Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"ஓ.பி.எஸ் வாய் திறக்க வேண்டும்.!"− மீண்டும் போராட்டத்தில் இறங்கிய லெட்சுமிபுரம் மக்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள கிராமம் லெட்சுமிபுரம். சர்ச்சைக்குறிய கிணற்றை முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பினர் தர மறுப்பதால் இன்று மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், கிராம மக்கள். முன்னதாக ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி பெயரில் இருந்த ராட்சத கிணற்றால்தான் தங்கள் கிராமத்தின் குடிநீர் ஆதாரம் பாதிக்கப்பட்டதாக, சுமார் 25 நாள்களாக போராட்டம் நடத்தினர். இதனால், தனது நண்பர் பெயருக்கு அந்த கிணற்றை எழுதிவைத்துவிட்டார். இந்த கிணறு விவகாரம் இன்று வரை ஒரு முடிவை எட்டாத நிலையில், இன்று மீண்டும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர் கிராம மக்கள். 

அவர்களிடம் பேசியபோது, "எங்கள் கிராமத்தின் தண்ணீர் கதை உங்களுக்கு நன்றாகவே தெரியும். அந்த கிணற்றைப் பற்றி மட்டும் யாரும் வாய் திறக்கமாட்டேன் என்கிறார்கள். பன்னீர்செல்வமாக இருந்தாலும் சரி, அரசு அதிகாரிகளாக இருந்தாலும் சரி, யாருமே இந்த பிரச்னைக்குத் தீர்வு காண மறுக்கிறார்கள். எங்கள் கிராமத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால் சமீபத்தில் புதிய குடிநீர் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தார்கள். குன்னூர் வைகை ஆற்றில் இருந்து சுமார் 12 கிலோ மீட்டருக்கு தண்ணீரைக் கொண்டுவந்து எங்களுக்கு கொடுப்பதே திட்டம். அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் நடந்துவருகிறது. குடிக்க தண்ணீர் கிடைத்துவிட்டது என்பதால் மகிழ்ச்சியே. ஆனால், விவசாயம் பார்க்க முடியாத அளவுக்கு சைடு போர் மூலம் சுற்றியுள்ள கிணறுகளின் ஊற்றை உடைத்து அந்த ராட்சத கிணற்றுக்குள் விட்டிருக்கிறார்கள். இச்செயலால் ஊர் பொது கிணறு உட்பட எந்த கிணற்றிலும் தண்ணீர் இல்லை. எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. குடிநீர் திட்டம் கொண்டுவந்தால் நாங்கள் அமைதியாக இருந்துவிடுவோம் என்று நினைத்தார்கள். நாங்கள் போராடியது குடிநீருக்கு மட்டுமல்ல, விவசாயத்துக்கும்தான். மேலும், தேனி மாவட்டத்தின் ஆறுகளில் ஒன்றான வரட்டாற்றை அவர்கள் வரட்டு ஒடையாக மாற்றி வைத்திருக்கிறார்கள். மேலும், ஆற்றை மண்ணைப் போட்டு மூடிவிட்டார்கள்.

இதற்கெல்லாம் ஒரு முடிவு ஏற்பட வேண்டுமென்றால் அந்தக் கிணற்றை கிராமத்துக்கு எழுதிவைத்தால்தான் முடியும். அதனால்தான் இப்போது உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பன்னிர்செல்வம் வாய்திறக்க வேண்டும். கிணற்றை எழுதி வைக்கிறேன் என்று கூறியபடி விரைவில் எழுதிவைக்க வேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கும்." என்றனர். முன்னதாக கிணற்றை கிராமத்துக்குத் தானமாக எழுதிவைப்பதாக பன்னீர்செல்வம் தரப்பு உறுதி கொடுத்திருந்தனர். அதனாலேயே மக்கள் தங்களின் போராட்டத்தைக் கைவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close