Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

``அப்பா, என்னிடம் பேசுங்கள்'' -  கதறி அழுத `அல்வா’ வாசு மகள்! 

நகைச்சுவை நடிப்பில் பலரின் மனங்களைக் கவர்ந்தவர் `அல்வா' வாசு. வாசுதேவன் என்ற பெயரில் திரைத்துறைக்கு வந்த இவர் `அமைதிப்படை' படத்துக்குப் பிறகு `அல்வா' வாசு ஆனார். நூற்றுக்கணக்கான படங்களுக்குமேல் நடித்தவர். எடிட்டர் அல்வா வாசுஆர்.பி.திலக்கின் நட்பு கிடைத்து, அவரோடு ஏவி.எம் ஸ்டுடியோவுக்கும் சகஜமாக வரத் தொடங்கினார். ஆர்.பி.திலக்கின் செல்லப்பிள்ளையாகவும், சொந்தத் தம்பி போன்றும் வாசு கவனிக்கப்பட்டார்.

அதன் பிறகு ஏவி.எம் ஸ்டுடியோ சுற்றுச்சூழல் பிடித்துப்போக, சினிமா துறையில் கால் பதிக்க முடிவுசெய்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படிப்பு முடித்துவிட்டு, சினிமா துறையில் நுழைந்து சினிமாவில் உள்ள பல துறைகளை அலசி ஆராய்ந்தார். இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராகப் பணியாற்றி பல நுணுக்கங்களைக் கற்றார். ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடுகொண்டவராக வலம் வந்த வாசுவுக்கு, பல நகைச்சுவைக் கதாபாத்திரங்கள் கைகொடுத்தன .

மதுரை சமயநல்லூர் பக்கதில்தான் இவரது சொந்த ஊர். சிறுவயதிலிருந்தே புத்தகங்களில் குறிப்பு எடுக்கும் பழக்கம்கொண்டவர். பொழுதுபோகாத நேரங்களில் ஆற்றங்கரைகளில் நண்பர்களுடன் அரட்டை அடிப்பது மிகவும் பிடிக்கும். அப்போது இருந்தே அவரிடம் காமெடி சென்ஸ் அதிகமிருந்தது. எந்த நிகழ்ச்சியையும் மறக்காமல் நினைவுபடுத்தும் திறன்கொண்டவர். தன் உறவின் முறையிலையே திருமணம் முடித்த வாசுக்கு, ஒரு பெண் குழந்தை இருக்கிறது. தற்போது அவர் 6-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இவர் நடித்த படங்களிலேயே `நினைத்தேன் வந்தேன்' படம்தான் அவரது குடும்பத்துக்கும் உறவினர்களுக்கும் மிகவும் பிடிக்கும். வெள்ளித்திரையில் நகைச்சுவை நாயகனாக இருந்தாலும் அவருக்குப் பொழுதுபோக்கு என்னவோ சின்னத்திரைதான். காலையில் தினமும் 5 மணிக்கெல்லாம் செய்தித்தாள்கள் படித்துவிடுவார். வார இதழ்களில் வரும் சினிமா செய்திகளைக் கூர்ந்து படிப்பாராம். திரை உலகின் தற்போதைய நிலவரம் குறித்து நண்பர்களோடு போனிலும் நேரிலும் அவ்வப்போது ஆலோசனை செய்வாரம். பிறரின் நடிப்பு பிடித்திருந்தால் உடனே வாழ்த்தும் திறந்த மனதுக்காரர். உதவி இயக்குநர்களின் கஷ்டங்களை உணர்ந்த அவர், யார் கஷ்டப்பட்டாலும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வார் .

கடைசியாக `சவுரிக்காடு' என்ற திரைப்படத்தில் நடித்தார். 25 ஆண்டுகளுக்குமேல் பாண்டிச்சேரியில் இருக்கும் ஆசிரமத்துக்குச் சென்று தன் ஆன்மிகப் பாதையை வகுத்துக்கொண்டவர். கல்லீரல் பாதிக்கப்பட்டு எட்டு மாதங்களுக்குமேல் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தீவிர சிகிச்சைக்காக மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிகிச்சை பலனின்றி, உடல் நிலை மோசமாகவே, அவரை மதுரை முனிச்சாலைப் பகுதியில் இருக்கும் அவரது உறவினர் வீட்டுக்கு எடுத்துச் சென்றனர் . இந்நிலையில் `சித்த மருத்துவ சிகிச்சை அளித்துக் காப்பாற்றுங்கள்' என்று இயக்குநர் கெளதமன் தன் சித்த மருத்துவ நண்பர்களை அனுப்பியுள்ளார். மருத்துவ சிகிச்சையைத் தொடங்கும் முன் அல்வா வாசுவின் உயிர் பிரிந்துவிட்டதாக நெருங்கிய ரத்த சொந்தங்கள் தெரிவித்தனர். அல்வா வாசுவின் மகளோ, ``அப்பா... என்னிடம் பேசுங்கள்... என்னிடம் பேசுங்கள்''' என்று அழுத நிமிடம் வலிகள் நிறைந்தது. இறந்த அல்வா வாசுவின் உடலுக்கு திரைப்பட நடிகர்களும் இயக்குநர்களும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close