Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மிகப்பெரிய வெட்கக்கேடு'! - சகாயத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய ஜி.ராமகிருஷ்ணன்

சகாயம்- ராமகிருஷ்ணன்

ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014, 2015-ம் ஆண்டிலும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், கிரானைட் முறைகேட்டில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பைத் தவறிழைத்த நிறுவனங்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் தமிழக அரசு வசூலிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்திக்கொண்டிருக்கும் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014-ம் ஆண்டிலும், 2015-ம் ஆண்டிலும் விடுக்கப்பட்ட கொலை மிரட்டல் குறித்து இன்று வரையிலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது மிகப்பெரிய வெட்கக்கேடு. இந்தக் காலத்தில் நரபலி குறித்து விவரங்களைத் தந்து உதவிய சேவற்கொடியோன் மிகக் கடுமையாக மிரட்டப்பட்டிருக்கிறார், அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டிருக்கிறது.

இதேபோன்று முறைகேடுகள் நடந்த இடத்தை வான் வழியாக ஆய்வு செய்வதற்கு சகாயத்துக்கு உதவிய பார்த்தசாரதி என்பவர் சந்தேகப்படும்படி விபத்தில் இறந்திருக்கிறார். நீதிமன்றத்தின் மூலம் நியமிக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் ஆணையர், ஐ.ஏ.எஸ். அதிகாரி தமிழகம் முழுவதும் அனைவராலும் பேசப்படுகிற முறைகேட்டை விசாரித்துக்கொண்டிருப்பவர் என்கிற இத்தனை அம்சங்களோடும் இருக்கும் ஒருவர் தன் உயிருக்கும், விசாரணைக்கு உதவியவர்களின் உயிருக்கும் பாதுகாப்பில்லை, ஆபத்து சூழ்ந்திருக்கிறது என்று சொல்லுவது தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் மிகப் பெரிய அவக்கேடாகும்.

தமிழக அரசு கொலை மிரட்டல்கள் குறித்தும் சந்தேக மரணம் தாக்குதல்கள் குறித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தாத அதிகாரிகளின் நடவடிக்கைகள் பற்றி நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த முன்வர வேண்டும். சகாயம் மற்றும் அவருக்கு உதவியவர்கள் யாருக்கெல்லாம் பாதுகாப்பு இல்லை என்று அவர் கருதுகிறாரோ அவர்களுக்கு எல்லாம் உரிய முறையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும். சகாயம் அறிக்கையை உடனடியாக வெளியிடவும், அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறிழைத்தவர்கள், தவறுக்கு உடந்தையாக இருந்தவர்கள் அனைவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பை தவறிழைத்த நிறுவனங்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள் அனைவரிடமிருந்தும் தமிழக அரசு வசூலிக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close