Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இனி அவர்கள் நிம்மதியாக இருக்க முடியாது!' - முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அடுத்த 'மூவ்' #VikatanExclusive

தினகரன், திவாகரன்

சசிகலா குடும்பத்தினருக்கு சவால்விடும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராகிவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 

அ.தி.மு.க-வில் நடந்துவரும் கோஷ்டி பூசல் அரசியலுக்கு விரைவில் தீர்வு எட்டப்படவுள்ளது. அதற்கான சூழ்நிலை அ.தி.மு.க-வில் நிலவுவதாகக் கட்சியின் உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தினகரனும் இரு துருவங்களாகச் செயல்பட்டுவருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பிரதமர் மோடியுடன் நட்பில் உள்ளனர். அதுபோல சசிகலாவின் அறிவுரைப்படி தினகரன் செயல்பட்டுவருகிறார். சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தர்மயுத்தத்தை நடத்திவருகின்றனர். 

கட்சி அதிகாரத்தில் சசிகலாவும் தினகரனும் உள்ளனர். அவர்களது பதவி விவகாரம் தேர்தல் ஆணையத்தின் கையிலிருக்கிறது. அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என்ற முடிவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், சசிகலாவையும் தினகரனையும் கட்சியிலிருந்து நீக்கினால் ஆட்சியும் கட்சியும் அழிந்துவிடும் என்று தினகரனின் ஆதரவாளரான கர்நாடக மாநிலச் செயலாளர் (அம்மா அணி) புகழேந்தி தெரிவித்துள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி


 இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்சித் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனைக் கூட்டத்தை நடத்துகிறார். கடந்த முறை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இரு அணிகள் இணைப்புக் குறித்து விவாதிக்கப்பட்டது. ஆனால், இந்தமுறை இரு அணிகள் இணைப்புக் குறித்தும் சசிகலா விவகாரம் குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று முதல்வர் தரப்பினர் தெரிவித்தனர். 
 இதுகுறித்து நம்மிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர், ''தமிழகம் முழுவதும் தினகரன், சுற்றுப் பயணத்தை நடத்த திட்டமிட்டுள்ளார். மேலூரில் நடக்கும் கூட்ட ஏற்பாடுகளைப் பார்வையிட அவர் நாளை மறுநாள் செல்வதாகத் தகவல் உள்ளது. அந்தக் கூட்டம், கட்சியில் சிக்கலை ஏற்படுத்தும். ஏற்கெனவே கட்சி பிளவுப்பட்டுள்ள நிலையில் தினகரன் நடத்தும் கூட்டத்தால் அது, மேலும் பலவீனமாகும் என்று கருதுறோம். அந்தக்கூட்டத்தை நடத்தவிடாமல் தடுப்பது மற்றும் கட்சியினரை கூட்டத்தில் பங்கேற்கவிடாமலிருப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மற்றும் இரட்டை இலைச் சின்ன விவகாரம் ஆகியவற்றுக்குப் பிறகு, தினகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அமைதியாக இருந்தனர். சிறையில் சசிகலாவுக்கு ஏற்பட்ட சிக்கலுக்குப் பிறகு, தினகரன் தரப்பு கட்சிக்கு நெருக்கடியைக் கொடுக்கத் தொடங்கியுள்ளது. 
அந்த நெருக்கடிக்குத் தொடக்கத்திலேயே முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்துள்ளோம் என்று ஆலோசித்தபோது கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர், சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்கிவிடலாம் என்று ஆலோசனை தெரிவித்தனர். அதற்குச் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களிடம் கட்சியின் நிலைகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கமாக எடுத்துக்கூறிய பிறகு, எதிர்ப்பு தெரிவித்தவர்களும் அமைதியாகிவிட்டனர். 
 சசிகலா குடும்பத்தினரின் அதிகார மோதலுக்கு விரைவில் முட்டுக்கட்டை போடப்படும். அதன்பிறகு, அவர்களால் இனி நிம்மதியாக இருக்க முடியாது'' என்றனர். 

சசிகலா

 தினகரன் தரப்பினர் கூறுகையில், ''சந்தான லெட்சுமியின் படத்திறப்பு விழா நாளை தஞ்சாவூரில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தினகரன், திவாகரன் மற்றும் சசிகலா குடும்பத்தினர் பங்கேற்கவுள்ளனர். அப்போது, கட்சி விவகாரம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும். சசிகலா சொல்லியனுப்பிய தகவல்கள் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்த பிறகு, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தினகரன், தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணத்தை அறிவித்த பிறகு, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் கலக்கத்தில் உள்ளனர். அடுத்து, கட்சி நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டதால் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தங்களது பதவிகளும் பறிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் இரண்டு அணிகளைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். தினகரனுக்கும் திவாகரனுக்கும் கட்சியில் உள்ள செல்வாக்கைக் கண்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் கட்சியை ஒருங்கிணை நடவடிக்கை எடுப்பார்கள். சசிகலா குடும்பத்தினரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக முடிவு எடுக்கப்பட்டால் அது முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குத்தான் சிக்கலை ஏற்படுத்தும்'' என்றனர் ஆவேசமாக  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close