Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

”புலியோடு ஓநாயும் நரியும் கூட்டு சேர நினைத்தன...” - பன்னீர்செல்வத்துக்கு எடப்பாடி பழனிசாமியின் குட்டி கதை

எடப்பாடி பழனிசாமி

''மக்களால் நான்... மக்களுக்காகவே நான்'' என்று மக்கள் மத்தியில் அடிக்கடி உரையாற்றி, அவர்கள் மனதில் நிலைகொண்டிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துபோய் பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அவர் உரைத்த பேச்சுகளும், கதைகளும் காலம் உள்ளவரைக்கும் அவர்களுடைய உள்ளங்களில் ஒலித்துக்கொண்டிருக்கும். கட்சிக் கூட்டங்களிலும், வேறு பல நிகழ்வுகளிலும் தன்னைப் பற்றியும், தம்மைச் சுற்றி நின்ற பகைகளையும் குறிப்பால் உணர்ந்துகொண்டு, அதனைக் குட்டிக் கதைகளாய் மக்களிடம் சொல்லி... அன்பையும், அதன் உண்மைத்தன்மையையும் உணர்த்தியிருந்தார் ஜெயலலிதா. அவருடைய இந்தப் பாணியைத் தற்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் கடைப்பிடித்து வருகிறார். அதற்குக் காரணம், தமிழக அரசின் நிலைப்பாடும்.. அ.தி.மு.க-வின் பிரிவுமே ஆகும். இந்தப் பிரச்னைகளை மையமாகவைத்தே அவரும் கட்சி நிகழ்வுகளிலும், பிற இடங்களிலும் குட்டிக்கதைகளைச் சொல்லி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.

''ஒற்றுமையாக இருக்கவேண்டும்!''

அ.தி.மு.க., இரண்டு அணிகளாக இருப்பது நல்லதல்ல...  அது, ஒற்றுமையுடன் இருந்தால்தான் எதையும் வெற்றிகரமாகச் செய்யமுடியும் என்பதைக் கருத்தில்கொண்டு, அதுதொடர்பான ஒரு குட்டிக்கதையை மதுரையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் சொன்னார் எடப்பாடி பழனிசாமி. ''கூட்டம் கூட்டமாக வந்து இரைதேடும் புறாக்களை வேடன் ஒருவன் பிடிக்கத் திட்டமிட்டான். அதற்காக வலை ஒன்றை விரித்துவைத்தான். அதில், சில புறாக்கள் சிக்கிக்கொள்ள அவற்றைப் பிடிக்க வேடன் விரைந்துசென்றான். இதைப் பார்த்த மற்ற புறாக்களும் அவைகளுடன் சென்று இணைந்து, அந்த வலையை அலேக்காகத் தூக்கிக்கொண்டு பறந்துசென்றன'' என்பதே அவர் சொன்ன கதை. இதன்மூலம் அவர் சொல்ல வந்தது என்னவென்றால், அணிகள் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதுதான்.

''உண்மையான நண்பர்கள் யார்?''

