Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்த 5 திட்டத்துக்கு ஒத்துழைத்தால் படுகுழியில் தமிழகம் தள்ளப்படும்!- எடப்பாடி அரசை எச்சரிக்கும் வைகோ

'தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள், மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கும், நிர்பந்தத்துக்கும் பயந்துகொண்டு தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைப்பதை கண்டிப்பதாக வைகோ கலந்துகொண்ட ம.தி.மு.க இளைஞரணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ம.தி.மு.க இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் , துணை அமைப்பாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 4-ம் தேதி எழும்பூரில் உள்ள கட்சித் தலைமை நிலையத்தில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் வே.ஈசுவரன் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

வைகோ


''தமிழ்நாடு தொடர்ந்து வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்து வருகிறது. தமிழகத்தில் 39,202 ஏரி, குளங்களின் மொத்தக் கொள்ளளவு 347 டி.எம்.சி ஆகும். எனவே, இந்த ஏரிகளையும், வரத்துக் கால்வாய்களையும், மதகுகளையும் ஐந்தாண்டு காலத்துக்குள் சீரமைக்கும் முழுமையான திட்டத்தை அறிவிக்க வேண்டும்.  தமிழகத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள நதிநீர் இணைப்புத் திட்டங்களை விரைந்து நிறைவேற்ற வேண்டும். முதல் கட்டமாகப் பாண்டியாறு-புன்னம்புழா, ஆனைமலையாறு-நல்லாறு இணைப்புத் திட்டங்களை நிறைவேற்ற வலியுறுத்தி பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படும். அனைத்து நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். தமிழகத்தின் இயற்கை சூழலும், குடிநீரும், விவசாயமும் மேற்குத் தொடர்ச்சி மலையைச் சார்ந்து உள்ளது. தமிழக அரசு தனது எல்லைக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பாதுகாப்புக்குத் தனித் திட்டத்தை அறிவிக்க வேண்டும். தமிழகத்தின் அனைத்து மண்டலங்களிலும் நதிநீர்ப் பாதுகாப்பு பரப்புரையை முடித்த பின்பு இறுதியாக, மேற்குறிப்பிட்ட நான்கு கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க இளைஞர் அணி சார்பாக கோட்டை நோக்கிப் பேரணி நடத்தப்படும்.

போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்கவும், இதற்குக் காரணமானவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இளைஞர் அணி சார்பில் தலைநகர் சென்னையில் பரப்புரை நடத்தப்படும். தமிழகத்தில் வேகமாகப் பரவி வரும் டெங்கு காய்ச்சலினால் இளம் பிள்ளைகள் தொடர்ந்து உயிரிழப்பது மிகவும் வேதனை தருகிறது. தமிழக அரசு, மூடி மறைக்கும் செயலில் ஈடுபடுவதை விட்டுவிட்டு, தீவிர முயற்சி எடுத்து டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,  தமிழகத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்று எதிர்த்த அனைத்துத் திட்டங்களையும், மத்திய அரசின் மறைமுக நிர்பந்தத்தால் தற்போது தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் திட்டம், நீட் எதிர்ப்பு , ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு, கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து ஆகிய பல பிரச்னைகளில் உண்மைகளை மறைத்து தமிழகத்துக்குப் பாதிப்பில்லை என்று மோசடி உத்தரவாதம் தந்து, தமிழக அரசே இத்திட்டங்களை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருவது தமிழகத்தைப் படுகுழியில் தள்ளிவிடும்.

தமிழக மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டிய ஆட்சியாளர்கள் மத்திய அரசின் வருமான வரித்துறை சோதனைக்கும், நிர்பந்தத்துக்கும்  பயந்துகொண்டு தமிழகத்தின் உரிமைகளை அடமானம் வைப்பதை இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது'' என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close