Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதிய கிணறு வெட்டப்போகிறாராம் பன்னீர்செல்வம்..!

ஓ.பி.எஸ்

தேனி மாவட்டம் லெட்சுமிபுரம் கிராம மக்கள் கடந்த ஒரு மாதமாக தங்களின் அடிப்படைத் தேவையான தண்ணீருக்கான போராட்டத்தை நடத்திவருகிறார்கள். இந்நிலையில், அந்தக் கிராமத்தில் உள்ள கிணற்றை ஊருக்குத் தானமாக எழுதித் தருகிறேன் என்று உறுதியளித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதனை தனது நண்பர் சுப்புராஜ் பெயருக்கு எழுதிவைத்துவிட்டார். இதனால் ஏமாற்றமடைந்த லெட்சுமிபுரம் கிராம மக்கள், கடந்த மூன்று நாள்களாக தொடர் போராட்டத்தில் இறங்கினர். முதல் நாளில் உண்ணாவிரதப் போராட்டமும், இரண்டாவது நாளில் குத்துவிளக்கு ஏந்தும் போராட்டமும், மூன்றாவது நாளன்று மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்தினர். அடுத்தக்கட்டமாக சுற்றியுள்ள அனைத்து கிராமங்களையும் ஒன்றிணைத்து மாபெரும் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

கிராம கமிட்டியை அழைத்துப் பேசிய பன்னீர்செல்வம்:

லெட்சுமிபுரம் கிராம மக்களின் தொடர் போராட்டம் காரணமாக, பெரியகுளம் அருகே கைலாசப்பட்டியில் இருக்கும் தனது பண்ணைவீட்டிற்கு வருமாறு, கிராம கமிட்டியைச் சேர்ந்தவர்களுக்கு பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். அழைப்பை ஏற்று கிராம கமிட்டியைச் சேர்ந்தவர்கள் பண்ணை வீட்டிற்கு புறப்பட்டனர். அங்கே, பன்னீர்செல்வம் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் ஒருமணி நேரம் நீடித்த அந்தப் பேச்சுவார்த்தையில் எந்தமுடிவும் எட்டப்படவில்லை.

முன்னதாக, பண்ணை வீட்டில் நடந்த பேச்சுவார்த்தையில் என்ன பேசினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. இந்நிலையில் கிராம கமிட்டியைச் சேர்ந்தவர்கள் கிராமத்திற்குத் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து வந்த பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், 'மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம்' என்று அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பை ஏற்ற கிராமகமிட்டியினர், லெட்சுமிபுரம் ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தரப்பில் கவிதாலயா சரவணன், அரண்மனை சுப்பு, கோபாலபுரம் முருகேசன், கெளமாரி சுரேஷ், அம்பை பாண்டியராஜன் என ஐவர் குழு கலந்துகொண்டது. 

ஓ.பி.எஸ்

ஒருமணி நேரமாகப் நடைபெற்ற பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த கிராம கமிட்டியினர், “பன்னீர்செல்வம், அந்த கிணற்றையும் அதன் அருகில் இருக்கும் இரண்டு போர்வெல்களையும் கொடுப்பதாக ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், கிணற்றுக்கு அருகில் இருக்கும், 2 ஏக்கர் 31 செண்ட் நிலத்தில் புதிதாக ஒரு கிணறு வெட்டிக்கொள்வதாகக் கூறினார். அதற்கு நாங்கள் சம்மதிக்கவில்லை. அப்படி புதிய கிணறு வெட்டினால், நாங்கள் இத்தனை நாள்கள் போராடியதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். எனவே, அந்த 2 ஏக்கர் 31 செண்ட் நிலத்தையும் எங்களுக்கே கொடுத்துவிடும்படி கூறினோம். அதுதொடர்பாக இரண்டு நாள்களில் நல்ல முடிவை அறிவிப்பதாக பன்னீர்செல்வம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஐந்து நாள்கள்கூட எடுத்துக்கொள்ளுங்கள். எங்களுக்கு அந்த கிணறு எவ்வளவு முக்கியமோ, அதேபோல அதன் அருகில் எந்த கிணறும் அமைக்கக்கூடாது என்பதும் மிகமுக்கியம் என்று தெரிவித்தோம்.

குடிநீர் என்பதைத் தாண்டி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கக்கூடிய இதுபோன்ற ராட்சத கிணறு, இனி எங்கள் பகுதியில் வெட்டப்படுவதை நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்” என்றனர்.

ஓ.பி.எஸ்

முதல்முறையாக பேசிய பன்னீர்தரப்பு!

பேச்சுவார்த்தை தொடர்பாக பன்னீர்செல்வம் தரப்பினர் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினர். அப்போது, "அந்த கிணற்றையும் அதன் அருகில் இருக்கும் இரண்டு போர்வெல்களையும் ஊருக்குக் கொடுப்பதாக பன்னீர்செல்வம் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் அருகில் இருக்கும் 2 ஏக்கர் 31 செண்ட் நிலத்தில் நாங்கள் புதிய கிணறுஒன்றை வெட்டிக்கொள்ளலாமா என்று கேட்டோம். அதற்கு கிராம கமிட்டியினர் ஒப்புக்கொள்ளவில்லை. இதுதொடர்பாக பன்னீர்செல்வம் ஒரு நல்ல முடிவை எடுப்பார். விரைவில் இந்தக் கிணறு பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும்” என்றனர்.

ஏனோ தெரியவில்லை, இந்த கிணறு பிரச்னையை விரைவாக முடிக்கவேண்டும் என்ற ஆர்வத்தையும், பரபரப்பையும் பன்னீர்செல்வம் தரப்பினரிடையே பார்க்க முடிந்தது. ஒரு வேளை தர்மயுத்தத்தின் க்ளைமேக்ஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறதோ என்னவோ.! எது, எப்படியோ, கடந்த ஒரு மாதகாலமாக ஒட்டுமொத்த கிராமமும் ஓரணியில் நின்று தங்கள் பிரச்னைக்காக போராடியது வீண்போகவில்லை என்று நம்புவோம்!

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close