அதேபோல், யார் நெருக்கடி வரும்போது உதவிக்கரம் நீட்டுகிறார்களோ... அவர்கள்தான் உண்மையான நண்பர்கள் என்பதை நினைவுபடுத்தி ஒரு குட்டிக்கதை சொன்னார். ''ஒருவன் தன் ஊரை அடைய காட்டு வழியே நடந்துகொண்டிருந்தான். பொழுது இருட்டிவிட்டதால், மிருகங்கள் தாக்கிவிடும் என்று நினைத்து அங்குள்ள ஒரு மரத்தடியில் தனியே உட்கார்ந்திருந்தான். அப்போது, அவனைப்போலவே இன்னொருவனும் தனியாக வந்தான். இரண்டு பேரும் எதிர்பாராமல் சந்தித்ததுடன் நண்பர்கள் ஆனார்கள். தாங்கள் காட்டினைக் கடந்துசெல்ல வேண்டிய விவரத்தைப் பகிர்ந்துகொண்டனர். அப்போது, காட்டினைக் கடந்து செல்லும்போது வழியில் எந்த ஆபத்து வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்துகொள்ள வேண்டும் என்று அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர். பின்னர், இரண்டு பேரும் காட்டு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தனர். சிறிது நேரத்தில், அவர்கள் சென்ற வழியில் கரடி ஒன்று வந்தது. அதைப் பார்த்ததும் ஒருவன் தங்களுக்குள் போடப்பட்ட ஒப்பந்தத்தை மறந்து ஓடிப்போய் ஒரு மரத்தில் ஏறிக்கொண்டான். இன்னொருவனுக்கு மரம் ஏறத் தெரியாது. எனவே, தரையில் படுத்து மூச்சை தம் கட்டிக்கொண்டு கிடந்தான். கரடி அவனருகே சென்று அவனை முகர்ந்து பார்த்தது. அவன் இறந்துவிட்டான் என்று நினைத்த கரடி திரும்பிச்சென்றது. இதை மரத்தில் இருந்து பார்த்தவன், கீழே வந்து, தரையில் படுத்துக்கிடந்தவனிடம், 'கரடி உன் காதில் ஏதோ கூறியதே, அது என்ன' என்று கேட்டான். அதற்கு இவன், ‘ஒப்பந்தத்தை மீறிய உன்னை மாதிரி நம்பிக்கைத் துரோகிகளிடம் இனிமேல் நட்பு வைத்துக்கொள்ளக்கூடாது’ என்று கரடி சொன்னது'' எனக் கதையைச் சொல்லி முடித்தார். இதன்மூலம் அவர் உணர்த்த விரும்பியது, உண்மையான நண்பர்கள் தவறு செய்திருந்தாலும் அதை மனதார ஏற்றுக்கொண்டு ஒரே அணியாக இருக்கவேண்டும் என்பதுதான்.

எடப்பாடி பழனிசாமி

''பிரிந்துகிடந்தால் ஆபத்து!''

பிரிந்துகிடக்கும் அணி குறித்தும், அது மற்றவரின் பேச்சைக் கேட்டுச் சின்னாபின்னமாவதும் குறித்தும் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஒரு குட்டிக்கதை சொன்னார். ''ஒரு காட்டில் ஓநாயும், நரியும் நண்பர்கள். அவை, இரை ஒன்றும் கிடைக்காமல் அலைந்து திரிந்துகொண்டிருந்தன. மனவிரக்தியில் தனித்து வாழ்ந்துகொண்டிருந்த ஒரு புலியோடு ஓநாயும், நரியும் கூட்டு வைத்துக்கொள்ளத் தீர்மானித்து பேச்சுவார்த்தை நடத்தின. 'மூன்றுபேரும் ஒருதாய் மக்களாக ஒற்றுமையாக இருக்க வேண்டும். எந்த இரை கிடைத்தாலும் அதைப் பங்குபோட்டுச் சாப்பிட வேண்டும்' என்று ஒப்பந்தம் செய்துகொண்டன.

நமக்கு ஒரு வலிமையான தலைவன் கிடைத்துவிட்டான் என்று ஓநாயும், நரியும் ஊளையிட்டு.. ஊளையிட்டு.. தன் மகிழ்ச்சியை காடு முழுவதும் தெரிவித்துவந்தன. ஒருநாள் புலிக்கு... ஓநாய், நரி மீது சந்தேகம் வந்தது. 'ஒரு மானை வேட்டையாடினால், அதை எப்படிப் பங்கு போட்டுக்கொள்வது' என்று கேட்டது. அதற்கு ஓநாய், 'புலியே! நீதான் எங்கள் தலைவன், அதனால் மானின் தலை உங்களுக்கு. இந்த நரி, வேகமாக ஓடக்கூடியது. அதனால் மானின் நான்கு கால்களும் இந்த நரிக்குக் கொடுக்கலாம். மீதியிருப்பது உடம்புதான். அதை நான் எடுத்துக்கொள்வேன்' என்றது.

