Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கந்து வட்டிக் கொடுமையால் பெண் தீக்குளித்து பலி!

கந்து வட்டிக் கொடுமையின் காரணமாக நெல்லையில் பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெண் தற்கொலை

நெல்லை டவுன் பெரியசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர், முத்துமாரி. மாற்றுத் திறனாளியான இவர் தச்சுத் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி. இவர்களுக்கு ஒரு பெண், இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். கோமதி தனியார் ஹோட்டலில் சமையல் வேலை செய்து வருகிறார். அவரது மகள் ரெடிமேட் கடையில் வேலை செய்து வருகிறார். ஒரு மகன் 9-ம் வகுப்பும் மற்றொரு மகன் 7-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். 

கோமதியின் கணவர் முத்துமாரி மாற்றுத்திறனாளி என்பதுடன், கடந்த சிலமாதங்களாக நோயால் அவதிப்பட்டு வந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தார். சிலர் அவரிடம் அதிக வட்டிக்குக் கடன் கொடுத்திருந்தனர். மகளின் ஊதியம் கடனுக்கான வட்டிக்கே சரியான நிலையில், அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த முடியாமல் திண்டாடி வந்தார். கடன் சுமை அதிகரித்ததால் வட்டியையும் செலுத்த முடியாமல் திண்டாடினார். இந்த நிலையில், கடன் கொடுத்தவர்கள் அதைத் திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்தனர். 

கடன் கொடுத்தவர்கள் வீட்டுக்கே வந்து அவதூறாகப் பேசினர். சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது. அவர்களின் நெருக்குதல் காரணமாக மனமுடைந்த நிலையிலிருந்து வந்த கோமதி, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை பாளையங்கோட்டை அரசு மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார். 

இது தொடர்பாக நெல்லை டவுன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மல்லிகா என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவத்தால் கோமதியின் குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர். இது குறித்து பேசிய கோமதியின் கணவர் முத்துமாரி, ‘எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சிகிச்சைக்காகப் பணம் வாங்கி இருக்கிறார். அவர்கள் அனைவரும் திடீரென நெருக்குதல் கொடுத்ததால் வேறுவழி தெரியாமல் தற்கொலை செய்து கொண்டார். நடக்க முடியாத நான் எப்படி எனது குழந்தைகளைக் காப்பாற்றப் போகிறேனோ?’ எனக் கதறி அழுதார்.

கந்து வட்டியை ஒழிக்க அரசு சட்டங்களை இயற்றியிருந்தபோதிலும், அதன் கொடுமையால் உயிரிழப்புகள் நடப்பது தொடர்கதையாகி வருகிறது. கந்து வட்டிக்காக இழந்த கடைசி உயிராக கோமதியின் உயிர் இருக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close