Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அ.தி.மு.க-வில் ஆதிக்கம்... பலிக்குமா பி.ஜே.பி-யின் சக்கர வியூகம்?

பி.ஜே.பி. வியூகத்தில்  எடப்பாடி - ஓ.பன்னீர்செல்வம்

திரியை ஒரு வளையத்துக்குள் சிக்க வைத்து, அதில் இருந்து வெளியேற முடியாமல் செய்து வீழ்த்துவதே போரில் சக்கர வியூகம். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நடப்பது போரும் அல்ல; மத்தியில் ஆளும் பி.ஜே.பி. மேற்கொண்டுள்ள மோடி வித்தை சக்கர வியூகமாகவும் தெரியவில்லை.

"அ.தி.மு.க-வின் இரு அணிகளும் இணைய வேண்டுமானால், சசிகலா குடும்பத்தினரை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும்; ஜெயலலிதா மரணத்துக்கு தமிழக அரசு சி.பி.ஐ. விசாரணை நடத்தப் பரிந்துரை செய்ய வேண்டும்" என்று முக்கியமான இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க நிர்வாகிகள் நேற்று, கட்சியின் தலைமை அலுவலகத்தில் கூடி, நிறைவேற்றியுள்ள தீர்மானத்தில், ஓ.பி.எஸ். வைத்த கோரிக்கையில் ஒன்றைக்கூட முழுமையாக நிறைவேற்றவில்லை என்றுதான் தெரிகிறது. தினகரன் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று மட்டுமே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டு, அந்தக் கட்சியின் சட்டமன்றக் கட்சித்தலைவராக (ஓ.பி.எஸ் உள்பட) அனைத்து எம்.எல்.ஏ-க்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலாவை பொதுச்செயலாளராக ஏற்க முடியாது என்ற கோரிக்கையை அந்தத் தீர்மானத்தில் எடப்பாடி தரப்பினர் வலியுறுத்தவில்லை. அப்படியென்றால், "தினகரனை மட்டும்தான் நாங்கள் ஏற்கவில்லை; சிறையில் இருக்கும் சசிகலா பொதுச்செயலாளராக தொடர்வார்? திவாகரன் உள்பட அவரின் இதர குடும்பத்தினர் கட்சியின் அதிகாரமட்டத்தில் தங்களின் செல்வாக்கைக் கடைபிடிப்பார்கள்" என்று எடுத்துக்கொள்ளலாமா?

ஓ.பன்னீர்செல்வம்வேறு எங்கேயோ இருந்து வரும் நெருக்கடிகள், அழுத்தங்களுக்கு ஏற்ப, எடப்பாடியும், ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுகிறார்கள் என்பதை தமிழக மக்களும், அ.தி.மு.க. தொண்டர்களும் உணராமல் இல்லை. எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை; சகோதரச் சண்டை என்று அ.தி.மு.க-வின் இரு அணிகளைச் சேர்ந்தவர்களுமே தொடர்ந்து கூறி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் நேரடியாக ஒருவரையொருவர் கடிந்தோ அல்லது தாக்கியோ பேசிக்கொள்ளவில்லை. ஏனென்றால், "ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான் நாம்" என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அ.தி.மு.க-வில் எப்போது என்ன முடிவை எடுக்க வேண்டும் என்று பி.ஜே.பி மேலிடம் உத்தரவு பிறப்பித்து வருவதாகவே தெரிகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது, "இம் என்றால் சிறைவாசம்; ஏன் என்றால் வனவாசம்" என்ற ரீதியில் அப்போது ஆங்கிலேயர்களை எதிர்த்துப் பேசினாலோ அல்லது பிரிட்டிஷாரை எதிர்த்துச் செயல்பட்டாலோ மக்கள் இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது. ஆனால், நாட்டுக்கு சுதந்திரம் பெற்றாக வேண்டும் என்ற நல்ல நோக்கத்துக்காக பல்லாயிரக்கணக்கானோர் ஆங்கிலேய அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, சிறை சென்றனர். சிலர் தங்கள் உயிரையும் இழந்தனர். 

ஆனால், தமிழகத்தில் தற்போது நடைபெறுவதோ, தங்கள் பதவியையும், சொத்துகளையும், சேர்த்து வைத்த கோடிகளையும் பாதுகாத்துக் கொள்ள மத்திய அரசை எதிர்த்துப் பேசாத, பி.ஜே.பி-யுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிக்கவே முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் அவர்களுடன் இருப்போரும் விரும்புகின்றனர். "எதிர்த்தால் வரும் என்போர்ஸ்மென்ட் துறை, ஏன் என்று கேள்வி எழுப்பினால் இன்கம்டாக்ஸ் ரெய்டு" என்ற அச்சத்தில், ஒட்டுமொத்த அ.தி.மு.க-வையும் அடகுவைக்கும் நடவடிக்கைகள்தான் இப்போது அரங்கேறி வருவதாகத் தெரிவிக்கிறார்கள் விவரம் அறிந்த அரசியல் நோக்கர்கள்.

