Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அன்புச் சுவரின் நோக்கம் அடிபடுகிறதே...! - சமூக ஆர்வலர்களின் ஆதங்கம்

அன்புச் சுவர்

நெல்லையில் செயல்படுத்தப்பட்டு வரும் அன்புச் சுவர் திட்டத்தில், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையற்ற குப்பைகளைக் கொண்டு வந்து குவிப்பதால் அந்தத் திட்டத்தின் நோக்கமே சிதைந்து வருகிறது.

தமிழகத்திலேயே முதல் முறையாக 'அன்புச் சுவர்' என்கிற உன்னதமான திட்டம் நெல்லையில் அறிமுகப்படுத்தப்பட்டது. நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரான சந்தீப் நந்தூரி கொண்டு வந்த இந்தத் திட்டத்தின்படி, தங்களுக்குத் தேவை இல்லாத, அதே சமயம் பிறருக்குப் பயன்படக் கூடிய பொருள்களை பொதுமக்கள் அன்புச் சுவரில் கொண்டு வந்து வைக்கலாம். அதனைத் தேவைப்படுபவர்கள் வந்து எடுத்துச் செல்வார்கள். 

அன்புச் சுவர் பொருட்கள்

புத்தகங்கள், நோட்டு, பென்சில், பேனா, உபயோகப்படுத்தக் கூடிய துணிகள், பெட்ஷீட், காலணிகள் உள்ளிட்ட எந்தப் பொருளையும் கொண்டு வந்து வைக்கலாம். அதனை தேவைக்கு ஏற்ப மக்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்தத் திட்டத்துக்கு ஆட்சியர் அலுவலக சுவரில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டு கண்ணாடி ஷெல்ப்புகள் அமைக்கப்பட்டன. அவற்றில் மக்கள் பொருள்களை வைத்து வருகின்றனர். 

அன்புச் சுவரில் குப்பைகள்

இந்தப் பொருள்களை ஒழுங்குபடுத்தி உரிய இடத்தில் வைப்பதற்காக இந்திய செஞ்சிலுவைச் சங்கம், அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளை, திருவள்ளுவர் ரத்ததான கழகம் உள்ளிட்ட அமைப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இந்த அமைப்பினர் இரவு, பகல் பாராமல் அன்புச் சுவரில் வைக்கப்படும் பொருள்களைத் தனித்தனியே பிரித்து சுவரில் வைக்கிறார்கள். இருப்பினும், ஒரு சிலர் தங்களுடைய வீட்டில் கிடக்கும் குப்பைகள், கந்தலான துணிகளைக் கொண்டு வந்து குவிப்பதாக புகார் எழுந்துள்ளது.

குப்பைகள் குவிக்கப்படுவதால், அந்த இடமே சுகாதாரச் சீர்கேட்டுடன் இருப்பதால் பொருள்களை எடுக்க விரும்புவோர் அருகில் செல்லவே கூச்சப்படும் நிலைமை உருவாகி இருக்கிறது. இதையடுத்து, தரமான பொருள்களை மட்டும் அந்த சமூக ஆர்வலர் மகேஷ்இடத்தில் வைக்குமாறு தொண்டு அமைப்பினர் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அன்னை தெரசா பொதுநல அறக்கட்டளையைச் சேர்ந்த மகேஷ் கூறுகையில், ’’அன்புச் சுவர் திட்டம் என்பது தொண்டு நோக்கத்துடனான மிகவும் அற்புதமான திட்டம். தமிழகத்தில் முதல் முதல்முறையாக நமது ஆட்சியரால் இங்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. பொதுமக்கள் பயன் அடையும் வகையில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதனால், பொதுமக்களும் இந்தத் திட்டத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ஒரு சிலர் பழைய கிழிந்த ஆடைகளையும், உள்ளாடைகளையும் இங்கே கொண்டு வந்து கொட்டி விட்டுச் செல்கிறார்கள். பிறருக்குப் பலன் அளிக்கும் என நம்பும் துணிகளை மட்டுமே இங்கே வைக்க வேண்டுமே தவிர, பிறருக்குப் பயன் தராத குப்பைகளை இங்கே வைப்பதைத் தவிர்க்க வேண்டும். 

தற்போது பெய்யும் மழையிலும் இரவு நேரங்களிலும் துணிகளை மடித்து உரிய இடத்தில் வைக்கும் பணியில் சமூக அக்கறையுடன் அந்தோணிகுரூஸ் அடிகள், ஜெபசிங், தங்கராஜ், கார்த்திக், ஆறுமுகராஜ், ராகுல், பிரவீன், கணேசன், பெஜஸ்டின்,  ராஜ், ஜேசுராஜ், செல்வா, தமிழ்செல்வா, தேவநாதன், தாஹீர் உள்ளிட்டோர் பணியாற்றி வருகிறார்கள். இந்தத் திட்டத்தின் நோக்கம் நிறைவேற வேண்டுமானால், பிறருக்குப் பயன்படும் பொருள்களை மட்டுமே இங்கே வைக்க மக்கள் உறுதி ஏற்க வேண்டும். இங்கே இந்த திட்டம் சிறப்பாகச் செயல்படுவதைப் பொறுத்தே பிற இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்பதால் இந்த வாய்ப்பை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்’’ எனக் கேட்டுக்கொண்டார்.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close