ஓநாயின் சூழ்ச்சியைத் தெரிந்துகொண்ட புலி, அதன் தலையில் ஓங்கி அடித்தது. ஓநாய் வலி தாங்காமல் ஊளையிட்டது. 'நரியே, நீ எப்படிப் பங்கு போடுவாய்' என்று புலி நரியிடம் கேட்டது. 'இந்தக் காட்டுக்கே தலைவரான சிங்கத்தை நாட்டாமையாகவைத்து நாம் பிரித்துக்கொள்ளலாம்' என்றது நரி. மூன்றுபேரும் சிங்கத்தை அணுகினார்கள். சிங்கம் மூன்றுபேரும் சொன்னதைக் கேட்டுவிட்டு‚ 'நாட்டாமைக்கும் ஒரு பாகம் தர வேண்டும்' என்ற நிபந்தனையோடு, 'நீங்கள் வேட்டையாடிய மானை இங்கே கொண்டுவந்து போடுங்கள்... நான் பிரித்துக் காட்டுகிறேன்' என்றது.

மற்ற மூன்றுபேரும் ஒன்றையொன்று பார்த்து திருதிருவென விழித்தபடி, 'இனிமேல்தான் வேட்டையாட வேண்டும்' என்று கூறின. 'கிடைக்காத ஒன்றுக்காக இத்தனை போராட்டமா... ஆரவாரமா? புலியே! இந்த விலங்குகளின் நயவஞ்சக பேச்சைக் கேட்டு நீ உன் இனத்தைவிட்டுப் பிரிந்துவந்தது தப்பு, உடனே உன் இனத்தோடு சேர்ந்துவிடு' '' என்று கதையைச் சொல்லி முடித்தார். இதன்மூலம், பன்னீர்செல்வம் அணியைத் தன்னோடு இணைப்பதற்கான வழிவகைகளைத் தேடுகிறார் எனத் தெரிந்துகொள்ள முடிகிறது.

''அதர்மம் செய்தால் தண்டனை!''

தர்மத்தைப் பற்றிப் பேசுகிறவர்கள், அதர்மம் செய்தால் மக்கள் கதாயுதம் ஏந்திவந்து அடிப்பார்கள் என்பதை மையமாகவைத்து, ஊட்டியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் ஒரு கதை சொன்னார். "பக்தன் ஒருவன் கடும் தவம் புரிந்தான். கடவுள் கதாயுதத்தோடு அவன்முன்னே காட்சியளித்து, 'பக்தா... உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்' என்றார். அதற்கு, அந்தப் பக்தன், 'கடவுளே.. என் முன்னேற்றத்துக்குத் தடையாக இருக்கும் எதிரிகளை உங்கள் கதாயுதத்தால் அழித்தொழிக்க வேண்டும்' என்றான். கடவுளும் 'அப்படியே ஆகட்டும்' என்றார். கதாயுதத்தை வீசினார் கடவுள்... கதாயுதம் பறந்துவந்து, அந்தப் பக்தனின் நெஞ்சைத் தாக்கியது. பக்தன் அதிர்ச்சியாகி, 'கடவுளே என்ன இது' என்று கேட்டுத் திகைத்தான். கடவுள் அவன்முன்பு மீண்டும் தோன்றினார். 'உங்கள் கதாயுதம் கொண்டு என் எதிரிகளை அழிக்கச் சொன்னால், அது என்னையே வந்து தாக்குகிறதே' என்று கேட்டான். அதற்குக் கடவுள், 'பக்தா உன் முன்னேற்றத்துக்குத் தடையாக இருப்பது, அடுத்தவனை அழித்து நான் முன்னேற வேண்டும் என்று நினைக்கும் உன் மனம்தான். உன் மனம்தான் உனக்கு பகை' என்று கதையை நிறைவு செய்தார். இதன்மூலம் தர்மம் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதர்மம் செய்தால் அவர்களை மக்கள் தண்டிப்பார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

எடப்பாடி பழனிசாமி

''விசுவாசத்துடனும் இருக்க வேண்டும்!''

