Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

"காவிரி விஷயத்தில் முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள்" - வைகோ காட்டம்!

     

"காவிரியில் கர்நாடகா அமைக்கும் மேகதாது அணை விவகாரத்தில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்த விவாதம் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடாகும். இந்த விஷயத்தில் தமிழக முதலமைச்சரும் பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள். இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதலமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்" என்று வைகோ அதிரடியாகத் தெரிவித்தார்.


கரூரில் இன்று மாலை நடக்க இருக்கிற கரூர் மாவட்ட செயற்குழு கூட்டத்துக்கு வருகை தந்த ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, பத்திரிகையாளர்களிடம் பேசினார். அப்போது, "காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் தாக்கல்செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது.

அப்போது கர்நாடக மாநிலத்தின் சார்பில்,'காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டினால்தான் தண்ணீரைச் சேமித்து, தமிழகத்துக்கு திறந்துவிட முடியும். எனவே, புதிய அணைகள் கட்ட அனுமதி அளிக்க வேண்டும்' என்று வஞ்சகமான கருத்து முன்வைக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 'தமிழகத்துக்கு நீர் திறப்பதற்கு கர்நாடகம் ஏன் புதிய அணைகள் கட்டக் கூடாது? மழைக்காலங்களில் கிடைக்கும் நீரை சேமித்து தமிழகத்துக்கு தேவைப்படும்போது கொடுப்பதற்கு புதிய அணை வழிவகுக்குமே?' என்று தெரிவித்துள்ளனர். கர்நாடகா தரப்பில் தெரிவிக்கப்பட்ட யோசனையை உச்ச நீதிமன்றம் அப்படியே ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

ஆனால், தமிழக அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் சேகர் நாப்தே அதை எதிர்க்காமல்,'தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கும் வகையில் கர்நாடகம் புதிய அணை கட்டும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தலாம். ஆனால், புதிய அணையைச் சிறப்பு ஆணையம் அமைத்து, அதன் கட்டுப்பாட்டில் விட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இது காவிரி நதிநீர் பங்கீட்டு வழக்கில், இதுவரையில் தமிழகம் மேற்கொண்ட நிலைபாட்டுக்கு எதிரானது ஆகும். கர்நாடகம், உச்ச நீதிமன்றம், மாநில அரசு, மத்திய அரசு என எல்லா தரப்பும் காவிரி விஷயத்தில் நமக்கு எதிராக இருப்பதை இது காட்டுகிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சியில், தமிழக நதிநீர் உரிமைகளை மத்திய அரசிடமோ உச்ச நீதிமன்றத்திடமோ இம்மி அளவும் விட்டுக்கொடுக்காமல் தமிழகத்தைப் பாதுகாக்க தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

ஆனால், தற்போதைய ஆட்சி பொறுப்பில் இருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டின் பாசன உரிமைகளை காவு கொடுத்து மேகதாதுவில் அணை கட்டிக்கொள்ளலாம் என ஒப்புதல் அளித்ததன் பின்னணி என்ன? இதைவிட தமிழ்நாட்டுக்கு பச்சைத் துரோகத்தை எவரும் செய்ததில்லை.

எனவே, எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பில் நீடிக்கும் தார்மீக தகுதியையும் இழந்துவிட்டார். இந்த விஷயத்தில் மத்திய அரசின் கைப்பாவையாக முதலமைச்சர் செயல்படுகிறார். காவிரி விஷயத்தில் நமக்கு எதிராக இருக்கும் முதலமைச்சரும், பிரதமரும் கூட்டுக் குற்றவாளிகள். எனவே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது பதவியை உடனே ராஜினாமா செய்ய வேண்டும். இதை வலியுறுத்தி வரும் 21-ம் தேதி சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று அதிரடியாகப் பேசினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close