Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு நாங்கதான் காரணம்!"


 

"அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டதற்கு நாங்கள்தான் காரணம்" என்று கரூர் மாவட்ட கலெக்டர் தொடங்கி, தி.மு.க மாவட்டச் செயலாளர், ஆளும் கட்சி முன்னாள், இன்னாள் அமைச்சர்கள், விவசாயச் சங்க பிரதிநிதிகள் என்று சகலரும் உரிமை கொண்டாட மக்களோ கவலையில் உள்ளனர். 

''திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி ஆறு... திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் வழியாகப் பாய்ந்து இறுதியில் திருமக்கூடலூர் காவிரியில் கலக்கிறது. வாய்மடை தொடங்கி காவிரியில் கலக்கும் கடைமடைவரை அமராவதி ஆறு 240 கிலோ மீட்டர் தூரம்கொண்டது. ஆனால், ஐந்து நாள்களும் திறந்துவிடப்பட்ட தண்ணீர் 200 கிலோ மீட்டர்கூட வரவில்லை. இப்படியிருக்கும் நிலையில், 'தண்ணீர் திறப்புக்கு நாங்கள்தான் காரணம்' என்று மற்றவர்கள் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்'' என்று மக்கள் வெடிக்கிறார்கள். 

 

அமராவதி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை, கரூர் மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் கொத்தபாளையம் அணை அருகே அதிகாரிகளோடு சென்று பார்வையிட்டார். அப்போது அவர், "கரூர் மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவைக்காக அமராவதி ஆற்றில் ஐந்து நாள்கள் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது" என்றார். அமராவதி ஆற்றில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு, தி.மு.க மாவட்டச் செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன், தண்ணீர் திறந்துவிடச் சொல்லி சின்னதாராபுரத்தில் தனது கட்சியினர் மற்றும் பொதுமக்களோடு காவல் துறையின் அனுமதியையும் மீறிச் சாலை மறியல் போராட்டம் நடத்தினார். அனுமதியின்றி அவர் போராட்டம் நடத்தியதால், அவரை அப்போது போலீஸ் கைதுசெய்தது. அதனால், "எங்களின் கடுமையான போராட்டத்தால்தான் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டது" என்கிறார் அவர். 

 

 

இதுதொடர்பாக மேலும் அவர், "கரூர் மாவட்டமே குடிநீர் கிடைக்காமல் திண்டாடி வந்தது. மாவட்டம் முழுக்கத் தினமும் பல ஊர்களில் மக்கள் காலிக்குடங்களோடு குடிநீர் கேட்டு போராட்டம் நடத்திய காட்சிகள் அரங்கேறின. அதனால்தான், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாட்டில் தவித்த கரூர் மக்களைப் பாதுகாக்க அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கச் சொல்லிக் கோரிக்கைவைத்தோம்.அது நடக்கவில்லை. அதனால்தான், மக்களைத் திரட்டி சின்னதாராபுரத்தில் காவல் துறையின் அனுமதி மறுப்பையும் மீறி மிகப்பெரிய சாலை மறியல் போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாக, அரசின் கவனத்துக்குக் கரூர் மாவட்டத்தின் குடிநீர்த் தட்டுப்பாட்டின் வீரியம்போய் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்தார்கள். இதன் வெற்றி கரூர் மாவட்ட தி.மு.க-வையே சாரும்" என்றார்.

 

 

ஆனால், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ-வான செந்தில்பாலாஜி தரப்பினரோ, "இரண்டு வருடங்களாக அமராவதி ஆற்றில் சொட்டுத் தண்ணீர்கூடத் திறக்கப்படவில்லை. ஆனால், இப்போது வறட்சி நிலவும் சூழ்நிலையில் தனது செல்வாக்கால் அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கவைத்தார் செந்தில்பாலாஜி'' எனச் சமூக வலைதளங்களில் செந்தில்பாலாஜியைத் 'தண்ணீர் தந்த நாயக'னாகச் சித்தரித்தனர். அதைப் பார்த்த போக்குவரத்துத் துறை அமைச்சரும், அ.தி.மு.க மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பினர், "உண்மையில் அமராவதி அணையில் திறப்பதற்குரிய அளவில் போதிய தண்ணீர் இல்லை. ஆனால், கரூர் மாவட்ட மக்கள் தண்ணீரின்றித் தவித்த தவிப்பைப் பார்த்து... மக்கள் தண்ணீர் கேட்டு காரை வழிமறித்ததையும் பார்த்துத்தான் அண்ணன் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்தார்'' என்று அவர் புகழ்பாடுகின்றனர்.

