Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“பிள்ளைங்களை காவு வாங்கியும் அடங்கலையா உங்க சட்டமும் திட்டமும்?!” - குமுறும் ‘கும்பகோண தீவிபத்து’ பெற்றோர்கள்

கும்பகோண தீவிபத்தில் பலியான குழந்தைகள்

கும்பகோணம், காசிராமன் தெருவில் செயல்பட்டு வந்த ஸ்ரீகிருஷ்ணா அரசு உதவி பெறும் பள்ளியில் கடந்த 2004ம் ஆண்டு ஜூலை 16- ம் தேதி ஏற்பட்ட தீவிபத்து நாட்டையே உலுக்கியது. 94 குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்த கோர விபத்து அது. இந்த வழக்கில் அனைத்துக் குற்றவாளிகளையும் விடுதலை செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கியுள்ள தீர்ப்பு, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தப்பிச் செல்ல வழியின்றி தீயில் கருகி இறந்த 94 குழந்தைகள், படுகாயமடைந்த 18 குழந்தைகள் எனக் கோர முகம் காட்டிய இந்தத் தீ விபத்தைத் தொடர்ந்து, பள்ளி நிறுவனர் பழனிச்சாமி, தாளாளரான அவர் மனைவி சரஸ்வதி கைதுசெய்யப்பட்டனர். மாவட்டக் கல்வி அதிகாரி, முன்னாள் மாவட்டக் கல்வி அதிகாரி, தொடக்கக்கல்வி அதிகாரி, சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிவில் 2014ம் ஆண்டு தீர்ப்பு வழங்கிய தஞ்சாவூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், பள்ளியின் நிறுவனர் பழனிச்சாமிக்கு ஆயுள் தண்டனையும், அவரது மனைவியும் பள்ளி தாளாளருமான சரஸ்வதி, தலைமை ஆசிரியை சாந்தலட்சுமி, மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி பாலாஜி, தொடக்கக்கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் துரைராஜ், தொடக்கக்கல்வி அலுவலக உதவியாளர் சிவப்பிரகாசம், தொடக்கக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் தாண்டவன், சத்துணவு அமைப்பாளர் விஜயலட்சுமி, சமையலர் வசந்தி ஆகியோருக்குத் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையும், பொறியாளர் ஜெயச்சந்திரனுக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது. ஒட்டுமொத்தமாக ரூ. 51 லட்சம் அபராதமும் விதித்தது. அதே நேரம் மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன் உள்பட 11 பேரை விடுதலை செய்தது.

இதனிடையே தண்டனைக்கு உள்ளான தாளாளர் சரஸ்வதி இறந்துவிட்டார். அவருடன் தண்டனை பெற்ற பழனிச்சாமி உட்பட ஏனைய 9 பேரும் தங்கள் மீதான தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். மாதவன் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசும் மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் மீது நீதிபதிகள் சத்திய நாராயணன், வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு வியாழனன்று(ஆக.10) தீர்ப்பு வழங்கியது. அப்போது, சாந்தலட்சுமி, பாலாஜி, துரைராஜ், சிவப்பிரகாசம், தாண்டவன், விஜயலட்சுமி, ஜெயச்சந்திரன் ஆகிய 7 பேரை வழக்கிலிருந்து விடுவித்ததுடன், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான பழனிச்சாமி,  ஐந்தாவது குற்றவாளியான சமையலர் வசந்தி ஆகியோரின் தண்டனையை மாற்றியமைத்து, அவர்கள் போதிய காலம் சிறையில் இருந்துவிட்டார்கள் என்ற காரணத்தின் அடிப்படையில் அவர்களையும் விடுதலை செய்வதாக நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், மாவட்ட முன்னாள் தொடக்கக் கல்வி அலுவலர் மாதவன் உள்பட 11 பேர் விடுதலையை எதிர்த்து, தமிழக அரசு செய்திருந்த மேல்முறையீட்டு மனுவையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். இதன் மூலம் 94 குழந்தைகள் பலியான கும்பகோணம் பள்ளித் தீ விபத்து வழக்கில், தண்டனை பெற்ற மற்றும் குற்றம்சாட்டப்பட்டிருந்த 21 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

