Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மழைக்காக கஞ்சிக் கலயம் சுமந்த பெண்கள்! - நெல்லையில் விநோத வழிபாடு

வழிபாடு

நெல்லை கோயிலில் மழைக்காக பெண்கள் கஞ்சிக் கலயம் சுமந்து விநோத வழிபாடு நடத்தினர். இப்படி வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம்.

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ஆதிபராசக்தி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் கஞ்சிக் கலயம் சுமந்து வழிபட்டால் மழை பெய்யும் என்பது ஐதீகம். தற்போது நெல்லை மாவட்டத்தில் மழை இல்லாமல் மக்கள் பெரும் சிரமத்தில் உள்ளனர். விவசாயம் பொய்த்துப் போனதுடன் குடிநீருக்காக மக்கள் நீண்ட தூரம் செல்லும் நிலைமை உள்ளது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துவிட்டதால் ஆழ்துளைக் கிணறுகள் கூட வறண்டு விட்டன.  

மழைக்காக வழிபாடு

இந்த நிலையில், ராதாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டுமன்றம் சார்பாக ஆதிபராசக்தி கோயிலில் மழைக்காக சிறப்பு யாகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பெண்கள், மழை வேண்டி பாடல்களைப் பாடினர். மழைப்பாடலான அந்தப் பாடலில் மழையின் அவசியம் குறித்தும் ஆதிபராசக்தி கருணை கொண்டு மழையை அனுப்ப வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பாடல் பாடினர். 

பின்னர், ஆதிபராசக்தியை போற்றி 1008 துதிகளைப் பெண்கள் பாடினார்கள். அதனைத் தொடர்ந்து சிறுமிகள், பெண்கள் உள்ளிட்ட 155 பேர், கஞ்சிக் கலயத்தைச் சுமந்தபடியே கோயிலை வலம் வந்தனர். அங்குள்ள சிறு தெய்வங்களுக்கு வழிபாடு செய்த பெண்களும் சிறுமிகளும் கஞ்சிக் கலயத்தை அம்பாளுக்குப் படையலிட்டு வழிபட்டனர். அதைத் தொடர்ந்து கஞ்சியானது பெரிய பாத்திரத்தில் கலக்கப்பட்டது. அதனைப் பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. மீண்டும் அந்தக் கலயத்தைச் சுமந்தபடியே பெண்கள் வீடுகளுக்குச் சென்றனர். 

மழை வழிபாடு

கோயிலில் சிறப்பு வழிபாட்டில் பயன்படுத்தப்பட்ட அந்த கலயத்தை வீட்டில் வைத்திருந்தால் வீட்டில் ஐஸ்வர்யம் கொட்டும் என்கிற நம்பிக்கையும் உள்ளது. இந்த சிறப்பு வழிபாடு நடந்தபோது வாட்டி வதைத்த வெயில் மறைந்து வானம் கருத்து மேகம் திரளத் தொடங்கியது. ராதாபுரம் மற்றும் ஒரு சில இடங்களில் சாரல் மழை பெய்தது. இந்த வழிபாட்டைத் தொடர்ந்து அடுத்த சில தினங்களில் மழை பெய்யும் என அப்பகுதி மக்கள் நம்பிக்கையுடன் தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close