''அமைச்சரின் சொந்த ஊரான ஆண்டான்கோவில் கிழக்கு ஊராட்சியில் நாற்பதாயிரம் பேர் வசிக்கிறார்கள். ஆனால், அந்த ஊரில் சொட்டுத் தண்ணீர்கூடக் குடிப்பதற்கு வழியில்லை. சொந்த ஊருக்குத் தண்ணீர் பெற்றுத்தராத அமைச்சர், அமைச்சராக இருந்து என்ன பயன்'' என்கிறார் ஒரு விவசாய சங்கத் தலைவர்.

இதைத் தவிர சில விவசாயச் சங்க பிரதிநிதிகள், "இந்தத் தண்ணீர் திறப்புக்கு நாங்கள்தான் காரணம். எங்களின் தொடர்ச்சியான போராட்டம் கைமேல் பலனைப் பெற்றுத் தந்திருக்கிறது" என்கிறார்கள். 

இப்படி ஆளாளுக்கு அமராவதி ஆற்றுத் தண்ணீர் திறப்பு புகழ்பாடுபவர்கள் குறித்து நிலத்தடிநீர் மற்றும் கழிவுநீர் பாதிப்பு விவசாயிகள் சங்க கரூர் மாவட்டச் செயலாளர் ராமலிங்கத்திடம் பேசினோம்.

"கரூர் மாவட்ட மக்கள் எப்படிக் குடிக்க தண்ணீரின்றித் தவித்தார்கள் என்பது எங்களுக்குத்தான் தெரியும். எங்கேயும் தண்ணீர் இல்லை. குளம், குட்டைகூட வறண்டுகிடக்கிறது. மக்கள்தான் கஷ்டப்படுகிறார்கள் என்றால், கால்நடைகளும் குடிக்கத் தண்ணீரின்றித் தவிப்பதுடன் இறந்தும்விடுகின்றன. அதனால்தான், அமராவதி ஆற்றில் தண்ணீர் திறக்கச் சொல்லி பலமுறை அரசுக்குக் கோரிக்கையும் வைத்தோம்... பலகட்ட போராட்டங்கள் நடத்தினோம். வழக்கமாக ஆகஸ்ட் இறுதியில் திறக்கப்படும் திருப்பூர் மாவட்டத்தில் பாயும் அமராவதி மெயின் வாக்காலில் 450 கனஅடி தண்ணீர் பாசனத்துக்காக... முன்கூட்டியே திறந்த அந்த மாவட்ட நிர்வாகம், கரூர் மாவட்டத்துக்குக் குடிநீருக்காக அமராவதி ஆற்றில் நாங்கள் கேட்ட தண்ணீரைத் திறக்கவில்லை. அதன்பிறகு, கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினோம். அதன் விளைவாக, இப்போது தண்ணீர் திறந்திருக்கிறார்கள். இந்தத் தண்ணீர் கரூரை எட்டுவதற்குள் தண்ணீர் திறப்பை நிறுத்திவிட்டார்கள். அதனால், இன்னும் ஐந்து நாள்கள் தண்ணீர் திறக்க கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

இதுதொடர்பாகப் பொதுமக்கள், "அனைத்துத் தரப்பும் இப்படித் தம்பட்டம் அடிக்கக் காரணம், இரண்டு வருடங்களுக்குப் பிறகு இப்போதுதான் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது என்பதால்தான். "வரலாறு காணாத வறட்சியால் கரூர் மாவட்டத்தில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது. நிலத்தடிநீர் மட்டம் பல இடங்களில் ஆயிரம் அடிக்குக் கீழே போய்விட்டது. அதனால், 'குடிநீரூக்காக அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்துவிடுங்கள்' என்று நாங்கள் போராடினோம். அதன் காரணமாக, மொத்தம் ஐந்து நாள்களுக்குத் தண்ணீர் திறக்க ஜி.ஓ போடப்பட்டது. அது நேற்றோடு முடிந்துவிட்டது. இந்த நிலையில், பத்தாயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அதை, திருப்பூர் மக்களே விவசாயத்துக்குத் திருப்பியதால், ஐந்து நாள்களும் கரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் வரவில்லை. இன்றுதான் சிறிதளவு தண்ணீர் கரூர் லைட்ஹவுஸ் பாலத்தை எட்டிப்பார்த்து நிற்கிறது. இதனால், எங்களுக்குப் பத்து சதவிகிதம்கூட நன்மை இல்லை. திறக்கப்பட்ட தண்ணீர் திருப்பூர் மக்களுக்கு மட்டுமே பயன்பட்டிருப்பதால், தண்ணீர் திறந்துவிட்டேன் என்று வீண்பெருமை பேசும் அனைவரும் அதை விட்டுவிட்டுக் காவிரியில் கலக்கும் அமராவதியின் கடைமடை வரை தண்ணீர் போய்ச்சேர மறுபடியும் அணையிலிருந்து தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை என்றால், மக்கள் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட்டம் நடத்துவோம்'' என்றனர்.

 

நல்லா 'தண்ணி காட்டுறாங்கப்பா'. மக்கள்தான் பாவம்....!`

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close