Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“காடு தேடி செல்பவர்கள் காட்டையே உருவாக்கும் முயற்சி..!” - ஐந்திணை அமைப்பின் சுற்றுச்சூழல் அக்கறை

உலகெங்கிலும் மரங்களின் அழிவு நாளுக்கு நாள் அதிகரித்துக்  கொண்டே இருக்கிறது. மரம்  குறித்த விழிப்புஉணர்வுகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. மரங்களின் அழிவு என்பது உலகின் அழிவிற்கு சமமானது என்பதை இயற்கை வல்லுநர்கள் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். ஆனாலும் நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிக்காகவும் இன்னபிற தேவைகளுக்காகவும் மரங்களை வெட்டுவது தொடர்கதையாகி கொண்டே இருக்கிறது. மரங்களின் தேவை கருதி அங்கங்கே சில தன்னார்வலர்கள் மரக்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியான தன்னார்வலர்களை  ஒருங்கிணைத்து பல மரக்கன்றுகளை நடவு செய்துக் கொண்டிருக்கிறது ‘ஐந்திணை’ என்கிற அமைப்பு.

மரம் ஐந்திணை

சென்னை ட்ரெக்கிங் என்கிற அமைப்பின் ஒரு கிளை அமைப்புதான் ஐந்திணை. 2008-ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அமைப்பில் மலை ஏறுவது, சைக்கிளிங், போட்டோகிராபி, நீச்சல் என பல நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள். அமைப்பின்  ஒரு பகுதியாக ஐந்திணை அமைப்பை கடந்த 2012 ஆண்டு துவங்கி இருக்கிறார்கள். அதில் GREEN WING என்கிற நிகழ்வை துவங்கி மரம் நடுவது, மரங்களை பராமரிப்பது, நீர் நிலைகளை சுத்தப்படுத்துவது, வீட்டுத்தோட்டம் அமைப்பது என பல நல்ல விஷயங்களை செய்துவருகிறார்கள். கிட்டத்தட்ட 5000 தன்னார்வலர்களை ஒன்றிணைத்து இது வரை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறார்கள். ஜூன் முதல் டிசம்பர் மாத மழைக்காலங்களில்  மரக்கன்றுகளை நடவு செய்கிறார்கள். மற்ற  மாதங்களில் அக்கன்றுகளின் வளர்ச்சியை உறுதிப்படுத்தி கண்காணித்து வருகிறார்கள்.

ஐந்திணை

ஐந்திணை அமைப்பின் சென்னை நகர ஒருங்கிணைப்பாளர் நம்பியிடம் பேசியதில் இருந்து:

“சென்னை ட்ரெக்கிங் அமைப்பில் 40 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். மரம் நடுவது தொடர்பான நிகழ்வுகளை அவர்களுக்கு குறுந்தகவல்களாக அனுப்புவோம். நிகழ்வு நடக்கிற நாளில் அவர்களில் பெரும்பாலானவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும், தன்னார்வத் தொண்டர்கள் அவர்களாக வந்து சேர்ந்து கொள்வார்கள். வருடத்தில் ஒருநாள் GREEN DAY என பெயரிட்டு, அந்நாளில் மரக்கன்றுகளை நடுவதை மூன்று வருடங்களாக செய்து வருகிறோம். காஞ்சிபுர மாவட்டம் தென்னேரியில் 1000 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம். படப்பை அருகில் சிறுவாஞ்சூர் வனப்பகுதியில் 1500 மரக்கன்றுகளை நடவு செய்திருக்கிறோம். கடந்த வருடம் வாலாஜாபாத் அருகிலுள்ள கம்பராஜபுரத்தில் 1000 மண் சார்ந்த மரங்களை பட்டிருக்கிறோம். புங்கை, மருதம், நாவல், இலுப்பை, வேம்பு போன்ற மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். ட்ரெக்கிங்குக்காக காடு தேடிச் செல்பவர்கள் இணைந்து இதைச் செய்வது மகிழ்ச்சி” என்றார்.

ஐந்திணை”க்ரீன் ஸ்கூல்” என்கிற நிகழ்வைத் தொடங்கி  பள்ளிகளில் மாணவர்களுக்கு மரங்கள் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்திவருகிறார்கள். இந்த அமைப்பில் இணைந்து கண்டிகை பகுதியில் மரங்களை நட்டு பராமரித்து வரும்  சிலம்புவிடம் பேசுகையில் “நான் சென்னை ட்ரெக்கிங் கிளப்பில் பல ஆண்டுகளாக  உறுப்பினராக இருந்து வருகிறேன். ஐந்திணை ஆரம்பித்ததில் இருந்து, அதன் எல்லா  நிகழ்வுகளிலும் சேர்ந்து மரம் நடுவது தொடர்பான நிகழ்வுகளில் பணியாற்றி இருக்கிறேன். கண்டிகையில் இருக்கிற அரசு உயர்நிலை பள்ளியில் 120 மரங்களை நட்டு வார விடுமுறை நாட்களில் மாணவர்களுடன் சேர்ந்து  அதனை பராமரித்து வருகிறோம். மரங்களின் அவசியம் குறித்த விழிப்புஉணர்வு நிகழ்வுகளை நடனடத்தி வருகிறோம். ஐந்திணை நர்சரியில் இருந்து கிடைக்கிற கன்றுகளை மாணவர்களுக்கு கொடுத்து வளர்க்க சொல்கிறோம். விடுமுறை நாள்களில் அவற்றை மாணவர்கள் துணையுடன் பராமரிக்கிறோம்”  என்கிறார்.

GREEN DAY  நிகழ்வை தமிழ்நாடு வனத்துறையோடு இணைந்து நடத்தி வருகிறார்கள். HIGHWAY GREEN நிகழ்வை நெடுஞ்சாலை துறையோடு கைகோர்த்து நெடுஞ்சாலைகளில் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார்கள். வர்தா புயலில் சிக்கிய மரங்களை மீட்டு மீண்டும் துளிர்விட வைத்திருக்கிறார்கள் ஐந்திணை அமைப்பினர். விதைகளை தெரிவு செய்து, அவற்றை  முளைக்க வைத்து, கன்றாக்கி  சரியான இடம் தேடி நட்டு, தினமும் நீர் ஊற்றி ஆடு, மாடு, மனிதர்களிடமிருந்து அதைக்காப்பாற்றிவரும் இவர்களது முயற்சியால் வளர்ந்து வரும் மரங்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டி நிற்கிறது.  

ஐந்திணை 

காடுகளில் தானாக உருவாகி வளர்ந்து நிற்கும் மரங்கள் அழிக்கப்பட்டுவரும் காலகட்டத்தில், மனிதனால் வைக்கப்படும் மரங்கள் என்பது எவ்வளவு உன்னதமான செயல்! மரங்களுக்கு நீர் ஊற்றுவதும் அவற்றை காப்பாற்றுவதும்தான் சிலரது வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றியிருக்கிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close