Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

`தமிழகத்தின் பிக்காசோ’, `கோட்டாசான்' ஓவியர் ஆதிமூலம் படைப்புகள் விற்பனை!

சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள `ஆர்டோஸ்' கலைச்சாலையில், ஓவியர் ஆதிமூலத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவியங்களின் மேட் பிரின்ட், விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை, மிக மிகக் குறைந்த அளவில் அச்சிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளன. தமிழில் ஓர் ஓவியரின் படைப்புக்கு இப்படியான லிமிடெட் எடிஷன் வந்திருப்பது இதுவே முதல்முறை. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள படங்களில் காந்தி நூற்றாண்டையொட்டி ஆதிமூலம் வரைந்த காந்தியின் மிகச் சிறப்பான ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. கொற்றவை, கான்ஃபூசியஸ், அடவி கட்டிய நாட்டுப்புறக் கலைஞர், விநாயகர் என விதவிதமான கோட்டுச் சித்திர பாணி ஓவிய முறைகளில் வரையப்பெற்ற கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. 

ஆதிமூலம்

``என் ஓவியங்களும் வரைபடங்களும் என் உணர்வுகளை வெளிப்படுத்த உதவுகின்றன. என் வரைபடங்கள், நான் கண்களில் பார்த்தவற்றை அப்படியே வரைவதால் உருவானவை அல்ல. அவை அழகியல் உணர்வு என்று கருதுகிறேன். அது மனதில் தொடர்ந்து பதிவுபெற்றுள்ளதால், கறுப்பு-வெள்ளை வடிவில் காகிதத்தில் பதிவாகிறது" என்று ஒருமுறை மறைந்த ஓவியர் ஆதிமூலம் தெரிவித்தார். 

திருச்சியில் பிறந்த ஆதிமூலம், சென்னை கலை மற்றும் கைவினைக் கல்லூரியில் பட்டயப்படிப்பு முடித்தவர். ஆதிமுலத்தின் ஓவியங்கள், தமிழ் கலை வரலாற்றில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியது. அவரது கோடுகளும், பட்டை ஓவியங்களும் பெரும் ஈர்ப்பை ஏற்படுத்தின. 

``தமிழ்ச் சமூகத்தின் பாரம்பர்யக் கலை மரபின் 20-ம் நூற்றாண்டின் தொடர்ச்சியாகவும் அடையாளமாகவும் ஆதிமூலம் இருக்கிறார். முற்றக்கோலங்கள், மதுபானி, கலங்காரி போன்ற பிற மரபுகளிலிருந்து நவீன ஓவிய உலகம் பெற்றுள்ள செழுமைகள் ஏராளம். இதை ஆதிமூலத்தின் ஊடாகவும் நாம் புரிந்துகொள்ள முடியும். இந்த வகையான ஆளுமை தமிழ்ச் சமூகத்துக்கு வாய்த்தமைக்கு நாம் என்றும் கர்வம்கொள்ளலாம். அவரை `தமிழகத்தின் ரெம்பாராண்ட்', `தமிழகத்தின் பிக்காசோ' என்றெல்லாம் அழைக்கிறார்கள். பிக்காசோ கோடுகளை, தமது கோடுகளாக மாற்றியவர் ஆதிமூலம். பிக்காசோவின் ஆளுமையின் வளங்களை எல்லாம் தனக்கான, நம் மண்ணுக்கான வளங்களாக மாற்றிக்கொண்டார். பிக்காசோவும் கீழைத்தேயக் கலை மரபுகளின் தாக்கத்துக்கு உட்பட்டவரே. இந்த வகையான ஆளுமைச் செயல்பாடுகள், மிகமிக அரிய நிகழ்வே. அதனால்தான் நம் பிக்காசோவாக ஆதிமூலம் இருக்கிறார். உலகம் தழுவிய ஆளுமையான பிக்காசோவின் இன்னொரு பரிமாணமாக ஆதிமூலத்தைப் பார்க்கலாம் எனத் தோன்றுகிறது" என்று ஓவியர் ஆதிமூலம் பற்றி பேராசிரியர் வீ.அரசு குறிப்பிட்டார்.  

``ஓவியர் ஆதிமூலத்தின் ஓவியங்களை, மேலை நாடுகளைப்போல `குறிப்பிட்ட அளவு' மட்டுமேகொண்ட மேட் காப்பிகளாக விற்பனை செய்யும் எண்ணம் எப்படி ஏற்பட்டது?'' என்று அவரின் மகன் அபிநந்தனிடம் கேட்டோம்.  

``படைப்பாளி இல்லாத நிலையில் படைப்பை அணுகும் அனுபவம், வேறுவிதமாகக் கிடைக்கும். ஏனெனில், அதில் உங்களுக்கு ஏற்படும் கேள்விகளுக்கு, படைப்பினுள்தான் நீங்கள் விடை தேட வேண்டும். ஆசியன் ஆர்ட் கேலரி வைத்திருக்கும் சந்தானகிருஷ்ணனும் அப்பாவின் மாணவர் மார்க் ரத்தினசாமியும் நண்பர்கள். ஆதிமூலத்தின் படைப்புகளை ஓவிய ஆர்வமுள்ளவர்களுக்குப் பயன்படும் வகையில் ஏசி அறையில் பாதுகாத்து வைத்திருந்தாலும், அவை வரையப்பட்டுள்ளது பேப்பரில்தானே. எனவே அதைப் பாதுகாப்பது கடினம். எனவே, நவீனமுறையின் மூலம் பிரான்ஸில் இந்த ஓவியங்களைப் பதிவுசெய்து, அதற்கான பதிவு எண் வாங்கப்பட்டுள்ளது. அப்பாவின் கையால் வரையப்பெற்ற ஓவியங்கள் எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவுக்கு நூற்றுக்கு நூறு ஒரிஜினலைப்போல இந்த மேட் பிரின்ட் காப்பி வெளிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு காப்பிக்கும் ஒரு குறிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. இதை விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதற்கு நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்ததாக வேறு இடங்களிலும் இதே போன்று ஒரு காட்சி விரைவில் இருக்கும். இதை சந்தானகிருஷ்ணனும் மார்க்கும் நெறிப்படுத்திவருகிறார்கள். ஒவ்வொரு காப்பியும் குறைந்தது 50 முதல் 100 காப்பிகள் வரை மட்டுமே அச்சிடப்பட்டுள்ளன. சர்வதேசத் தரத்தில் இந்த மேட் காப்பி பிரின்ட்கள் உருவாகியுள்ளன. இந்தக் காட்சி புதியவர்களுக்கும், ஏற்கெனவே சிறப்பாக வரைந்துவரும் ஓவியவர்களுக்கும் ஊக்கமளிக்கும் வகையில் இருக்கிறது" என்று தெரிவித்தார்.

இந்த ஓவியக் கண்காட்சி, ஆகஸ்ட் மாதம் 10-ம் தேதி வரை `ஆர்டோஸ், 41,கஸ்தூரிரங்கா சாலை, போயஸ் கார்டன்' என்ற முகவரியில் நடைபெறுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close