Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீன் பிடிப்பதைவிட விற்பதுதான் சிரமம்! ஒரு வியாபாரியின் குமுறல்

மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அசைவ உணவு மீன். பல்லாயிரக்கணக்கான மீன் வகைகள் கடலில் இருக்கின்றன. அதில் சில, குறிப்பிட்ட வகை தவிர்த்து, மற்ற வகை மீன்களைச் சாப்பிடலாம். மீனவர்கள், அலைகடலை எதிர்க்கொண்டு மீன்களைப் பிடித்து வருகிறார்கள். அதற்கு அடுத்த கட்டமாக, மார்க்கெட்டுகளுக்குக் கொண்டுவந்து விற்பதில் பெரும் சிரமம் இருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டத்தின் அன்றாட உணவுப் பொருள்களில் ஒன்றாக இருக்கிறது. சிறிய நெத்திலி மீன் முதல் பெரிய சுறா வரை தினமும் சந்தைக்கு வருகின்றன. பூ மார்க்கெட்டைக் கடந்துசெல்லும்போது 'பூ வாசம்' வீசுது என்பார்கள். பழ மார்க்கெட்டைக் கடந்துசெல்லும்போது, 'பழ வாசம்' வீசுது என்பார்கள். ஆனால், மீன் மார்க்கெட்டைக் கடந்துசெல்லும்போது, 'மீன் நாற்றம்' என்பார்கள். அந்த நாற்றம்தான், பல மனிதர்களுக்கு வாசமான வாழ்க்கையைக் கொடுக்கிறது.

இதுகுறித்து, நாகர்கோவிலைச் சேர்ந்த மீன் வியாபாரி மணிகண்டனிடம் பேசினோம். 'பொதுவாக, மீனைப் பிடித்துவருவதைவிட, மீனை விற்பதில்தான் கஷ்டம் அதிகமிருக்கிறது. மீனைப் பிடித்து வருபவர்களிடமிருந்து மீனை வாங்கி, விற்பனைக்கு மார்கெட்டுக்குக் கொண்டு வருகிறோம். வீடு வீடாகக் கூவியும் சந்தைகளில் தொண்டை கிழியக் கத்தியும் மீன்களை விற்கிறோம். மீன் விற்கவில்லை என்றால், அழுகிவிடும். உப்புப் போட்டு கருவாடாக மாற்றினாலும் செலவுசெய்த முதல் கிடைக்காது. செவ்வாய், வெள்ளிக்கிழமை, விசேஷ தினங்கள், திருமண நாள்கள், சபரிமலை சீசன் நேரங்களில் மீன் விற்பனை படுத்துவிடும். அதனால், பெரும் நஷ்டத்தை நாங்கள் சந்திக்கிறோம். மக்கள், எங்களிடம் மீனை வாங்கும்போதும் நாங்கள் சொல்கிற விலைக்கு வாங்கிச் செல்வதில்லை. மீன்பிடி தடைக்காலம் இருக்கும்போது விலை கடுமையாக உயரும், அப்போது, மீன் வாங்குவது கொஞ்சம் கஷ்டம். மீன் பிடிப்பவர்களிடமிருந்து மீனை வாங்கிவந்து,  ஐஸ் வைத்து, வண்டிப் போக்குவரத்துச் செலவு, கூலி எனச் சேர்த்துதான் சிறிய லாபம் போட்டு விற்கிறோம். மீன் வாங்கி விற்பவர்கள் பலரும் வட்டிக்கு வாங்கித்தான் வியாபாரம் செய்கின்றனர். வியாபாரம் இல்லை என்றாலும் வட்டி கட்ட வேண்டும்.  மீனவர்கள், உயிரைப் பயணம்வைத்து மீனைப் பிடிக்கின்றனர். நாங்கள் பொருளைப் பணயம்வைத்து விற்கிறோம். மீன் பிடிப்பவர்களுக்குக் கிடைக்கும் அரசின் சலுகைகள் எங்களுக்குக் கிடையாது. தினமும் மீன் வாசத்தோடு ஒவ்வொரு காலையும் விடிகிறது. லாபமா, நஷ்டமா என்பதை ஒவ்வொரு மாலையும் முடிவுசெய்கிறது'' என்று சொல்லி விட்டு, 'வாங்க வாங்க நெய்மீன், சூரை மீன், சுறா மீன்' எனக் கூவி வியாபாரத்தைப் பார்க்கத் தொடங்கினார் மணிகண்டன்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close