Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 அணிகள் இணையாமல் இருக்க அடுத்த தடை ! மோடிக்கு 'செக்' வைத்தாரா ஓ.பன்னீர்செல்வம்?


                        அணிகள் இணைப்புக்கான ஆய்வில்  மோடி - எடப்பாடி 

ணிகள் இணைப்புக்கான இறுதிச் சுற்றுக்குமுன், தேர்தல் ஆணையத்தில் மேலும் புதிய ஆவணங்களை, புரட்சித்தலைவி அம்மா அணி கொடுத்துள்ளது. இந்தச் செயலின் மூலம் பிரதமர் மோடிக்கே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு  செக் வைத்திருப்பதாக பா.ஜ.க.வினர் கருதுகின்றனர். அ.தி.மு.க. அணிகள் இணையாமல் இருக்க அடுத்த தடை இதன்மூலம் உருவாகியுள்ளது. உடைபட்டுக் கிடக்கும் அ.தி.மு.க. மீண்டும் இணையுமா என்ற கேள்விக்கு, கடந்த ஏழு மாதங்களாக பதில் இல்லை. முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியையும், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியையும் இணைத்து விட்டால், சசிகலா-தினகரன் அடையாளம் இனி தேவைப்படாது என்ற பா.ஜ.க.வின் திட்டமும் கைகூடவில்லை. பெரும்பாலான எம்.எல்.ஏ-க்கள் டி.டி.வி.தினகரனின் மறைமுக ஆதரவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.  ஆளுங்கட்சியின் சில எம்.எல்.ஏ-க்கள் தி.மு.க.வின் செயல்தலைவர் ஸ்டாலினோடு பாசமும், நெருக்கமும் கொண்டிருப்பதாகவும் தகவல் உண்டு.

தி.மு.க.விலிருந்து பிரிந்த நடிகர்  எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு தோற்றுவித்த கட்சி அ.இ.அ.தி.மு.க.  பின்னர் அதைச் சுருக்கி அ.தி.மு.க. என்றழைத்தார்கள். 1987-ல்  எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர், கட்சியில் இரண்டு அணிகள் மட்டுமே இருந்தன. பரிவட்டத்தை யார் கட்டுவது என்ற போட்டியில் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி தலைமையில் இயங்கிய அணியும், அவருடைய ஆதரவாளர்களும் காணாமல் போனார்கள். சைதை துரைசாமி, காளிமுத்து போன்ற ஜானகி அணி முன்னணியினர் காலப்போக்கில் ஜெயலலிதாவிடம் சரண் அடைந்தார்கள்.  அதேபோல் ஜெயலலிதாவிடம் முதலமைச்சர் பதவியும், கட்சியின்  பொதுச்செயலாளர் பதவியும் வந்து சேர்ந்தது. ஜெயலலிதாவின் காலமும், டிசம்பர் 5, 2016 அன்று முடிந்து போக, பலம் பொருந்திய அந்தக் கட்சி, பலவீனமான பல வடிவங்களை எடுத்தது. கடல்போல் இருந்த  அ.இ.அ.தி.மு.க. பெருங்காயம் போல் கரையத் தொடங்கியது. புரட்சித்தலைவி அம்மா அணி, அம்மா அணி,  எம்.ஜி.ஆர் அம்மா ஜெயலலிதா தீபா பேரவை, எம்.ஜி.ஆர். தொண்டர்கள் கட்சி என்று பல பெயர்களில் குட்டைகளாகிக் கிடக்கிறது. அனைத்துக் குட்டையிலும் தாமரை தெரிகிறது. கட்சியானது,  அ.தி.மு.க. என்று ஒரேபெயரில் இருந்தபோது, மையத்தில் பளிச் என்று ஜொலித்த இரட்டை இலை, இப்போது இருக்கும் இடமே தெரியவில்லை. தேர்தல் ஆணையத்தின் பாதுகாப்பில் கட்சியின் இரட்டை இலைச் சின்னம் பாதுகாப்பாக இருக்கிறது. எந்த அணியின் கைகளுக்கு இரட்டை இலைச் சின்னம் போகும் என்பதும், அணிகளின் கைகளில் இல்லை.

புரட்சித்தலைவி அம்மா அணியின் தலைமை தளபதியான முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அவருடைய அணியினர் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டெல்லிக்குப் போய், அவரைச் சந்திக்காமலே,  அதாவது சந்திக்க முடியாமலே சொந்த ஊருக்குத்  திரும்பியுள்ளனர்.  அம்மா அ.தி.மு.க அணியாக இருந்து இப்போது 'முதல்வர் எடப்பாடி அணி' யாக மாறியுள்ள அணியோடு ஓ.பி.எஸ். அணியை இணைக்கும் முயற்சியில் இதனால் துண்டு விழுந்திருக்கிறது. அணிகள் ஒட்டவைப்புக்கான பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் பன்னீர்செல்வத்தின், புரட்சித்தலைவி அ.தி.மு.க. அணி  மேலும் பல புதிய ஆவணங்களை கொடுத்திருக்கிறது. "முதலமைச்சர் எடப்பாடி அணி நிறைவேற்றிய தீர்மானத்தின் படி சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரின் நியமனம் செல்லாது. ஆகவே, எங்கள் அணியை உண்மையான அ.தி.மு.க. என்று  ஆணையம் அறிவிக்க வேண்டும்" என்கிறது அந்த ஆவணத்தின் வரிகள். பிரதமரை சந்திக்கப் போன ஓ.பன்னீர்செல்வம் அவரைச் சந்திக்க முடியாமல்  திரும்பியிருக்கிறார். குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பொறுப்பேற்கும் விழா நிகழ்வில் வைத்து அணிகள் இணைப்புக்கு நாள் குறித்திருக்கிறது டெல்லி பா.ஜ.க. அதேபோல், அணிகள் இணைந்தால் மட்டுமே முதல்வர் பதவி காப்பாற்றப்படும் என்று நம்பிக்கையுடன் டெல்லிக்குப் போன முதல்வர் எடப்பாடி, மணிக்கணக்கில் காத்திருந்தும், பிரதமரிடம் பேச சில நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கித் தரப்பட்டிருக்கிறது. அனைத்துக்கும் காரணம், தேர்தல் ஆணையத்தில் புரட்சித்தலைவி அம்மா அணி கொடுத்திருக்கும் புதிய ஆவணங்களே என்று சொல்லப்படுகிறது.  பலத்தை நிரூபிக்கும் கயிறு இழுக்கும் போட்டியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகிய மூவருமே ஈடுபட்டுள்ளனர்.  சசிகலா உள்ளே இருப்பதால் எப்படிப் பார்த்தாலும் ஒரு பக்கம் ஆள் குறைகிறது. நடுவராக இருப்பதால் யாருக்கும் தெரியாமல் ஒருபக்கம் கயிறை இழுப்பதில் தொடர்ந்து பா.ஜ.க.வுக்குத் தொய்வுநிலை இருந்து வருகிறது!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close