Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“மக்கள் நலனில் அக்கறை இல்லாத தமிழக அரசு கூண்டோடு பதவி விலகட்டும்!” - பால்முகவர்கள் சங்கம் காட்டம்

Ponnusamy

“தமிழக அரசு செயல்படாமல் ஸ்தம்பித்துவிட்டது” என்று தி.மு.க-வின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி நடிகர் கமல்ஹாசன் வரை அதிரடியாக விமர்சித்து வருகிறார்கள். இந்த நிலையில்,

“மக்கள் நலனில் சற்றும் அக்கறையில்லாத அ.தி.மு.க-வின் தமிழக அரசு கூண்டோடு பதவி விலகட்டும்” என்று தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் ஆ.பொன்னுச்சாமி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே, பாக்கெட் பால் கலப்பட குற்றச்சாட்டுகளைத் தெரிவித்த தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிராகப் பல்வேறு அதிரடி கருத்துகளைச் சொன்னதோடு, அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் அதிரவைத்தவர் பொன்னுசாமி. இந்த நிலையில், ஒட்டுமொத்த அரசுக்கு எதிராகக் கருத்துச் சொல்லியிருக்கும் பொன்னுச்சாமியிடம் பேசினோம்.

“மறைந்த முதல்வரான ஜெயலலிதாவையே 75 நாள்கள் சிகிச்சை என்னும் பெயரில் எவர் கண்ணிலும் காட்டாமல் வைத்துவிட்டு, தற்போது அவர்மீது அளப்பரிய பாசம்கொண்டிருப்பது போன்றும், தமிழகத்தின்மீது அலாதியான அக்கறை கொண்டிருப்பது போன்றும் நடந்துகொண்டிருக்கிறது தமிழக அரசு. மேலும், மக்கள் நலன்மீதும், மாநிலத்தின் நலன்மீதும் சற்றும் அக்கறையின்றிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மத்திய அரசும், மத்திய அமைச்சரவை சகாக்களும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் கும்பல்களுக்குத் துணை போய்விட்டு எதுவுமே தெரியாதது போன்று நடிப்பது வேதனையான விஷயம். எதற்கும் உடனே நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரம் அவர்களிடம் இருந்தும் அதுபற்றி எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு, தற்போது குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயல்கின்றனர்.

தங்களின் பதவிகளைக் காப்பாற்றிக்கொள்ளவும், பதவி சுகம் அனுபவிக்கவும் அ.தி.மு.க-வினர் துடிக்கின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, தங்களின் பதவி சுகத்துக்காக வாய்மூடி மௌனிகளாக உலா வந்தவர்கள் தற்போது அவர் இல்லாத நிலையில், ஒவ்வொருவரும் தாங்களே நாட்டாமை என்பதை நிலைநாட்டவும், பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் பெருமக்கள் தங்களை நியாயவான்கள்போல் காட்டிக்கொள்ளவும், தங்களின் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள மத்தியில் ஆளும் பி.ஜே.பி ஜால்ரா போடுவதை மறைக்கவும் கமல்ஹாசன்மீது கவனத்தை திசைதிருப்புகிறார்கள். மக்கள் நலன்மீது அக்கறை கொண்டு ஆட்சி செய்யாமல் தங்களின் பதவியையும், ஆட்சியையும் தக்கவைத்துக்கொள்ளும் பேராசையினால் செயல்பட்டுவரும் அ.தி.மு.க தலைமையிலான தமிழக அரசையும், தமிழக அமைச்சரவை சகாக்களையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

உண்மையில், தமிழக மக்கள்மீது அ.தி.மு.க அரசுக்கு அக்கறை இருக்குமானால், முதலில் விவசாய நிலங்களை மலடாக்கத் துடிக்கும் மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை முற்றிலுமாகக் கைவிட்டு, அவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளைத் துரிதமாகவும் துணிச்சலாகவும் எடுக்க வேண்டும். அதோடு, இப்போது தமிழகத்தை அச்சுறுத்திவரும் குடிநீர், சுகாதாரம், விவசாயிகள் பிரச்னைகள் என எண்ணிலடங்கா வகையில் நிறைந்துகிடக்கும் பிரச்னைகளுக்கு நிரந்தரமான தீர்வைக் காண வேண்டும். இல்லையெனில், அ.தி.மு.க-வின் தலைமையிலான தமிழக அரசு கூண்டோடு பதவி விலகட்டும்" என்றார் காட்டமாக.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close