Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கேலிக்கூத்து தினகரன்; பச்சோந்தி உதயகுமார்..! அ.தி.மு.க-வில் மல்லுக்கட்டு

"தினகரனின் செயல் கேலிக்கூத்தானது" என்று அமைச்சர் உதயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். "சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உதயகுமார் ஒரு பச்சோந்தி" என்று வெற்றிவேல் எம்.எல்.ஏ ஆவேசத்துடன் கூறியுள்ளார்.

அ.தி.மு.க அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், நேற்று அதிரடியாகப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இந்த அறிவிப்பால் முதல்வர் பழனிசாமி அணியினர் கடும் கோபத்தில் இருக்கின்றனர். அமைச்சர்கள் முதல்வர் முக்கிய நிர்வாகிகள் வரை தினகரனைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை அரசுச் சுற்றுலாத்துறை விருந்தினர் மாளிகையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ ஏ.கே.போஸ் ஆகியோர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது ஏ.கே.போஸ் கூறுகையில், "எனக்கு புதிய நிர்வாகிகள் அறிவித்தது பற்றி தெரியாது. டிவி பார்த்த பிறகே, நான் தெரிந்துகொண்டேன். எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை.
எனக்கு உடல்நிலையே மோசமான நிலையில்தான் உள்ளது. தினகரனுக்கு ஆதரவாகவும் எடப்பாடி முதல்வராகத் தொடர வேண்டும் என்பதே என் எண்ணம். விவசாய அணி இணைச்செயலாளர் பொறுப்பை ஏற்கப்போவதில்லை" என்று கூறினார்.

இதன் பின்னர், அமைச்சர் உதயகுமார் கூறுகையில், "டி.டி.வி.தினகரன் புதிய பொறுப்பாளர்களை அறிவித்துள்ளார். இதுவே ஜெயலலிதா ஆட்சியில் அறிவித்திருந்தால் சார்பு அணிக்குத் தெரிவித்திருப்பார். அதன் பின் விசாரணைகள் மற்றும் கலந்தாய்வு நடந்த பிறகு, அறிவிக்கப்படும். ஆனால், இவர் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்துவிட்டார். எட்டுப் பொறுப்பாளர்கள் பணி அறிவிப்பானது குழப்பத்தை ஏற்படுதுகிற, கேலிக்கூத்தாக உள்ளது. தேர்தல் ஆணைய பட்டியலில் டி.டி.வி பெயர் இடம் பெறவில்லை எனத் தெளிவாக உள்ளது.
தேர்தல் ஆணையம்கூட பொதுச் செயலாளர் யார் எனக் கேட்டபோது முடிவு செய்யவில்லை எனக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென்று இவ்வாறு செய்வது அதிர்ச்சியடையச் செய்கிறது.

எடப்பாடி பழனிசாமி வழிநடத்தி வரும் கழகத்தின் அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆனால், அவரவர் தன்னை முன்னிலைப்படுத்த இது போன்ற அறிவிப்பை வெளியிடுவது சரியில்லாத செயல். ஒரு கிளைச் செயலாளர் பதவியைக்கூட அ.தி.மு.க-வில் யாரும் மறுத்தது கிடையாது. ஆனால், அந்த நிலை மாறி தற்போது பொறுப்புகளே வேண்டாம் என்று நிர்வாகிகள் சொல்கின்றனர். இதை வைத்தே நிலைமையைத் தெரிந்துகொள்ளலாம். தனிநபரை முன்னிலைப்படுத்தும் அவரது செயல், பழைய நிர்வாகிகளின் ஒத்துழைப்பு பெற முடியாத சூழல் ஏற்படும். தேர்தல் ஆணையமும் ஏற்காது. மக்களும் ஏற்க மாட்டார்கள்.

அ.தி.மு.க-வில் புதிய நிர்வாகிகள் அறிவிப்புக்குத் தற்போது எந்தத் தேவையும் இல்லை. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எடப்பாடி அரசு செயல்படாத அரசு என்று ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி பல  நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார். எனவே ஓ.பன்னீர்செல்வம் அணி சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. தலைமைச் செயலகத்தில் கோப்புகள் தேங்காமல் செயல்பட்டு வருகின்றது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்க முடியாததை யாரை திருப்திப்படுத்த, யாரை முன்னிலைபடுத்த இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இரு அணிகள் இணைவதற்கு 60 நாள்கள் போதுமானதாக டி.டி.வி.தினகரன் நினைத்துள்ளார். அது தப்புக்கணக்கு.
இரு அணி இணைவதற்கு கால அவகாசத்தை நிர்ணயிக்க முடியாது" என்று கூறினார்.

இதனிடையே, தினகரனை இன்று சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல் எம்.எல்.ஏ, "எம்.எல்.ஏ-க்களிடம் கருத்து கேட்டறிந்த பின்புதான் பொறுப்புகள் வழங்கப்பட்டன. கருத்து கேட்டதற்கு ஆதாரம் உள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை அ.தி.மு.க பலமுறை சந்தித்து இருக்கிறது. இந்த ஆட்சியே பொதுச் செயலாளர் உருவாக்கியதுதான். ஏதோ ஓர் அழுத்தம் காரணமாக கட்சிப் பதவியை சிலர் ஏற்க மறுத்து வருகின்றனர். சூழ்நிலைக்கு ஏற்ப மாறும் உதயகுமார் ஒரு பச்சோந்தி" என்று ஆவேசத்துடன் கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close