Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குமரி கடற்கரையைச் சுத்தம்செய்யும் கூடங்குளம் ஜவான்கள்!

கூடங்குளம் அணு உலைக்கான பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வரும் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர், குமரிக் கடற்கரையைச் சுத்தப்படுத்தினர்.

கூடங்குளத்தில், இரு அணுஉலைகள் செயல்பட்டுவருகின்றன. மேலும், இரு அணுஉலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கூடுதலாக, மேலும் இரு அணுஉலைகளை அமைக்கவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்த நிலையில், கூடங்குளம் அணுஉலை வளாகத்தின் பாதுகாப்புப் பணிகளை மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்டுவருகின்றனர். கூடங்குளம் அணு உலை மற்றும் அலுவலர்களின் குடியிருப்புப் பகுதிகள், இந்தப் படையினரின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.

குமரி கடற்கரை

சி.ஐ.எஸ்.எஃப் படையினர், கூடங்குளம் அணுஉலையைப் பாதுகாப்பது மட்டும் அல்லாமல், மக்கள் பணியிலும் ஈடுபட விரும்பினர். இதையடுத்து, கடந்த ஜூலை 23-ம் தேதி, குமரிக் கடற்கரையில் சூரிய அஸ்தமனம் காணுவதற்காக சுற்றுலாப் பயணிகள் கூடும் இடத்தில் உள்ள குப்பைகளைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டனர். பிரதமரின் ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் இந்தப் பணியை அவர்கள் மேற்கொண்டனர். 

தொழில் பாதுகாப்புப் படையினரின் இந்தப் பணிகளை அந்த படைப்பிரிவின் டி.ஐ.ஜி-யான ஓ.பி.சிங் மற்றும் சன்ரக்‌ஷிகா தலைவியான நீலம் சிங் ஆகியோர் தொடங்கிவைத்ததுடன், தாங்களும் களம் இறங்கிப் பணிகளை மேற்கொண்டனர். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் சுத்தப்படுத்தும் பணியைச் செய்துவந்தனர். இதனால் குமரிக் கடற்கரை, சுத்தம் மிகுந்த இடமாக மாறத் தொடங்கியது.

குமரி கடற்கரையில் சுத்தம் செய்தல்

இந்த நிலையில், ஆகஸ்ட் 7-ம் தேதி மீண்டும் குமரிக் கடற்கரையைச் சுத்தம்செய்யும் பணியில் ஈடுபட்டனர். அத்துடன், வியாபாரிகள் உள்ள இடத்திலும் சுத்தம்செய்யும் பணி நடந்தது. மேலும், அந்தப் பகுதிக்கு வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள், கடற்கரையில் குப்பைகளைப் போடுவதைத் தவிர்க்கும் வகையில் குப்பைத் தொட்டிகளை அமைத்தனர். பொதுமக்கள் அதில் குப்பைகளைப் போட வேண்டும் என்றும் கடற்கரையை அசுத்தம் செய்யக்கூடாது என்றும் சி.ஐ.எஸ்.எஃப் வீரர்கள் வலியுறுத்தினர். 

இந்த நிகழ்ச்சியில், சி.ஐ.எஸ்.எஃப் கமாண்டன்ட் தனஞ்சய் சுக்லா, கூடங்குளம் அணு உலையின் உதவிப் பொது மேலாளர் தனசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார், கோவளம் கிராமப் பஞ்சாயத்து செயல் அலுவலர் லித்வின் மேரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் முயற்சியால், குமரியின் சூரிய அஸ்தமனம் பார்வையிடும் கடற்கரைப் பகுதி சுத்தம் மிகுந்ததாக மாறிவருகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close