Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் காட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை?' கொதிக்கும் கெளசல்யா

 

சாதி

'சாதிகள் இல்லையடி பாப்பா' - பாரதியின் நெடுநாள் கனவு. இந்தச் சமூகத்தின் ஒட்டுமொத்த ஆசையும். ஆனால், இன்று வரை சாதியின் வாலைக்கூட எந்தப் போராட்டத்தினாலும் நறுக்கிட முடியவில்லை  தொடர்ச்சியாக இன்றளவும் நடக்கின்றன ஆணவக் கொலைகள். ஆசை ஆசையாய் தூக்கி வளர்த்த மகளை அடித்துக் கொள்ளும் பகைமை எப்படித் தோன்றுகிறது அப்பாவின் மனதில். எல்லா கேள்விகளுக்கும் சாதிவெறிதான் ஒற்றை பதில். 

தமிழகத்தில் சாதிய ஆணவக்கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.இதைத் தடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாக்க சிறப்புத் தனிப்பிரிவு மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் முதல்முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது. அச்சுறுத்தல், பயமுறுத்துதல், தீங்கு விளைவித்தல் மற்றும் ஆணவக் கொலை செய்தல் ஆகியவற்றிலிருந்து சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகளைப் பாதுகாப்பதே இந்தப் பிரிவின் நோக்கம்.

 

சாதி

சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த விமலாதேவியின் கணவர் ஆணவக்கொலைக்குப் பலியானார். இந்தச் சம்பவத்தை கையில் எடுத்த  தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், கடந்த 2016-ம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ‘‘சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டவர்களுக்குப் பாதுகாப்பு வழங்க காவல்துறையில் தனிப்பிரிவு உருவாக்க வேண்டும்'' என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.  

மீண்டும் இந்த வழக்கு வரும் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில்தான் மதுரை கமிஷனர் அலுவலகத்தில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்காக தனிப்பிரிவு தொடங்கப்பட்டிருக்கிறது. இப்பிரிவு மதுரை நகரின் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர், சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிட நல அதிகாரி ஆகியோரின் மேற்பார்வையில் செயல்படுகிறது. 

இதுகுறித்து பேசிய மதுரை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், ‘‘சாதி மறுப்புத் திருமணத்தால் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து புகாரைப் பெறுவதற்கு போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் இந்தக் குற்றத்தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அப்படி வரும் புகாரை விசாரிக்க தனி இன்ஸ்பெக்டர் நியமிக்கப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகாரைத் தெரிவிக்கவும் தகவல்களைப் பெறவும் 0452 2346302 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்,’’ என்றார். 

இந்தத் தனிப்பிரிவு குறித்து ஆணவக் கொலைக்கு எதிராகப் போராடி வரும் கெளசல்யாவிம் பேசினோம்

''இந்தப் புதுபிரிவினால் ஆணவக் கொலை குறைந்துவிடுமா என்ன? நாங்கள் கேட்பது பாதுகாப்பு. அவர்களால் அந்தப் பாதுகாப்பை கொடுத்துவிட முடியுமா? பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடையும் பெண்ணிடம் பெற்றோருடன் சென்றுவிடும்படி கவுன்சலிங் செய்யப்படுகிறது அல்லது அவளிடம் கறக்க வேண்டிய விஷயங்களைக் கறந்து நல்லவர்களாக நடிக்கும் போலீஸார், அந்தப் பெண்ணின் பெற்றோர் வந்ததும் அவர்களுக்குச் சாதகமாக செயல்படுகிறார்கள். சாதிமறுப்புத் திருமணம் செய்றவங்களைக் கட்டிக்கொடுக்கிற போலீஸுக்கு என்ன தண்டனை?

என்னைப் பொறுத்தவரை, இந்தத் தனிப்பிரிவு என்பது புகார் சொல்வதற்கான ஒரு தொலைபேசி எண் மட்டுமே. இதன்மூலம் சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் தம்பதி காப்பாற்றப்பட்டால் மட்டுமே இந்தப் பிரிவின் செயல்பாடுகள் மக்களால் வரவேற்கப்படும். இல்லையென்றால் இதுவும் ஒரு தொலைபேசி எண் என்கிற அளவில் கடந்துபோகப்படும்.

வரதட்சணைக் கொடுமைக்கு எதிரான சட்டம், பாலியல் வன்கொடுமைக்கு எதிரான சட்டம் போன்று ஆணவக்கொலைக்கு எதிரான சட்டம் இயற்றப்பட வேண்டும். சட்டம் இருந்தால்தான் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு அளிப்பது, பாதுகாப்பு அளிப்பது மற்றும் குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பது போன்றவை எல்லாம் சாத்தியப்படும்’’ என்கிறார் கெளசல்யா 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close