Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஆந்திராவில் போலீஸுடன் பயங்கர மோதல்! சென்னையை கலக்கிய பிரபல ரவுடி கைது

ஆந்திராவில் பதுங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி கல்வெட்டு ரவி, காவல்துறையினருடன் பயங்கர மோதலில் ஈடுபட்டார். அவரை துப்பாக்கிமுனையில் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் கல்வெட்டு ரவி (45). பிரபல ரவுடியாக சென்னையை கலக்கிவந்தார். இவர்மீது ஐந்து கொலை வழக்குகள் உட்பட 35 வழக்குகள் உள்ளன. கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு கைதுசெய்யப்பட்ட ரவி, புழல் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், ஜாமீனில் வெளியே வந்தவர், தலைமறைவானார்.

இதையடுத்து, அவரை தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில், ஆந்திராவில் அவர் பதுங்கியிருப்பதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படையினர் நேற்றிரவு ஆந்திரா விரைந்தனர். ரவி பதுங்கியிருந்த இடத்தைக் காவல்துறையினர் சுற்றிவளைத்தனர். அப்போது, காவல்துறையினருக்கும் ரவிக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில், ரவியை காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். இதையடுத்து, துப்பாக்கிமுனையில்  அவரை காவல்துறையினர் கைது செய்து இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.

கல்வெட்டு ரவி பிடிபட்டது குறித்து போலீஸார் கூறுகையில், கல்வெட்டு ரவி தலைமறைவாக இருந்தார். அவர் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும் தனிப்படை போலீஸ் டீம் ஆந்திரா சென்றது. அங்கு அவர் போலீஸை தாக்கியதோடு தப்பியஓட முயன்றார். அப்போது காலில் காயம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கல்வெட்டு ரவியின் உயிருக்கு எதிரிகளால் ஆபத்து இருப்பதாக தகவல் உள்ளது. ரவியின் எதிர் கோஷ்டி அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளது. இதனால்தான் ரவி தலைமறைவாகி விட்டார். அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளன. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரவிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது" என்றார்.

ரவியின் வழக்கறிஞர் ஜெய்சங்கர் கூறுகையில், "ஆந்திர மாநிலம், ராஜமுந்திரி பகுதியில் ரவியை போலீஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர். அப்போது, அவரை சரமாரியாக போலீஸார் தாக்கியதில் அவரது கால்கள் உடைந்துள்ளன. இதனால், என்கவுண்டர் திட்டத்தை போலீஸார் கைவிட்டுவிட்டனர். தற்போது, ரவியை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அவரிடம் பேசியபிறகுதான் என்ன நடந்தது என்பது தெரியவரும். ரவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது"என்றார்.

கல்வெட்டு ரவியின் அம்மா நாகபூஷ்ணம் கூறுகையில், ’என் மகன் ரவியை ஆந்திராவில் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த தகவலை என்னுடைய மருமகள் திவ்யா தெரிவித்தார். தற்போது ரவியை போலீஸார் எங்கு வைத்துள்ளார்கள் என்ற தகவல் தெரியவில்லை. ரவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது. அதில் ஒன்று கை குழந்தை. ரவியை என்கவுன்டர் செய்யப்போவதாக போலீஸார் சொல்கின்றனர். இதனால் எனக்குப் பயமாக உள்ளது. ரவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்றார் கண்ணீர் மல்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close