2014 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் பி.ஜே.பி-யுடன் அ.தி.மு.க. கூட்டணி வைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்போதைய முதல்வரும், அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவருமான ஜெயலலிதா, தன்னிச்சையாக அறிவித்தார் "தங்கள் கட்சி தனித்துப் போட்டியிடும்" என்று. மத்திய அமைச்சர்கள், பி.ஜே.பி. சார்பில் தூதுவர்கள் என எத்தனையோ பேர், அ.தி.மு.க-வுடன் அப்போது கூட்டணி வைக்க விருப்பம் தெரிவித்து, ஜெயலலதாவைச் சந்தித்தபோதும், அவர் சொன்ன பதில், "தேர்தலுக்குப் பின் பார்க்கலாம்" என்பதுதான். ஜெயலலிதாவின் நாடாளுமன்றத் தேர்தல் வியூகத்தால், தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் அ.தி.மு.க 37 தொகுதிகளைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாகவும், இந்திய அளவில் அதிக மக்களவை உறுப்பினர்களைக் கொண்ட மூன்றாவது பெரிய கட்சி என்றும் உருவெடுத்தது.

பி.ஜே.பி-யில் பல்வேறு நண்பர்களையும், நெருக்கமான தலைவர்களையும் கொண்டிருந்தாலும், மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டம், நீட் தேர்வு முறை, உதய் மின் திட்டம் என பல்வேறு திட்டங்களை தொடர்ந்து எதிர்த்து வந்தார். "ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை முழுவதுமாக மத்திய அரசே ஏற்க வேண்டும்" என்றும் வலியுறுத்தினார். ஆனால், இந்தத் திட்டங்களுக்கு எல்லாம் ஓ.பி.எஸ்ஸூம், ஈ.பி.எஸ்ஸூம் ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்குள் சத்தமின்றி, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஏற்றுக்கொண்டனர்.

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின்போது அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு, ஓ.பி.எஸ். முதல்வராக தலைமைச்செயலகத்தில் இருந்தபோதே, அரசு தலைமைச் செயலாளர் வீட்டிலும், அலுவலகத்திலும் நுழைந்து ரெய்டு, தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது போன்ற அடுத்தடுத்த அஸ்திரங்களை ஏவி மத்திய அரசு, தமிழகத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களை அசைத்து, தங்கள் கைப்பாவையாக மாற்றிக்கொண்டுள்ளது. பற்றாக்குறைக்கு தினகரன் மீதான வழக்குகளை தீவிரப்படுத்தி அவரையும் வழிக்குக் கொண்டுவரும் முயற்சிகளில் ஈடுபட்டது. இரட்டை இலை லஞ்சம் தொடர்பான வழக்கில் அவரும் சிறை சென்று வந்த பின்னர் அ.தி.மு.க-வில் தீவிரமாகச் செயல்படத் தொடங்கினார். தமிழகத்தில் சுற்றுப்பயணம் என்று அறிவித்தார். 

எடப்பாடி பழனிசாமிஓ.பன்னீர்செல்வத்தை தங்கள் ஆதரவாளராக ஏற்கெனவே மாற்றிவிட்ட பி.ஜே.பி அரசு, முதல்வர் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்து, கட்சியின் இரு அணிகளையும் இணைக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. அதற்கு இடையூறாக இருக்கும் தினகரனை கட்சியை விட்டு ஓரங்கட்டுவதற்கும் மத்திய அரசிடம் இருந்தே அழுத்தம் வந்திருக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போது கட்சியை விட்டு வெளியேற்றுவதாகக் கூறும் இதே எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அமைச்சர்கள்தான், தொப்பி சின்னத்துக்காக, தினகரனுடன் இணைந்து ஆர்.கே.நகரில் வாக்குசேகரித்தனர். இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, துணைப் பொதுச்செயலாளர் நியமிக்கப்பட்டது சரியல்ல என்று ஏன் எடப்பாடி சொல்லவில்லை? 

எடப்பாடிக்கும், அவரின் அமைச்சரவை சகாக்களுக்கும் என்ன செய்வதென்று புரியாமல், அவசரகதியில் ஒரு கூட்டத்தை கூட்டி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர். இந்நிலையில், "தொண்டர்களின் விருப்பப்படி நடந்து கொள்வோம்" என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் குறிப்பிடும் தொண்டர்கள், டெல்லியில் உள்ளார்களா?

பல்வேறு உத்திகளைக் கையாண்ட பி.ஜே.பி. இறுதியாக, அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்கு சக்கர வியூகம் போன்று, ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ். தரப்பினருக்கு இறுதிக்கெடு அளித்திருப்பதாகவே தற்போதைய நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்த வியூகத்தில் சிக்கி, ஆட்சியைத் தக்கவைப்பார்களா? அல்லது பி.ஜே.பி-யின் வியூகத்தை உடைத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், ஆளுநரிடம் எடப்பாடி அரசுக்கான தங்கள் ஆதரவை விலக்கிக்கொண்டு, ஆட்சி கலைக்கப்படுமா? என்பதை அடுத்தடுத்த நாள்களில் நடைபெறவுள்ள இரு தரப்பினரின் வார்த்தைஜாலப் போருக்குப் பின்னர்தான் அறிந்துகொள்ள முடியும்.

குழப்பத்தில் இருக்கும் அ.தி.மு.க. தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், என்ன வியூகத்தை வேண்டுமானாலும் மேற்கொள்ளட்டும். விரைவில் போர் முடிவுக்கு வந்தால் போதும் என்றாகி விட்டது. ஏனென்றால், அவர்களுக்கு இடையேயான போரினால் பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருப்பது மக்கள்தான். இதனை உணர்ந்து செயலாற்ற வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close