Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மூன்று நிமிட ரகசிய போன் கால்... பல்டியடித்த எம்.எல்.ஏ கதிர்காமு!

நேற்று முன்தினம்  செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி.தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இப்பதவிகளை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.கே.போஸ், சத்யா பன்னீர்செல்வம், பழனி ஆகியோர் வேண்டாம் என்று அறிவித்தனர். தொடர்ந்து பெரியகுளம் எம்.எல்.ஏ கதிர்காமு, "தனக்கு எந்தப் பதவியும் வேண்டாம். அம்மா வழியில் சட்டமன்ற உறுப்பினராகவே மக்கள் பணியாற்ற விரும்புகிறேன்' என்று அறிவித்தார்.

தேனி மாவட்டத்தில் தனக்கென ஒரு பலமான கட்டமைப்பை உருவாக்கி வைத்திருக்கும் மாவட்டச் செயலாளரும், தினகரன் அணியில் இருக்கும் எம்.எல்.ஏ-வுமான தங்கத்தமிழ்செல்வன் உள்பட தேனி மாவட்ட அ.தி.மு.க வட்டாரம், கதிர்காமுவின் இந்த அறிவிப்பால்  அதிர்ச்சியடைந்தது. முன்னதாக, ஓ.பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ கதிர்காமுவை ரகசியமாக சந்தித்துப் பேசியதாகத் தகவல் கசிந்தது. மேலும், சமீபத்தில் கம்பம்மெட்டிற்கு வந்திருந்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கதிர்காமுவிடம் ரகசியமாக பேசியதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில், பன்னீர்செல்வம் அணிக்குச் செல்வதா? முதல்வர் எடப்பாடி அணிக்குச் செல்வதா? அல்லது தற்போது இருக்கும் தினகரன் அணியிலேயே இருந்துவிடலாமா என்ற குழப்பத்தில் இருந்தவருக்கு, திடீரென கழக மருத்துவரணி இணைச்செயலாளர் பதவியைக் கொடுத்தார் தினகரன். அதே நேரம் கம்பம் எம்.எல்.ஏ ஜக்கையனுக்கு கழக அமைப்புச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தன்னைவிட உயர்ந்த பதவி ஜக்கையனுக்கு கொடுக்கப்பட்ட காரணத்தில்தான் நேற்று, "தனக்குப் பதவி ஏதும் வேண்டாம்" என கதிர்காமு அறிவித்தாகக் கட்சிக்குள் கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை, தேனி மாவட்ட அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கதிர்காமுவின் வீட்டுக்கு வருகை தந்தனர். நீண்ட நேர பேச்சுவார்த்தையின் முடிவில், மூன்று நிமிடம் யாருடனோ கதிர்காமு போனில் பேசியதாகச் சொல்லப்பட்டது.

அதைத் தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ கதிர்காமு, "எம்.எல்.ஏ தங்கத்தமிழ்ச்செல்வன் என் குரு. தினகரன் என் ஆசான். அவர்கள் என்னை நம்பி பதவி கொடுத்தது எனக்கு மகிழ்ச்சியே. அந்தப் பதவியை ஏற்றுக்கொண்டு, பல இடங்களுக்குச் சென்று என்னால் கழகப் பணியாற்ற எனது உடல் ஒத்துழைக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அதனால்தான் பதவி வேண்டாம் என்றேன். வரும் புதன் கிழமை, தினகரனை நேரில் சந்தித்து எனது உடல்நிலைப் பற்றி விளக்கம் கொடுக்க இருக்கிறேன். அதன்பிறகும் நான்தான் அப்பதவியில் தொடரவேண்டும் என அவர் விரும்பினால் தொடர்வேன்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close