Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'உழவர் கண்ணீர் துடைக்க ரூ.20,000 கோடி ஒதுக்குக..!' - மத்திய அரசிடம் வலியுறுத்தும் அன்புமணி

''உழவர்களின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலை கொடுத்தால், அதைத் தவிர கூடுதலாக எந்தச் சலுகையும் வழங்கத் தேவையில்லை. அதற்கு ஆண்டுக்கு 20,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

அன்புமணி

பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறைவதற்கு முக்கியக் காரணம் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படுவது உள்ளிட்ட வேளாண்துறைக்கு வழங்கப்படும் சலுகைகள்தான் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த மத்திய அரசு முயல்கிறது. உழவர்களின் விளைபொருள்களுக்கு கட்டுப்படியாகும் விலை கொடுத்தால், அதைத் தவிர கூடுதலாக எந்த சலுகையும் வழங்கத் தேவையில்லை. ஆனால், எந்த அரசும் இந்த கோரிக்கையை நிறைவேற்றாததுதான் உழவர்களின் அவலநிலைக்கு காரணம். 

உழவர்களின் விளைபொருள்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் லாபம் சேர்த்து வழங்க வேண்டும் என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான குழு 2006-ம் ஆண்டு அறிக்கை அளித்தது. ஆனால், அதன்பின் 12 ஆண்டுகள் ஆகியும் அது நிறைவேற்றப்படவில்லை. ஆண்டுக்கு சுமார் ரூ.20 லட்சம் கோடிக்கு நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் மத்திய அரசுக்கு அதில் ஒரு விழுக்காட்டை உழவர்களுக்கு கூடுதல் விலை வழங்குவதற்காக ஒதுக்க மனம் வராதது வேதனை அளிக்கிறது. 

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததற்கு இணையாக உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல், கலால் வரியை உயர்த்தியதால் மட்டும் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது. அதில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு செய்தால் இந்தியாவில் உள்ள 60 கோடிக்கும் அதிகமான உழவர்கள் கண்ணியத்துடன் வாழ்வர். அதுமட்டுமல்ல, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு முன்பாக சேவை வரி மீது 0.5 சதவிகிதம் விவசாயிகள் நல வரி வசூலிக்கப்பட்டது. நடப்பாண்டில் ரூ.10,800 கோடி அளவுக்கு இந்த வரி வசூலிக்கப்படும் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்த பின்னர் இந்த வரி ரத்தாகிவிட்டது. அதற்குப் பதிலாக ஒட்டுமொத்த ஜிஎஸ்டி வரியில் அரை விழுக்காடு உழவர் நலனுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டால் அதன் மதிப்பு ரூ.25,000 கோடியைத் தாண்டும். இந்த நிதியை விளைபொருள்களுக்கு கூடுதல் விலை வழங்குவதற்கு ஒதுக்கினால் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,750, ஒரு டன் கரும்புக்கு ரூ.4,000 விலை வழங்க முடியும். இது உழவர்களின் வாழ்வில் துயரத்தைத் துரத்திவிடும். எனவே, விளைப்பொருள்களுக்கு உற்பத்திச் செலவுடன் 50 சதவிகிதம் லாபம் சேர்த்து கொள்முதல் விலை வழங்க அரசு முன்வர வேண்டும். உழவர் கண்ணீர் துடைக்க ஆண்டுக்கு ரூ.20,000 கோடி ஒதுக்க வேண்டும்''' என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close