Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஐந்து மருத்துவமனைகள், ஏழு மணி நேர போராட்டம்... உயிரிழந்த தமிழர்!

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் ( வயது 46), நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது கொல்லம் அருகே சாத்தனுர் என்ற இடத்தில் விபத்தில் சிக்கினார். போலீஸார் அவரை மீட்டு, ஆம்புலன்ஸில் கொல்லம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முருகனுடன் யாரும் இல்லை என்பதால், தனியார் மருத்துவமனைகள் அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்துவிட்டன. கொல்லம் அரசு மருத்துவமனையில் அனைத்து வென்டிலேட்டர்களும் பயன்பாட்டில் இருந்துள்ளதால், அங்கும் சிகிச்சையளிக்க முடியவில்லை.

சிகிச்சை கிடைக்காமல் மரணமடைந்த தமிழர்

Photo Credit : Manorama

ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ராஜு முருகனை கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் கொண்டுசென்றார். கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் 65 கி.மீ தொலைவில் உள்ளது. திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையிலும் வென்டிலேட்டர்கள் அனைத்தும் பயன்பாட்டில் இருந்துள்ளன. ஆனால், 2 மணி நேரம் கழித்தே இந்தத் தகவல்  ராஜுவுக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மனம் தளராத ஆம்புலன்ஸ் ஓட்டுநர், அங்கிருந்து முருகனை மீண்டும் கொல்லத்துக்குக் கொண்டுவந்து, ஏதாவது ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப் போராடியிருக்கிறார். ஆனால், எந்த தனியார் மருத்துவமனையும் சிகிச்சையளிக்க முன்வரவில்லை. கொல்லத்தில் உள்ள  ஐந்து  தனியார் மருத்துவமனைகளும் சிகிச்சையளிக்க மறுத்துள்ளன. 

சிகிச்சை கிடைக்காத நிலையில், இரவு 11 மணியளவில் விபத்தில் சிக்கிய முருகன் காலை 6 மணியளவில் ஆம்புலன்ஸிலேயே உயிரிழந்தார். மனம் வெதும்பிய ராஜு, இதுகுறித்து கொல்லம் போலீஸில் புகார் அளித்தார். சுமார் 7 மணி நேரம் முருகனுக்கு சிகிச்சையளிக்கப்படவில்லை. தனியார் மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரில் ராஜு கூறியிருந்தார்.

கொல்லம் மாநகர போலீஸ் கமிஷனர், ''சமுதாயத்துக்கு தவறான முன்னுதாரணமான சம்பவம் இது. தனியார் மருத்துவமனைகள்மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று தெரிவித்திருக்கிறார். கேரள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா, சிகிச்சையளிக்காத மருத்துவமனைகள்மீது விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close