Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்தியாவில் ஆண்டுக்கு 50,000 பேர் பாம்புக் கடிக்கு பலியாகிறார்கள்! - ’பாம்பு மனிதர்’ அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் ஆண்டுதோறும் 50,000 பேர் பாம்புகளால் கடிபட்டு உயிர் இழப்பதாக பாம்பு மனிதர் என வர்ணிக்கப்படும் ரோமுலஸ் விட்டேகர் தெரிவித்தார்.

பாம்பு மனிதர்

அமெரிக்காவைச் சேர்ந்த ரோமுலஸ் விட்டேகர், தனது 7-வது வயதில் இந்தியாவுக்கு வந்துவிட்டார். பாம்புகள், முதலைகளைப் பாதுகாப்பதில் அதீத அக்கறை கொண்டு செயல்படும் இந்த அமெரிக்க தாத்தா, கிண்டியில் உள்ள பாம்புப் பண்ணையையும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள முதலைப் பண்ணையையும் உருவாக்கியவர். நெல்லையில் பாம்புகள் குறித்து பேசுவதற்காக வந்திருந்த அவரிடம் பேசுகையில், ’’இந்தியா முழுவதும் கட்டுவிரியன், நல்ல பாம்பு, சுருட்டை விரியன், கண்ணாடி விரியன் ஆகிய 4 வகையான விஷப் பாம்புகள் மட்டுமே உள்ளன. 

பாம்பு மனிதர் விட்டேகர்

பாம்புகள் குறித்து நிறைய தவறான நம்பிக்கைகள் இருக்கின்றன. ஆனால், பாம்புகள் பொதுவாகவே மனிதனைப் பார்த்துப் பயப்படக் கூடியவை. நமது கவனக் குறைவு மற்றும் அவற்றுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தினால் மட்டுமே அவை கடிக்கின்றன. விவசாய நாடான இந்தியாவில், நெல் விளைச்சல் உள்ள பகுதிகளில் பாம்புகள் அதிகம். இந்தியாவில் ஆண்டுதோறும் பாம்புக் கடிக்கு 50,000 பேர் இறக்கிறார்கள். அதனால்தான் அவை குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தி வருகிறோம். பாம்புகள் உள்ள பகுதிகளில் மிகுந்த கவனத்துடன் இருந்தால் அவை நமக்கு எந்தத் தீங்கையும் செய்யாது’’ என்றார் அக்கறையுடன். மேலும், பாம்புக் கடியைத் தவிர்ப்பது, கடித்து விட்டால் செய்ய வேண்டிய வைத்தியம் குறித்தும் அவர் பேசினார்.

பாம்புக் கடியைத் தவிர்க்கும் வழிமுறைகள்!

''பாம்பைக் கண்டதும் அதை விட்டு விலகிச் சென்றால், அதுவும் நம்மை விட்டு விலகிச் சென்று விடும். புல்வெளி மற்றும் புதர்களில் இறங்குவதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். இரவு நேரங்களில் டார்ச் லைட் எடுத்துச்செல்ல வேண்டும். வீட்டில் எலிகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வழிப்பாதைகளில் உள்ள இலைகள், புதர்களை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வனப்பகுதிகளில் செல்லும்போது காலணிகளைப் பயன்படுத்த வேண்டியது அவசியம்''

பாம்பு மனிதர்

பாம்பு கடித்து விட்டால் என்ன செய்ய வேண்டும்?

''பாம்பு கடித்து விட்டால், பதற்றப்படக் கூடாது. உதவிக்கு யாரையாவது அழைக்க வேண்டும். உடலைத் தேவைக்கு அதிகமாக அசைக்க வேண்டாம். பாம்பு கடித்த இடத்தைக் கீறுவது, அந்த இடத்தில் கட்டுப் போடுவது போன்றவை தேவையில்லை. பாம்பு கடிபட்டவர்கள் வேகமாக ஓடக்கூடாது. இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து உடல் முழுவதும் ரத்தத்தின் மூலமாக விஷம் பரவி விடும். மந்திரவாதியிடம் செல்வது, பச்சிலை வைத்தியம் பார்ப்பது போன்ற கால தாமதத்தை ஏற்படுத்தாமல் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விஷ முறிவு வைத்தியம் செய்ய வேண்டும்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close