இந்த அணியைவிட்டு வேறு அணிக்கு அ.தி.மு.க தொண்டர்கள் சென்றுவிடக் கூடாது என்பதற்காகப் பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். ''ஒருகாடு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. அதைக் கண்ட விலங்குகளும் பறவைகளும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. ஆனால், ஒரு சிட்டுக்குருவி மட்டும் தனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றித் தீயை அணைக்க முயற்சி செய்தது. இதைக் கண்ட இறைவன், சிட்டுக்குருவியிடம்... 'உனது சிறிய அலகால் தண்ணீரைக் கொண்டுவந்து எப்படிக் காட்டுத்தீயை அணைக்க முடியும்' எனக் கேட்டார். அதற்கு அந்தக் குருவி, 'நான் பிறந்து வளர்ந்து வாழ உதவியது இந்தக் காடு. அதற்கு ஆபத்து எனும்போது அதை விட்டுவிட்டு ஓடுவது மிகத் துரோகம். என்னால் ஆனச் செயலைச் செய்து இந்தக் காட்டை காப்பாற்ற முயல்கிறேன்' என்றது. இறைவன் அந்தக் குருவியின் தியாகத்தையும் கடமை உணர்ச்சியையும் கண்டு காட்டுத் தீயை அணைக்கச் செய்தார்'' என்று கதையைச் சொல்லி முடித்தார். இதன்மூலம், அ.தி.மு.க தொண்டர்கள் தியாக உணர்வுடனும் விசுவாசத்துடனும் இருக்க வேண்டும் என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

''சூழ்ச்சியை முறியடிப்பார்கள்!''

நாட்டில், பலர் சூழ்ச்சி செய்கிறார்கள்... அவர்களுடைய சூழ்ச்சி ஒருபோதும் வெற்றிபெறாது என்பதை மையமாகவைத்து விழுப்புரத்தில் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின்போது குட்டிக்கதை ஒன்றைச் சொன்னார். ''நாட்டில் தேர்தல் நடத்துவதுபோல்... காட்டிலும், விலங்குகளுக்கு யார் தலைவன் எனத் தேர்தல் நடந்தது. பொதுவாகக் காட்டுக்குச் சிங்கம்தான் தலைவனாக இருக்கும். ஆனால் புலி, தலைவன் பதவியை அடைய பல சூழ்ச்சிகளைக் கையாண்டது. அதற்காக நரியை அழைத்த புலி, 'நான் சிங்கம் கறியை ருசித்தது இல்லை. சிங்கத்தின் கறியை நீ எடுத்துவந்தால் நான் தலைவன் ஆகிவிடுவேன். நீதான் காட்டுக்கு ராஜா' என்று புலி ஆசைவார்த்தை கூறியது. அதை நம்பி நரி, யானையிடம் சென்று... 'நீ பலசாலி. சிங்கத்தை எதிர்த்துத் தேர்தலில் நின்றால் நீதான் வெற்றிபெறுவாய்' என்று கூறியது. மேலும் அந்த நரி, சிங்கத்திடம் சென்று.... 'உன்னை எதிர்த்து யானை தேர்தலில் நிற்கிறது' என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம், யானையை வரவழைத்து நடந்த விவரத்தைக் கேட்டது. அதற்கு யானை, 'நான் தேர்தலில் நிற்பது பற்றிச் சொல்லவில்லை' என்றது. நரியின் சூழ்ச்சியைத் தெரிந்துகொண்ட சிங்கம், காக்கையை அழைத்து நரிக்குப் பரிசு வைத்திருப்பதாகவும், அதனை அழைத்து வருமாறும் கூறியது. அதன்படி பரிசு பெறுவதற்காக நரி ஓடிவந்தது. அப்போது சிங்கமும், யானையும் ஒன்றாகச் சகஜமாக இருந்ததைக் கண்டு நரி அச்சத்துடன் சென்றது. கடைசியில் புலி மற்றும் நரியின் சூழ்ச்சி பலிக்கவில்லை'' என்று சொல்லி அந்தக் கதையை நிறைவுசெய்தார். இதன்மூலம், நாட்டில் மற்றவர்கள் செய்யும் குழப்பத்தையும், சூழ்ச்சியையும் கழகத் தொண்டர்கள் ஒரே அணியில் நின்று முறியடிப்பார்கள் என்பதைத்தான் அவர் இப்படிச் சூசகமாகத் தெரியப்படுத்தினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close