பின்பராஜ் - கும்பகோண தீவிபத்து

விபத்தில் தன் இரண்டு குழந்தைகளையும் இழந்த இன்பராஜிடம் பேசியபோது, ''அந்த விபத்துக்கு என்னோட ரெண்டு ஆண் பிள்ளைகளையும் பறிகொடுத்துட்டேன். இப்போ குற்றவாளிகளை விடுவிச்சு தீர்ப்பு வழங்குனது ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. சம்பவம் நடந்து 10 வருஷத்துக்கு அப்புறம்தான் தீர்ப்பே கொடுத்தாங்க. பள்ளியோட தாளாளர் பழனிச்சாமிக்கு மட்டும் ஆயுள் தண்டனை, மத்தவங்களுக்கு அஞ்சு வருஷம் சிறை தண்டனைனு தீர்ப்பாச்சு. ஆனா, இவங்க எல்லாரும் இப்போ அடுத்த ரெண்டே வருஷத்துல வெளியில வந்துட்டாங்க. எங்க குழந்தைகளோட உயிர்களுக்கு நியாயமான தீர்ப்பா இது? உரிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாம பள்ளிகளை நடத்துறவங்களுக்கு, இந்தத் தீர்ப்பால பயம் விட்டுப் போயிடாதா? அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்யணும். எங்களோட 94 குழந்தைகளையும் பலிகொடுத்ததுக்கு அப்புறம்தான், அரசாங்கம் கூரைகள், கழிப்பறைகள் போன்றவை இல்லாத பள்ளிகள் மேல நடவடிக்கை எடுக்க ஆரம்பிச்சது. இப்போ அரசு மேல்முறையீடு செய்யலைன்னா நாங்க நிச்சயமா மேல் முறையீடு செஞ்சு குற்றவாளிகளுக்குக் குறைஞ்சது 15 வருஷமாச்சும் தண்டனை வாங்கிக்கொடுப்போம். எங்க புள்ளைகளை தீக்குக் கொடுக்கக் காரணமானவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கணும்'' என்றார் கண்ணீர் மல்க. 

சரவணன்

விபத்தில் தன் ஒரே பையனை பறிகொடுத்த சரவணன், “நேத்து மதியம் அந்தத் தீர்ப்பைப் பார்த்ததுல இருந்து வெளியில எங்கேயுமே போகல. எனக்கு என் மவன் நெனப்பாவே இருக்கு. ஆசையா பள்ளிக்கூடத்துக்குப் புள்ளையை அனுப்பினோம். அன்னைக்கு என் பையனை கரிக்கட்டையா தூக்கிட்டு வந்தேன். 94 குழந்தைங்களை இழந்த குடும்பங்களுக்கு என்னதான் பதில்? எங்க பிள்ளைங்க உயிருக்கு சட்டத்தோட மதிப்பு இதுதானா?” என்றார் குமுறலுடன்.

சூரியா குமாரி - கும்பகோண தீவிபத்து

விபத்தில் தன் பெண் குழந்தையைப் பறிகொடுத்த சூரியகுமாரி, “பள்ளியில் குழந்தைங்க இறந்ததுக்கு அவங்களோட அலட்சியம்தான் காரணம்னு எல்லோருக்கும் தெரியும். எதன் அடிப்படையில அவங்களை விடுதலை செய்றாங்க? சம்பவம் நடந்த அன்னைக்கு என் மகளை வேற ஒரு வகுப்புல டீச்சர் உட்காரச் சொல்லியிருக்காங்க. அவ மட்டும் அன்னைக்குத் தன்னோட வகுப்புலயே இருந்திருந்தா நிச்சயம் பிழைச்சிருப்பா'' என்கிறார் அழுகையுடன். 

கும்பகோண பள்ளி தீவிபத்து

விபத்தில் தன் பெண் குழந்தையைப் பறிகொடுத்த இலக்கியா, ''10 வருஷம் கழிச்சுதான் தீர்ப்புத் தந்தாங்க. 10 வருஷம் தண்டனைனு சொன்னாங்க. இப்போ ரெண்டு வருஷத்துல விடுதலை செய்துட்டாங்க. ஏழைங்க வீட்டுப் புள்ளைங்க உசுருனா இதுதானா நிலைமை? உங்க வீட்டுப் புள்ளைங்க மேல கீறல் விழுந்தாக்கூட தாங்க மாட்டீங்கதானே? ஆனா, எங்க புள்ளைங்களைத் தீக்கு முழுசா தின்னக் கொடுத்துட்டாங்களே? அவங்களுக்கு தண்டனை இதுதானா?'' என ஆதங்கமும் அழுகையுமாகக் கேட்கிறார். 

காலம் ஆற்றாத காயம் இது! 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close