Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்திய வரைபடத்தில் காவிரி படுகையைத் தேடும் நிலை வரும்'!- எச்சரிக்கும் பேராசிரியர் ஜெயராமன்

''இந்திய வரைபடத்தில் காவிரி படுகையைத் தேடும் நிலை வரும்'' என்று கதிராமங்கலம் பிரச்னைக்காகக் கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் கூறினார்.

திருச்சி சிறைவாசலில் பேராசியர் ஜெயராமன்

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் நிலத்தடிநீரைப் பாதிக்கும் வகையில் செயல்படும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்தப் போராட்டத்தின்போது கடந்த ஜூன் 30-ந்தேதி திடீரென போராட்டத்துக்குள் புகுந்த போலீஸார் தடியடி நடத்தியதில் கலவரம் வெடித்தது. போராட்டக்காரர்களும் திருப்பித் தாக்கினர். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்குக் கீழமை நீதிமன்றங்களில் ஜாமீன் மறுக்கப்பட்டநிலையில், அவரது வழக்கறிஞர்கள், ஜாமீன் வழங்கக் கோரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பஷீர் அகமது, பேராசிரியர் ஜெயராமன் உள்பட 8 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதையடுத்து இன்று காலை பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட பத்துப் பேரும், திருச்சி மத்தியச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளியே வந்தவர்களை ''கதிராமங்கலம் போராளிகளை, வரவேற்கிறோம் வரவேற்கிறோம் கதிராமங்கலம் போராளிகளை வரவேற்கிறோம்'' என முழங்கியபடி, திருச்சியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள், மக்கள் அதிகாரம், விடுதலைச் சிறுத்தைகள், தமிழ்த் தேசிய பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் நேரில் வந்து சால்வை அணிவித்து வாழ்த்தினர்.

சிறைச்சாலை நுழைவாயிலில் செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜெயராமன், எந்தத் தவறும் செய்யாத எங்களை 43 நாள்கள் சிறையில் அடைத்த கொடுமை நிகழ்ந்துள்ளது. மக்கள் போராட்டத்தை திட்டமிட்டுச் சிதைக்க நினைத்த அரசு, நாங்கள் வட்டாட்சியரை அரிவாளுடன் கொல்லப் போனதாக எங்கள் மீது வழக்குப் போட்டுள்ளது. எங்களுக்காகப் பல்வேறு சட்டப் போராட்டங்களை நடத்தி, எங்களுக்கு ஜாமீன் வாங்கிக்கொடுத்துள்ளார்கள் வழக்கறிஞர்கள். ஆனால் ஜாமீன் வழங்கியதிலும் கடுமையான நெருக்கடிகள் விதிக்கப்பட்டுள்ளன. நான் மதுரை மாவட்ட நீதிமன்றத்திலும், மற்ற 7 பேர் திருச்சி மாவட்ட நீதிமன்றத்திலும், பாபநாசம் உள்ளிட்ட இடங்களில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. எந்தத் தவறும் செய்யாமல், பிழைப்பை இழந்து குடும்பம் தவிக்கும் நிலையில், நாங்கள் தினமும், கையெழுத்திட வேண்டும் என்பது தொழிலை இழந்து வருமானம் இழந்து அல்லல்படும் நிலையில் கூடுதல் சுமை துன்பம். உண்மையில் குற்றவாளிகள் யாரென்று சொன்னால், அன்று நாள் முழுக்கப் போராடியும், சம்பவ இடத்துக்கு வரமறுத்த தஞ்சை மாவட்ட ஆட்சியர் குற்றவாளிகள் இல்லையா, நியாயமாகப் போராடிய மக்கள் மீது தடியடி நடத்தி வன்முறைக்கு வித்திட்ட காவல்துறை குற்றவாளி இல்லையா. இனி கதிராமங்கலம் தண்ணீர் தேறாது, முழுக்க ரசாயனமயம் ஆகிவிட்டது. அமிலம் டி.டி.எஸ் 1480 ஐ தாண்டிவிட்டது. இனி கதிராமங்கலம் தேறுமா என்கிற நிலைக்குப் பாழ் பண்ணிய ஓ.என்.ஜி.சி குற்றவாளி இல்லையா.

தமிழக அரசு, மத்திய அரசு சொன்னதை எல்லாம் செய்கிறது. இந்தப் பிரச்னையை தமிழக அரசு, கனிவோடு பார்க்கணும். தொலை நோக்குப் பார்வையோடு கவனிக்கவேண்டும். தமிழகத்தின் மக்கள் தொகை, வரும் காலங்களில், 15 கோடியாக மாறும் என்கிறார்கள். அதனால் தண்ணீரை, நிலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. மத்திய அரசு செயல்படுத்தும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களால், காவிரி படுகை காணாமல் போகலாம். இந்திய வரைபடத்தில் காவிரி படுகையைத் தேடும் நிலை வரும். ஆகவே, தமிழக அரசு, போராடும் மக்களை மத்திய அரசின் சொல்லைக் கேட்டு தண்டிப்பது தவறு. மாறாகத் தமிழக அரசு, மக்களுக்காக நிற்க வேண்டும் எனும் வேண்டுகோளை வைக்கிறோம். இந்தப் பிரச்னைக்காகப் போராடிய கதிராமங்கலம் மக்கள், தமிழகம் முழுக்க உள்ள மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு தரப்பினருக்கும் நாங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். நியாயமான போராட்டங்கள் தோற்றுப்போகாது. பாதிப்பை உணர்ந்து மக்கள் போராடுவது என்பது இயல்பு. அதை ஒடுக்க நினைக்கக்கூடாது. எங்களுக்கு ஆதரவளிக்கும் மக்களுடன் கலந்தாலோசனை செய்து அடுத்தகட்ட போராட்டம் குறித்து விரைவில் அறிவிப்போம்" என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close