Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடிக்கடி பழுதாகும் அணு உலை.. சந்தேகத்தைக் கிளப்பும் சமூக ஆர்வலர்கள்!

கூடங்குளம் அணு உலை தரமற்றதாக இருப்பதாலேயே அடிக்கடி பழுதாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

ரஷ்ய நாட்டின் ஒத்துழைப்புடன் நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் இரு அணு உலைகள் கட்டப்பட்டு அவற்றில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இரு அணு உலைகளும் தொடர்ந்து செயல்படத் தொடங்கியதால், நாட்டுக்கு அர்ப்பணிப்பு செய்யப்பட்டது. முதல் அணு உலை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு கடந்த 10-ம் தேதியுடன் ஓராண்டை எட்டி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இரண்டாவது அணு உலையையும் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் ஆகியோர் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக நாட்டுக்கு அர்ப்பணித்தனர். 

அணு உலை

இரு அணு உலைகளுமே மின்சாரத்தை உற்பத்தி செய்வதாக அறிவிக்கப்பட்ட போதிலும் அவை அடிக்கடி நிறுத்தப்பட்டன. சோதனைகளுக்காக நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதிலும், பழுது காரணமாகவே அவை நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தினர் குற்றம் சாட்டி வந்தனர். ஏறக்குறைய இரு அணு உலைகளும் ஒரே சமயத்தில்  மிகக்குறைந்த நாட்களே செயல்பட்டு உள்ளன. ஏதாவது காரணத்துக்காக ஒரு அணு உலையின் இயக்கம் முடங்கிக் கிடப்பது வழக்கமாகி விட்டது. 

தற்போது இரு அணு உலைகளுமே நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில் இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தைக் கிளப்புகின்றனர். இது பற்றி பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தரராஜன் தெரிவிக்கையில், ’’சர்வதேச அணு சக்தி வழிகாட்டு அமைப்பின் நெறிமுறையின்படி, அணு உலையானது பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டால், அதனை இரு மாதங்களில் மீண்டும் இயக்க வேண்டும். 

ஆனால், கூடங்குளத்தைப் பொறுத்தவரையிலும், அதன் இரு உலைகளிலும் மின் உற்பத்தி நிறுத்தப்படும்போது, குறைந்தபட்சம் 4 மாதங்களுக்கு அதன் இயக்கம் நிறுத்தப்படுகிறது. இது தற்போது நடைபெறும் செயல் அல்ல. எப்போது இந்த அணு உலைகள் தொடங்கப்பட்டதோ அப்போது இருந்து இது தான் நிலைமையாக உள்ளது. அணு உலையில் ஏற்பட்ட பழுதைச் சரிசெய்ய ரஷ்யாவில் இருந்து உதிரிப் பாகம் வரவேண்டியது இருப்பதாலும், அப்படி வந்த பிறகு அதனைப் பரிசோதனை செய்ய வேண்டிய சூழல் இருப்பதாலும் கால தாமதம் ஏற்படுவதாக  அணு உலை நிர்வாகம் தெரிவிக்கிறது.

சுந்தர்ராஜன்

அணு உலையில் இரு அலகுகளும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், தமிழக அரசும் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும் இது பற்றி எந்தக் கவலையும் இல்லாமல் உள்ளனர். கூடங்குளம் அணு உலையைப் பொறுத்தவரையிலும், அது தென் மாநிலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், அணு உலைகளை மேலும் கூடுதலாக்குவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அணு உலை விரிவாக்கத்தை நிறுத்த வேண்டும்’’ என வலியுறுத்தினார்.

இது பற்றி கூடங்குளம் அணு உலை நிர்வாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, "அணு உலையானது மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது. சர்வதேச விதிமுறைப்படி அணு உலையில் சோதனை நடத்துவதற்காகவே அவ்வப்போது அணு உலையின் செயல்பாடு நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கப்படுகிறது. சர்வதேச அணு சக்தி துறையின் வழிகாட்டுதல்படியே அணு உலை நிறுத்தப்பட்டு சோதனை நடக்கிறது. இப்போது முதல் அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணி நடக்கிரது. இரண்டாவது உலை பராமரிப்புக்காக நிறுத்தப்பட்டு உள்ளது’’ என்றார்.
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close