என்றார்.


 

இதுதொடர்பாகச் சில சமூக ஆர்வலர்கள், ''மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை இருக்கும் தொகுதியில்தான் ஒரு பாசஞ்சர் ரயிலை முற்றிலும் நிறுத்தப் பார்க்கிறார்கள். அவர், எந்தப் புதிய ரயிலையும் கொண்டுவர முயலவில்லை. ஆனால், ஏற்கெனவே ஓடி நிறுத்தப்பட இருக்கும் ரயிலை அவரால் தடுத்து நிறுத்தமுடியவில்லை. இப்படி அந்த ரயில் சேவையை நிறுத்தினால், கரூர் டு சேலம் வரை அகல ரயில்பாதை அமைத்ததே தேவையற்றதாகிவிடும். பழனி எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ் என்று இரண்டு ரயில்கள்தான் இந்தப் பாதையில் இயக்கப்படுகின்றன. அப்படி என்றால், இரண்டு ரயில்களை மட்டும் இயக்குவதற்காகத்தான் அகல ரயில்பாதை அமைக்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது? 'நான்தான் இந்த அகல ரயில்பாதையை அமைத்தேன்' என்று பெருமிதம் பேசும் தம்பிதுரை, உண்மையில் அந்த பெருமிதத்துக்கு உரியவராக இருக்க விரும்பினால், சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகளால் நிறுத்த முயற்சிக்கப்படும் கரூர் - சேலம் பாசஞ்சர் ரயிலை தொடர்ந்து இயங்க வழிவகை செய்ய வேண்டும். மாவட்டத்தில் கோஷ்டி அரசியல் நடத்தவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதை எல்லாம் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு, இந்தப் பாசஞ்சர் ரயிலைத் தொடர்ந்து இயக்க அவர் முயற்சிக்க வேண்டும்'' என்றனர்.

சேலம் கோட்ட ரயில்வே துறை அதிகாரிகள், ''இந்தப் பாசஞ்சர் ரயிலால் சேலம் கோட்டத்துக்கு நஷ்டம்தான். நாங்கள் அதை நிறுத்தாமல் இயக்கத்தான் முயன்றோம். ஆனால், சொற்ப பயணிகள்தான் அதில் பயணிக்கிறார்கள். அதனால், அந்தப் பாசஞ்சர் ரயிலை நிறுத்தலாம் என முடிவு செய்து மேல் அதிகாரிகள் உத்தரவுக்காகக் காத்திருக்கிறோம். ஒருவேளை அவர்கள், 'தொடர்ந்து அந்தப் பாசஞ்சர் ரயிலை இயக்குங்கள்' என்று உத்தரவிட்டால் எங்களுக்கும் மகிழ்ச்சிதான்" என்றனர் கழுவுகிற மீனில் நழுவுகிற மீனாக!

பயணிகளைத் தவிக்கவிடுவது எந்த விதத்தில் நியாயம்?

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close